முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தம் மீதான மரணதண்டனையினை சிறைத் தண்டனையாக மாற்றுமாறு விடுத்த வேண்டுகோளை இந்தியக் குடியரசுத் தலைவர் வெகுகாலம் தாண்டிய நிலையில் நிராகரித்துள்ளார் என்ற செய்தி, அதுவும் அவர்கள் சிறையிடப்பட்டு 20 ஆண்டுகள் தாண்டிய பின்னர் கருணை மனு கையளிக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்த பின்னர் இவ்வேண்டுகோளை நிராகரித்துள்ளார் என்ற செய்தி நம்மையெல்லாம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மரணதண்டனை மானிட தர்மத்துக்கு முரணானது. அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகிய வாழ்வுரிமைக்கு (right to live) எதிரானது.
இவ்விடத்தில் மரணதண்டனை அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதென்பதால் மரணதண்டனையானது அரசுகள் மேற்கொள்கின்ற படுகொலை என்றே கருதப்பட வேண்டுமென்ற அனைத்துலக மன்னிப்புச் சபையின் கூற்று மிகவும் அர்த்தம் பொதிந்தது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைத் தீர்மானமொன்று மரணதண்டனையைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டியதென அரசுகளைக் கோரியிருந்தமையும் இங்கே கவனத்துக்குரியது.
உலக நாடுகள் 193ல் இன்று மரணதண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டோ அல்லது நடைமுறைப்படுத்தப் படாமலோ இருப்பதென்பதும் 58 நாடுகளில் மட்டுமே மரணதண்டனை நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உலக அரங்கில் நீதி வழங்கப்படும் நடைமுறையிலிருந்து மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென உலகெங்குமிருந்து எழும் குரல்களோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னை இணைத்துக் கொள்வதுடன் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இம் மூவரது மரண தண்டனையினை சிறைத் தண்டனையாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மனிதாபிமான, சட்ட அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ளும்படி இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியல் சமூகத்தினையும் மரணதண்டனைக்கு எதிராகக் குரல்கொடுக்கும் அனைத்துலக சமூகத்தினையும் கோரி நிற்கிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு மிகவும் அரசியல் மயப்பட்ட நிலையில் நடற்தேறிய ஒரு வழக்கு. இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை என்றே முதன் முதலில் தீர்ப்பு வழங்கப்பட்டமை இவ் வழக்கின் அரசியல் தன்மையினை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது.
பின்னர் தமிழ் உணர்வாளர்களது ஆதரவுடன் உச்ச நீதிமன்றில் நடைபெற்ற சட்டப்போரின் விளைவாக இக் குற்றம் தடா சட்டத்துக்குட்பட்ட பயங்கரவாதக் குற்றமல்ல என்பது வெளிப்படுத்துப்பட்டதுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 19 பேருக்கு முழு விடுதலை அளிக்கப்பட்டு எஞ்சிய 7 பேரில் நால்வருக்கு அந்நேரம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவரான நளினியின் மரணதண்டனை மனிதாபிமான அடிப்படையில் ஏற்கெனவே சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டபோது ஏனைய மூவரின் மரணதண்டனையும் அவ்வாறு மாற்றப்படுமெனவே எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் தான் இந்திய உள்துறை அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மரணதண்டனையினை உறுதி செய்திருப்பது எமக்கெல்லாம் மிகவும் கவலையளிக்கிறது.
மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களின் குரலாக பேரறிவாளன் வெளிப்படுத்தியுள்ள கருத்து இந்திய மற்றும் தமிழ்நாட்டு மக்களதும் உலக சமுதாயத்தினதும் மிகுந்த கவனத்துக்குரியது. 'நாம் கோருவதெல்லாம் உயிர்ப்பிச்சையல்ல. மறுக்கப்பட்ட நீதியினையே' என அவர் மிகத் தெளிவாகத் தமது உரிமைக் குரலை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ் விடயத்தில் மூன்று தளங்களில் இவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். வெகுவாக அரசியல் மயப்பட்ட நிலையில் இவ் வழக்கு நடைபெற்றமை இவ் வழக்கில் இவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்தது. இது இவர்களுக்கான நீதி மறுக்கப்பட்ட முதலாவது தளம் ஆகும்.
தடா சட்டத்தின் கீழ் இவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டமை இரண்டாவது தளமாகும்.
இதேவளை 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு – ஒரு ஆயுட்தண்டனைக் காலத்துக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து விட்ட இவர்களுக்கு - இவ்வளவு காலம் தாழ்த்தி மரணதண்டனையினை உறுதி செய்துள்ளது நீதி மறுக்கப்படும் மூன்றாவது தளம் ஆகும்.
இவ்வாறு மிகவும் காலம் தாழ்த்தி மரண தண்டனையினை நடைமுறைப்படுத்துவது மனித உயிரினை இழிமைப்படுத்தும் செயலெனவும் நீண்ட சிறைப்படுத்தலின் பின்னர் ஒருவரைத் தூக்கிலிடுவது அருவருக்கத்தக்க செயலெனவும் பிரித்தானிய பிரிவி கௌன்ஸில் 1993ல் தீர்ப்பளித்தது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.
இத்தகையதொரு பின்புலத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையினை ரத்துச் செய்யும் வகையில் இந்திய உள்துறை அமைச்சகம் தமது பரிந்துரையினை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மீள வழங்க வேண்டும் என நாம் இந்திய அரசைக் கோருகிறோம்.
ஈழத் தமிழ் மக்கள் மீது முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு இந்திய அரசும் துணைநின்றது என்ற ஆழ்ந்ததொரு துயரும் காயமும் தமிழீழம், தமிழ்நாடு முதற்கொண்டு அனைத்து உலகத் தமிழ் மக்கள் மத்தியிலும் உண்டு.
இதனைக் கவனத்திற் கொண்டும் ஏற்கெனவே நொந்து போயிருக்கும் மக்களின் மனஉணர்வுகளுக்கு மதிப்பளித்தும் இம் மூவருக்குமான மரணதண்டனையினை ரத்துச் செய்யும் முடிவினை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகிறோம்.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 ன் கீழ் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில் தமிழக ஆளுனராலும் மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கான பரிந்துரையினை வழங்க முடியும்.
உலகத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைக்குரலையும் பிரதிபலித்து நிற்கும் தமிழக முதலமைச்சர் இவ் விடயத்தில் தலையிட்டு மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரி நிற்கிறோம்.
இவற்றை விட மரணதண்டனையினை நிறைவேற்றுவதற்கு எதிரான தடை உத்தரவினை நீதிமன்றத்தின் ஊடாக பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினை வழங்கி நிற்கிறது.
மரணதண்டனைக்கெதிராக உலகில் செயற்படும் மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தினை இவ் விடயம் நோக்கித் திருப்பி இம் மரண தண்டனைகளுக்கெதிரான அனைத்துலக உணர்வலைகளைத் தட்டியெழுப்புவதற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத் தமிழ் மக்களது ஆதரவோடு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இம் மரணதண்டனைகளுக்கெதிராக இந்திய தமிழ்நாடு அரசுகளுக்கும் மனிதஉரிமை அமைப்புக்களுக்கும் தமது உணர்வுகளை உடனடியாக வெளிப்படுத்துமாறு உலகத் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கிறது.
நன்றி
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
http://video-news-tamil.blogspot.com
http://video-news-tamil.blogspot.com