Saturday 18 October 2014

தீபாவளி பண்டிகைக்கு பிறகு புதுவை அரசை அகற்ற மிகப்பெரிய போராட்டம்: கண்ணன் எம்.பி. அறிவிப்பு kannan mp announcement biggest struggle for the overthrow of the Government of Pondicherry

புதுச்சேரி, அக்.18

கண்ணன் எம்.பி. இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

புதுவையை பொறுத்த வரையில் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. அரசின் பல நிலைகளில் பணிபுரிகின்ற கூட்டுறவு துறை, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு நீண்டகாலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. சில தரப்பு ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் சம்பளம் வழங்கப்படவில்லை. இதுபற்றி ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

தனியார் நிறுவனங்களில் கூட சம்பளம் வழங்கா விட்டால் அந்த நிறுவனத்தை எதிர்த்து போராடும் நிலை உருவாகும். ஆனால் அரசை எதிர்த்து யாரும் கேட்பாரில்லை. புதுவையில் ஒரு அரசாங்கம் நடப்பதாகவே தெரியவில்லை. தங்கள் வேலை மட்டும் நடந்தால் போதும் என எல்லோரும் இருக்கிறார்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சில நிபந்தனைகளோடு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தேன். அதில் குறிப்பாக வெள்ளை அரிசி, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், குண்டர் தடுப்பு சட்டம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டேன். ஆனால் இப்போது மிகவும் குழப்பமான நிலை உள்ளது. அரிசியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. கோடிக்கணக்கான பணம் ஒரு நபருக்கு கைமாறி உள்ளது. ஏழைகளுக்கான முதல்வர், அமைச்சர் என கூறுபவர்கள் ஏழைகளின் பணத்தில் பணம் பார்க்கிறார்கள்.

கடந்த காலத்திலும் அரிசியில் ஊழல் நடந்தது. இதனை புதிதாக ஆட்சிக்கு வந்தவர், தான் ஆட்சிக்கு வந்ததும் சரி செய்வேன் என்று கூறினார். அப்போது 3 பேருக்கு போன தொகை இப்போது ஒருவருக்கு மட்டும் போகிறது. புதுவையில் ஊழல் ஏகபோகமாக நடக்கிறது. எந்த துறையை எடுத்து கொண்டாலும் ஊழல் மலிந்துள்ளது.

சட்டசபையில் அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்கலாம் என கூறுகிறார்கள். இலவச துணிக்கு பதிலாக பணம் கொடுக்கப்படுகிறது. அப்படியானால் இதில் எல்லாம் ஊழல் நடந்துள்ளது என ஆட்சியாளர்கள் ஒத்துக் கொள்கிறார்களா? பட்ஜெட் நிதியை மக்கள் தொகுதிக்கு ஏற்ப ரேசன் கார்டு மூலம் பிரித்து கொடுத்துவிட வேண்டியது தானே? எதற்கு திட்டம்?

எனக்கு ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் நாட்டை சுத்தமாக வைத்திருக்க உங்கள் தெருவையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருங்கள் என்று இருந்தது. ஒரு நாள் மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்து குப்பையை அகற்றினால் போதுமா? எங்கு பார்த்தாலும் குப்பை மேடுகள். இதனால் டாக்டர்களிடமும், மருந்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கடந்த சில நாட்களாக புதுவையில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. வீட்டை பூட்டிவிட்டு உள்ளே இருக்கவும் மக்கள் பயப்படுகிறார்கள். இதைபோல அறிவிக்கப்படாத மின்சார வெட்டும் உள்ளது. எப்போது மின்சாரம் வரும், எப்போது மின்சாரம் போகும் என்பதே தெரியவில்லை.

போக்குவரத்தை எடுத்து கொண்டால் சாலைகளில் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் ஆட்சியாளர்களுக்கு கவலையும் இல்லை, வருத்தமும் இல்லை. காங்கிரசார் போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே போராட்டம் நடத்துகிறார்கள். இந்த ஆட்சியை எதிர்த்து தீபாவளி பண்டிகைக்கு பிறகு எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். அந்த போராட்டம் அரசை திருத்தும் வகையிலோ அல்லது துரத்தும் வகையிலோ இருக்கும்.

அகில இந்திய காங்கிரஸ் எனக்கு அளித்த நோட்டீசுக்கு முறையாக பதில் அளித்துள்ளேன். தேர்தல் நடந்து 6 மாதங்களுக்கு பிறகு என்மீது புகார் கூறி உள்ளனர். இதனை கண்டுபிடிக்க 6 மாதம் ஆனதா? நான் காங்கிரஸ் கட்சியில் தொடருவது சிலருக்கு நெருடலாக உள்ளது. இவர்களால் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் தொண்டர்களும் உருப்பட மாட்டார்கள், காங்கிரஸ் கட்சி அழிந்துதான் போகும். இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு எனது அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மீண்டும் முதல் அமைச்சராவார். அவர் எந்நாளும் முதல்அமைச்சர் தான். இந்த நேரத்தில் அவரை சந்திப்பது அவசியம். அவர் அனுமதி அளித்தால் அவரை சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger