சாம்பார் என்றதும் நம் நினைவுக்கு வருவது,இரண்டு செய்திகள்.
ஒன்று தமிழ்நாட்டின் முக்கிய உணவான சாம்பார்.
மற்றொன்று ஜெமினி கணேசன்!
அவர் ஏன் சாம்பார் என்றழைக்கப்பட்டார் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது.
இப்பதிவு ஜெமினி கணேசன் பற்றியதல்ல.
உண்மையான அசல் சாம்பார் பற்றியது.
நானூறு ஆண்டுகளுக்கு முன்தான் மிளகாய் என்பது இந்தியாவுக்கு அறிமுகமாயிற்று. தக்காளி,உருளைக் கிழங்கு,வெங்காயம் ஆகியவையும், வெள்ளையர்களால் இங்கு கொண்டு வரப் பட்டவையே!
எனவே நியாயமாக நமக்கு உடன் எழும் சந்தேகம்"அதற்கு முன் தமிழ்நாட்டில் சாம்பார் எப்படித்தயாரிக்கப் பட்டது?வடநாட்டில்,தக்காளியும்,வெங்காயமும் இல்லாமல் சப்பாத்திக்குப் பக்க வாத்தியமான சப்ஜிகள் எப்படிச் செய்தார்கள்?"
ஆனால் 400 ஆண்டுகளுக்கு முன்பே,தென்னாட்டில் புளி பயன்படுத்தப்பட்டது. அப்போதும் அவர்கள் குழம்பு செய்திருக்க வேண்டும்.ஆனால் மிளகாய் இல்லாததால் மிளகு உபயோகப் படுத்தப் பட்டிருக்க வேண்டும்.கேரளாவின் மிளகூட்டலும், தமிழகத்தின் பொரித்த குழம்பும், புளி,மிளகாய் இல்லாமல்,மிளகு,சீரகம் மட்டும் கொண்டு தயாரிக்கப் படுபவையே.
இந்த சாம்பார் என்பது எப்போது எப்படி வந்தது?
இது பற்றிய ஒரு தகவல்--
"தஞ்சை மண் முன்பு மராத்தியர்களால் ஆளப்பட்டது.அவர்களில் ஒரு அரசனான, சம்போஜி சமையலில் வித்தகர்(பீமன்,நளன் போல்!)
ஒரு நாள் அவர் தனது பிரிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.ஆம்தி என்று அழைக்கப்படும் குழம்பு போன்ற ஒரு பதார்த்தம்.புளிக்குப் பதிலாக 'கொகும் ' என ஒரு பொருளை-மராத்தா பகுதியில் கிடைப்பது- உபயோகிப்பார்கள்.ஆனால் அன்று மராத்தாவிலிருந்து கொகும் வந்து சேரவில்லை .அதை எப்படி ராஜாவிடம் சொல்வது என எல்லோரும் பயந்து கொண்டிருந்தனர்.ராஜாவின் விதூஷகர் அவரிடம் அங்கு புளி என்று ஒன்று கிடைக்கும் அதை உபயோகிக்கலாம் என்று சொல்ல,அன்று சம்போஜி, துவரம் பருப்பு,காய்கள்,மிளகாய் ,புளி உபயோகித்துச் செய்த குழம்பு எல்லோருக்கும் மிகவும் பிடித்து விட்டது.சம்போஜி செய்த அந்த உணவுதான் சாம்பார் எனப் பின்னாளில் வழங்கப்பட்டது!
வெங்காய சாம்பார் என்றாலே நாக்கில் நீர் ஊறும்!
அதைச் சுவையாகச் செய்வதெப்படி?
இதோ திருமதி
ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் செய்முறை---
தேவையான பொருள்கள்:
சின்ன வெங்காயம் – 25
புளி – சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி – 2
துவரம் பருப்பு – 1/2 கப்
சாம்பார்ப் பொடி - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம் – 6
தனியா – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
தாளிக்க:
எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை
செய்முறை:
• துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ள்வும்.
• புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
• மசாலா சாமான்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
• வாணலியில் எண்ணையச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அத்துடன் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை வதக்கிக் கொள்ள வேண்டும்.
• வெங்காயம் வதங்கியதும், தக்காளித் துண்டுகள், புளிக் கரைசல், உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
• கொதிக்கத் தொடங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும்.
• இறுதியில் வேகவைத்த துவரம்பருப்பைச் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
• இந்தச் சாம்பாருக்கு மணத்தையும் சுவையையும் தருவதில் மசாலாவில் அரைத்துவிடும் சின்னவெங்காயம், கொத்தமல்லித் தழையின் பங்குதான் மிக முக்கியமானது. ஹோட்டல் சாம்பாரின் சுவையை அதுவே தருகிறது. எனவே சாம்பாருக்கு சின்ன வெங்காயம் உரிக்க நேரமில்லாவிட்டாலும், அதற்குப் பதில் பெரிய வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில அரிந்துபோட்டு, மசாலாவிற்கு மட்டும் 4,5 சின்ன வெங்காயம் உபயோகித்தாலே ஓரளவு சுவையைக் கொண்டுவந்து விடலாம்.
நன்றி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்!
சாம்பார் மணக்கிறதா?!
•
http://photo-actress-hot.blogspot.com
http://photo-actress-hot.blogspot.com