எனக்கு வயதாகிவிட்டது. உயர் ரத்த அழுத்தத்தின் அளவு குறையமாட்டேன் என்கிறது. என்ன செய்யலாம்?
வயோதிகர்களுக்கு ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருப்பது இயல்பானதும் ஆரோக்கியமானதும் என்றே சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக, இதயச் சுருக்க அழுத்தம் உள்ளவர்களுக்கு 150 வரை ரத்த அழுத்தம் இருக்கலாம். இதற்கு மருந்து எடுக்க வேண்டிய அவசியமில்லை.
தீவிரச் சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து இருப்பவர்கள் என்னவிதமான பக்கவிளைவுகளை அதிகம் சந்திக்கின்றனர்?
தீவிரச் சிகிச்சைப் பிரிவில் நீண்ட நாட்கள் இருந்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு தர்க்க அறிவில் குறைபாடு ஏற்படும். மூன்றில் ஒருவருக்கு அல்சைமர் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இப்பிரச்சினை சீக்கிரம் தீரவும் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைஹீல்ஸ் செருப்புகள் மற்றும் ஷூக்களை அணிவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன?
உயர்குதிகால் செருப்புகளை அணிபவர்களின் உடல் எடை முன்னோக்கிச் சரிந்துவிடுகிறது. அதனால் கால்நுனியில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் உடல் முன்னோக்கி சரிகிறது. இதைச் சமன்படுத்த உடல் பின்னோக்கி வளைக்கப்படுகிறது. இதனால் உடல் நிரந்தரமாகப் பாதிக்கப்படும்.
கழுத்தை எந்த நிலையில் வைத்துப் புத்தகத்தை வாசிப்பது உடலுக்கு நல்லது?
தலையை உயர்த்தி வைத்து, நேராகப் படிக்க வேண்டும். இந்த நிலையில் உங்கள் தலை முதுகெலும்பின் மீது சரியானபடி இருக்கும். அதனால் கழுத்துத் தசைகளுக்குச் சிரமம் இருக்காது.
சத்துக்கான கால்சியம் கூடுதல் பொருட்களை எப்போது உட்கொள்வது ஆரோக்கியமானது?
சாப்பாட்டுடனோ, சாப்பாட்டுக்குக் கொஞ்சம் பிறகோ உட்கொண்டால் கால்சியம் உடலில் சேரும்.
கால்சியம் சத்துக்குப் பாலைத் தவிர்த்து எந்தெந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்?
சாளை மீன்கள் மிக அதிகக் கால்சியம் சத்தைக் கொண்டவை. எலும்புடன் கூடிய 3.5 அவுன்ஸ் சாளை மீன்களில், 351 மில்லிகிராம் எலும்புச்சத்து இருக்கும். ஒரு கோப்பை ஓட்சில் 215 மில்லிகிராம் கால்சியம் உண்டு. முள்ளங்கிக் கீரை, பட்டர் பீன்ஸ், அத்தி, பாதாம், பிராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம்.