ஆட்டோ கட்டணம் அதிரடியாக குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி auto fare decrease passenger happy
26 Aug 13 02:06:05 AM by Tamil | Tags : தினசரி செய்திகள் , Daily News | 6 views | 0 comments
சென்னை, ஆக 26–
சென்னையில் பொது மக்களின் போக்குவரத்து வசதிக்கு பெரும் பங்காற்றுவது ஆட்டோக்கள் என்றால் அது மிகையாகாது. தமிழகம் முழுவதும் ஓடும் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்களில், சென்னையில் மட்டும் 71 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களில் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் பரவலாக குற்றம் சாட்டி வந்தனர்.
இக்கட்டணம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் ஆட்டோ கட்டணம் தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து சென்னையில் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்து நேற்று காலையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதன்படி முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.25 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும் 12 ரூபாய் கட்டணமாக வசூலிக்கலாம் என்றும், முடிவு செய்யப்பட்டுள்ளது.
காத்திருக்கும் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 3 ரூபாய் 50 காசு (ஒரு மணி நேரத்துக்கு ரூ.42) என்றும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இக்கட்டணம் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். (குளோபல் பொசிசனிங் சிஸ்டம்) கருவி பொறுத்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறிப்பிட்ட ஆட்டோ எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை எளிதாக கண்டு பிடித்து விடலாம். எலக்ட்ரானிக் டிஜிட்டல் பிரிண்டருடன் கூடிய மீட்டரை ரூ.80 கோடி செலவில் சென்னையில் ஓடும் அனைத்து ஆட்டோக்களிலும் பொறுத்தவும் அரசு முடிவெடுத்துள்ளது.
பாதுகாப்பாக பயணிக்க அலாரம் கருவியை ஆட்டோக்களில் பொறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுகளை கடை பிடிக்காத ஆட்டோ டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முறைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆட்டோ கட்டணத்தால் சென்னையில் ஆட்டோ கட்டணம் பாதியாக குறைந்துள்ளது. உதாரணத்துக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து வட சென்னை பகுதியான கொடுங்கையூருக்கு (11 கிலோ மீட்டர்) செல்வதற்கு சர்வ சாதாரணமாக ஆட்டோ டிரைவர்கள் 300 ரூபாய் கேட்பார்கள். அவர்களிடம் பேரம் பேசினால் 250 ரூபாய்க்கு சம்மதிப்பார்கள். பின்னர் வீட்டில் கொண்டு இறக்கி விட்டதும் ‘‘என்ன சார்... இவ்வளவு தூரம் வந்துடீங்களே, கூடுதலாக 30 ரூபாய் போட்டு தாங்க சார்’’ என்று கேட்டு வாங்கிக்கொள்வார்கள். ஆனால் இனி இந்த கட்டணம் பாதியாக குறையும். 11 கி.மீ. தூரத்துக்கு எழும்பூர்– கொடுங்கையூர்), வில்லிவாக்கம்– தி.நகர்), (சென்டிரல்– அடையார்) ரூ.133 மட்டும் கொடுத்தால் போதும்.
இதே போல் பெரம்பூரில் இருந்து சென்ட்டிரல் செல்ல (7 கி.மீட்டர்), தியாகராயநகரில் இருந்து வடபழனி செல்ல ரூ.60 (5 கி.மீ), எழும்பூரில் இருந்து தி.நகர் செல்ல ரூ.73 (6 கி.மீ), ஆகியவை மட்டும் கொடுத்தால் போதுமானதாகும்.
சென்னையில் ஆட்டோ பயணம் பெண்களுக்கு பல நேரங்களில் ஆபத்தானதாகவே இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட கோயம்பேட்டில் இருந்து மாதவரம் நோக்கி ஆட்டோவில் சென்ற பெண் நகைக்காக படுகொலை செய்யப்பட்டார். இதே போல ஆட்டோக்களால் பல குற்றச் செயல்களும் நடைபெற்று வந்துள்ளன.
ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் செய்யும் இது போன்ற தவறுகளால் ‘‘ஆட்டோ பயணம் ஆபத்தானதோ’’ என்ற எண்ணம் பொதுவாக அனைவரது மனதிலும் இருந்து வந்தது. அலாரம் பொறுத்துவதால் பொது மக்கள் இனி அச்சமின்றி பயணிக்கலாம். நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆட்டோ கட்டணமும், ஆட்டோக்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு வசதிகளும் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.