ராதிகா தயங்கியபடி வந்து சகுந்தலாவிடம் சொல்கிறாள்... "அம்மா, நான் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்...!"
அதைக் கேட்டு சகுந்தலா கொஞ்சம் கோபமடைந்தாலும், தன் பொறுப்பை உணர்ந்து, "யாரடி அந்த ரமேஷ்?" என்று கொஞ்சம் அக்கறையுடன் கேட்கிறாள்.
"அவர் எனக்கு அஞ்சு வருஷம் பழக்கம்மா. ரொம்ப நல்லவர். நேர்மையானவர். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பிக்கை இருக்கும்மா..'' தீர்க்கமாய் சொன்னாள் ராதிகா.
சகுந்தலா எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்தாள். சற்று யோசித்த ராதிகா, ''அம்மா! எனக்கு கல்யாணம் ஆகிட்டா, உங்களையும் அப்பாவையும் அம்போன்னு தவிக்கவிட்டுட்டுப் போய்டுவேன்னு மட்டும் நெனைக்காதீங்க. என்னைக்கும் உங்களுக்கு உதவியா இந்த வீட்ல இருப்பேன். இது சத்தியம்!"
இது சகுந்தலாவுக்கு சற்று தெம்பைக் கொடுத்தது. ''சரி... இப்ப நான் என்ன செய்யணும்?'' என்றாள்.
"பெருசா ஒண்ணுல்லம்மா, என் கல்யாண செலவுக்கு அப்பாகிட்ட பேசி ஐம்பதாயிரம் வாங்கிக் கொடுத்தா போதும்!"
"என்ன சொல்ற..? முழுசா ஐம்பதாயிரமா? ராதிகாவுக்கா? எந்த நம்பிக்கையில இதை கேட்கற சகுந்தலா?"
"என்னங்க பெரிய ஐம்பதாயிரம்..? அஞ்சு வருஷமா நம்மள அப்பா, அம்மான்னு கூப்பிட்டு நம்ம கூடவே வீட்டு வேலை செய்துட்டு இருக்கா. அவளை நம்பி ஐம்பதாயிரம் கடனா கொடுக்க முடியாதா..? மாசா மாசம் சம்பளத்துல கொஞ்சம், கொஞ்சமா கழிச்சுக்கிட்டா போச்சு!"
எதுவும் பேசாமல் 'செக் புக்'கை எடுத்தார் சகுந்தலாவின் கணவர்.
Keywords: ஒரு நிமிட கதை, ஐம்பதாயிரம்