இந்தியாவில் அதிக பணவீக்க விகிதத்தால் நாளுக்குநாள் விலைவாசி அதிகரித்து மக்களை திணறடித்து வருகிறது. ஆனால் உலகின் மிகக்குறைவான செலவாகும் நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் மும்பையும், தில்லியும் இடம்பெற்றுள்ளன.
பொருளாதார புலனாய்வுப் பிரிவு இதுதொடர்பாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் மும்பை 2-வது இடத்தையும், தில்லி 4-வது இடத்தையும் பெற்றுள்ளது.
உலக அளவில் மிகவும் செலவு குறைந்த நகரம் பாகிஸ்தானின் கராச்சி நகரமாகும். ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரம்தான் உலகிலேயே மிக அதிக செலவாகும் நகரம் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பணவீக்க விகிதம்தான் அரசுக்கும், பொதுமக்களுக்கும் கவலைக்குரிய விவகாரமாக இருந்து வருகிறது. எனினும் சமீபகாலமாக பணவீக்க விகிதம் சிறிதளவு குறைந்து வருகிறது.
2011 டிசம்பரில் 7.47 சதவீதமாக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2012 ஜனவரியில் 6.55 சதவீதமாகக் குறைந்தது. பணவீக்க விகிதம் குறைந்தாலும், விலைவாசி விகிதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
பொருளாதார புலனாய்வுப் பிரிவு எடுத்த ஆய்வின்படி உலகின் 4 செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் இடம்பெற்ற கராச்சி, மும்பை, தில்லி ஆகியவை இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு நகரம் தெஹ்ரான்.
இந்த 4 நகரங்களும் கடந்த ஆண்டும் இதே இடத்தைப் பெற்றிருந்தன.
எனினும் உலகின் அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் டோக்கியோவை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜூரிச் நகரம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அடுத்தபடியாக டோக்கியோ, ஜெனிவா, ஓசாகா கோபே, ஓஸ்லோ, பாரிஸ், சிட்னி, மெல்போர்ன், சிங்கப்பூர் மற்றும் ஃபிராங்பர்ட் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
400 பொருட்களின் விலைகளைக் கொண்டு இந்த ஆய்வை பொருளாதார புலனாய்வுப் பிரிவு நடத்தியது. அந்த பொருட்களில் உணவு, தண்ணீர், ஆடைகள், வீட்டுச்சாமான்கள் மற்றும் வாடகை, போக்குவரத்து, தனியார் பள்ளிக் கட்டணங்கள் உள்ளிட்டவை அடங்கும்.