Img சென்னை ரெயிலில் ஜெர்மனி ஆசிரியைக்கு 'செக்ஸ்' தொல்லை: பீகார் வாலிபர் கைது Chennai train to Germany teacher molested harassment
சென்னை, ஜன. 15–
மங்களூரில் இருந்து சென்னை வந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெளி நாட்டை சேர்ந்த இளம் ஆசிரியைக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்த வாலிபர் சிக்கினார்.
அதுபற்றிய விவரம் வருமாறு:–
ஜெர்மனியை சேர்ந்தவர் சுரேகா (20) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). கர்நாடக மாநிலம் உடுப்பியில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் சுரேகா, சென்னையில் உள்ள தனது தோழி ஒருவரை பார்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்தார். தூங்கும் வசதி கொண்ட 2–வது வகுப்பு பெட்டியில் சுரேகாவுக்கு அமர்ந்தபடியே பயணம் செய்யும் வசதி (ஆர்.ஏ.சி.) கிடைத்தது. இவருக்கு எதிரில் பீகாரை சேர்ந்த சந்தன்குமார் (22) என்ற வாலிபர் அமர்ந்திருந்தார்.
இரவு 10 மணிக்கு பின்னர் 2 இருக்கைகளையும் ஒன்றாக்கி 'பெர்த்' ஆக மாற்றிய சுரேகா, அதில் படுத்து தூங்கினார். அதே படுக்கையில் சந்தன்குமாரும் ஓரமாக படுத்திருந்தார்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தன்குமார், திடீரென சுரேகாவை கட்டிப் பிடித்து 'செக்ஸ்' தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை தட்டிக் கேட்டு கூச்சல் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினால் சந்தன்குமார் தப்பி விடுவார் என்று சுரேகா கருதினார்.
இதனால் அமைதியாக இருந்த அவர் ரெயில் சென்னை வந்ததும் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சந்தன்குமார் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் சந்தன் குமார் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கடந்த 10–ந்தேதி அன்று நள்ளிரவில் சந்தன் குமார், ஜெர்மனியை சேர்ந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார். மறுநாள் (11–ந்தேதி) அதிகாலையில் அப் பெண் எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ரெயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பயணிகள் புகார் தெரிவிப்பதற்காக 9962500500 என்ற அவர உதவி செல்போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஏராளமான புகார்கள் வருகின்றன. ஒவ்வொரு நாளும் 500–க்கும் மேற்பட்ட பயணிகள் போன் செய்து ரெயில் பெட்டிகளில் நடைபெறும் முறைகேடான சம்பவங்கள் பற்றி புகார் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
தனியாக பயணம் செய்யும் பெண்களிடம் அத்து மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அவசர உதவி எண் ரெயில் டிக்கெட்டிலும் அச்சிடப்பட்டு வருகிறது. 24 மணி நேர சேவை கொண்ட இந்த செல்போன் எண்ணில் எப்போது வேண்டுமானாலும் பயணிகள் உதவிக்கு அழைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
...