Img இன்று சுனாமி நினைவு தினம்: மாயமான 3 மகள்களை 10 ஆண்டுகளாக தேடும் தாயின் பரிதாபம் Today Memorial Day tsunami missing 3 daughters 10 year old mother of looking searching
ஆலந்தூர்,டிச.26-
கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந்தேதி தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்து, 10–ம் ஆண்டு தொடங்குகிறது.
இந்த சுனாமிக்கு தனது கணவரின் உயிரை பறிகொடுத்து விட்டு அன்று முதல் மாயமான 3 மகள்களையும் கடந்த 10 ஆண்டுகளாக தேடி வரும் ஒரு தாயின் நிலைமையை நினைத்து பார்க்க பரிதாபமாக உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–
சென்னையை அடுத்த தாம்பரம் பெருங்களத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் செண்பகவள்ளி (வயது 50). இவர், இதற்கு முன்பு ஆவடியை அடுத்த வேப்பம்பட்டில் குடியிருந்து வந்தார். அப்போது அவருடைய கணவர் கோவிந்தசாமி மற்றும் மகள்கள் குமுதா(17), அனுசியா(16), கவிதா(13) ஆகியோர் கடந்த 2004–ம் ஆண்டு சுற்றுலாவாக கன்னியாகுமரிக்கு சென்றனர்.
அங்கிருந்து டிசம்பர் மாதம் 25–ந்தேதி வேளாங்கண்ணிக்கு சென்றனர். அங்கு மறுநாள் (26–ந்தேதி) ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கினார்கள். இதில் மீட்பு குழுவினர் கோவிந்தசாமியை மட்டும் காயங்களுடன் நாகப்பட்டினத்தில் மீட்டனர். பின்னர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்தசாமிக்கு நினைவு திரும்பியது.
அப்போது அவர், தனது மனைவியிடம், ''நமது மகள்கள் 3 பேரும் சுனாமியில் சிக்கவில்லை. அவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். அவர்களை கண்டுபிடி'' என்று கூறி விட்டு பரிதாபமாக இறந்துவிட்டார். தற்போது செண்பகவள்ளி, சுனாமியில் கணவரை இழந்து, மகள்களையும் தொலைத்து விட்டு பெருங்களத்தூரில் தனிமையில் வசித்து வருகிறார்.
வருமானத்துக்கு தாம்பரம் மெப்சில் உள்ள ஒரு கேண்டினில் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் சுனாமியின் போது மாயமான தனது மகள்களையும் தீவிரமாக தேடி வருகிறார். இதற்காக சுனாமியில் இறந்தவர்கள் மற்றும் அதில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து அதில் தனது மகள்கள் இருக்கிறார்களா? என தேடி வருகிறார்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தேடியும் இன்னும் அவரது மகள்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது? என்றும் தெரியவில்லை. இதுபற்றி செண்பகவள்ளி, கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறும்போது,
''கடந்த 2004–ம் ஆண்டு சுனாமியில் சிக்கிய எனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என்னிடம் மகள்கள் சாகவில்லை. அவர்களை கண்டுபிடி என்று கூறி விட்டு இறந்து விட்டார்.
நானும் கடந்த 10 ஆண்டுகளாக எனது மகள் 3 பேரையும் தேடி வருகிறேன். அவர்கள் உயிருடன் தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் எப்படியும் அவர்களை கண்டுபிடித்துவிடுவேன்'' என உறுதியுடன் தெரிவித்தார்.
''அந்த தாயின் நம்பிக்கை வீண் போகாமல், கணவரை இழந்து தவிக்கும் அவருக்கு ஆறுதலாக அவரின் 3 மகள்களையுமாவது அவருடன் சேர்க்க கடவுள் வழி செய்யட்டும்'' என வேண்டியபடி அந்த பகுதி மக்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
...