Img
பீஜிங், நவ. 30-
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள 'பப்'பில் வேலை செய்பவர், ஜோ பின். இம்மாதத்தின் முதல் வாரம் இயாங் என்ற இடத்தில் இருந்து சங்சா பகுதிக்கு "ஷேர் டாக்சி"யில் சென்றார்.
அவருடன் பயணித்த ஒரு பலே கில்லாடி, ஜோ பின்னின் பாக்கெட்டில் இருந்த நவீனரக "ஐபோனை" நைசாக உருவிக் கொண்டு கம்பி நீட்டி விட்டான். போனை பறிகொடுத்த ஜோ பின்னின் அனைத்து தொடர்புகளும் அந்த போனில் இருந்ததால் அவருக்கு கை உடைந்தது போல் ஆகி விட்டது.
உடனடியாக, திருடனுக்கு ஒரு "மெஸேஜ்" அனுப்பினார். உன் முகம் எனக்கு நினைவிருக்கிறது. நீ எங்கே போனாலும் விட மாட்டேன். என்னுடைய தொடர்பு நம்பர்களை எல்லாம் பார்... என் தொடர்புகளும் செல்வாக்கும் உனக்கு புரியும்.
மரியாதையா இந்த அட்ரசுக்கு போனை அனுப்பி வை.. இல்லேன்னா...நடக்கிறதே வேற... என்று மெஸேஜ் மூலம் மிரட்டி பார்த்தார்.
சில நாட்களில், அவருக்கு ஒரு பெரிய கொரியர் வந்தது. பிரித்துப் பார்த்த ஜோ பின் திகைத்துப் போனார்.
ஐபோனில் இருந்த சுமார் ஆயிரம் தொடர்பு எண்களை அந்த "உத்தம திருடன்" 11 பக்கங்களில் தன் கைப்பட எழுதியனுப்பி இருந்தான்.
இந்த விசித்திர திருடனுக்காக தற்போது பரிதாபப்படும் ஜோ பின்", வெறும் ஒன்றில் இருந்து ஆயிரம் வரை எழுதுவதற்குள் நமக்கெல்லாம் கை சலித்துப் போய் விடும். ஆனால், இவன் சுமார் ஆயிரம் பெயர்களையும், அவர்களின் போன் நம்பர்களையும் எப்படிதான் எழுதினானோ..?
பிக் பாக்கெட்களில் இவன் "தொழில் தர்மத்தை" கடைபிடிப்பவன் போல் இருக்கிறது" என்று கூறியபடி சிரிக்கிறார்.
...