Img எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்: அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை SSLC will start at 10 am State Assembly Members Request
சென்னை, ஜன.8-
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை காலை 9-15 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவுக்கு ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9-ந்தேதி முடிவடைகிறது. தேர்வுகள் காலை 10 மணிக்கு பதிலாக இந்த வருடம் முதல் முதலாக காலை 9-15 மணிக்கு தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர்(இந்திய கம்யூனிஸ்டு) பி.எல்.சுந்தரம் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு காலை 9-15 மணிக்கு தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நேர மாற்றம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் என கருதுகிறேன்.
தேர்வு நேரம் எஸ்.எஸ்.எல்.சி.க்கு மட்டும்தான் மாற்றப்பட்டுள்ளது. இதுபொருத்தமானதாக இல்லை என நினைக்கிறேன்.
மாணவ-மாணவிகள் காலை 9-15 மணிக்கு தேர்வுக்கு வர அதிகாலையில் எழுந்து புறப்பட தயாராக வேண்டி உள்ளது. அதனால் மாணவர்களுக்கு படிப்பதற்கான காலம் குறைவதோடு பதற்றத்திற்கும் ஆளாவார்கள்.
ஆகவே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வின் நேர மாற்றத்தை திரும்ப பெற்று ஏற்கனவே இருந்தபடி காலை 10 மணிக்கு தேர்வினை தொடங்க உத்தரவிட வேண்டுகிறேன்.
இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
...