சென்னை தி.நகரில் உள்ள 61 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பெரும் கவலையுடன் கடைகளுக்கு முன்பு கூடி நிற்கின்றனர்.
சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பெருமளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை.
இன்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை, ரத்னா ஸ்டோர்ஸின் 3 கடைகள், காதிம்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 61 வர்த்தக நிறுவனங்களைப் பூட்டி சீல் வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீல் வைக்கும் பணிக்காக பெருமளவில் போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
ஏன் சீல்?
முறையான கட்டட வரைபட அனுமதி இல்லாமல் கட்டியது, பார்க்கிங் வசதி செய்யப்படாதது, தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியில்லாத இடங்களில் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டியது, பல்வேறு விதிமுறை மீ்றல்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகளும் பெருமளவில் தொடரப்பட்டிருந்தன.
பல்வேறு நோட்டீஸ்களுக்குப் பிறகும் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுக்கவில்லை என்பதால் தற்போது சீல் வைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவே சீல் வைக்கும் நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் மக்களுக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக காத்திருந்து இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(tt)
Filed under: Hot News Tagged: இந்திய அரசியல், சமூக பிரச்சனைகள், தமிழ்நாடு செய்திகள்