Friday 7 November 2014

வைகுண்டராஜன் கைதாகும் சூழ்நிலை V.V. Mineral director Vaikundarajan

- 0 comments


தூத்துக்குடி துறைமுகக் கழக முன்னாள் தலைவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது தாதுமணல் ஏற்றுமதி தொழிலதிபர் வைகுண்டராஜன், மற்றும் ஜெகதீசன் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி துறைமுகக் கழக முன்னாள் தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஏ.சுப்பையா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.8.23 கோடி சொத்து குவித்ததாக சிபிஐ போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கில் விவி மினரல்ஸ் பங்குதாரர்கள் வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோர் 6, 7-வது எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். 

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன், சிபிஐ ஆய்வாளரின் பதில் மனுவைத் தாக்கல் செய்தார் அதில், "தூத்துக்குடி துறைமுகக் கழக முன்னாள் தலைவர் ஏ.சுப்பையா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ போலீஸார் 2012 டிச. 24-ல் வழக்கு பதிவு செய்தனர். இவர் 2007 முதல் 2012 வரை துறைமுகக் கழக தலைவராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8.23 கோடி சொத்து சேர்த்துள்ளார்.

சுப்பையா மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததில் விவி மினரல்ஸ் பங்குதாரர்கள் வைகுண்டராஜன், அவரது தம்பி ஜெகதீசன் ஆகியோருக்கும் பங்கு உண்டு. சுப்பையாவின் தாயார் ஜானகி, சகோதரர் ஜெயராமன் ஆகியோருக்கு காஞ்சிபுரம் தனியார் வங்கி கிளையில் உள்ள கணக்கில் வைகுண்டராஜன், ஜெகதீசன் இருவரும் 2008 நவம்பர் முதல் 2011 நவம்பர் வரை ரூ.7.5 கோடி செலுத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் துறைமுகத்தில் தொழில் நடத்தி வருகின்றனர். அப்போது சுப்பையா துறைமுகக் கழக தலைவராக இருந்துள்ளார்.

இந்த பணத்தை விருதுநகர் மாவட்டம் கரிசல்குளம் கிராமத்தில் ஜானகி, ஜெயராமன் ஆகியோர் பெயரிலுள்ள சொத்தை வாங்குவதற்கு கொடுத்ததாக இருவரும் கூறியுள்ளனர். ஆனால், கரிசல்குளத்தில் சொத்தின் மதிப்பு ரூ.7.5 கோடி அளவுக்கு இல்லை. லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதற்காக சொத்தின் மதிப்பை அதிகமாக காட்டி வங்கி பரிவர்த்தனை மூலம் லஞ்சப் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளனர்.

பின்னர், சம்பந்தப்பட்ட சொத்தை வாங்கியதில் இரு தரப்பிலும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அவர்களாகவே தீர்ப்பாயம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த தீர்ப்பாயத்தில் பிரச்சினையை பேசி, சொத்து வாங்கியதற்காக கொடுத்த பணம் ரூ.7.5 கோடியை திரும்ப பெற்றதாகவும் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர். லஞ்சமாக பணம் கொடுத்ததை மறைக்க இவ்வாறு மோசடி செய்துள்ளனர்.

இதனால் வைகுண்டராஜன், ஜெகதீசன் இருவரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் தாங்கள் நேர்மையாக செயல் பட்டதாகக் கூறிக்கொண்டு லஞ்சம் கொடுத்துள்ளனர். இருவருக்கும் எதிராக முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளது. இருவரும் செல்வாக்கு மிக்கவர்கள். முன்ஜாமீன் வழங்கினால் ஆவணங்கள், ஆதாரங்களை அழிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது" எனக் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை இன்று நீதிபதி சொக்கலிங்கம் தள்ளுபடி செய்தார்.

Keywords: வைகுண்டராஜன், முன் ஜாமீன் மனு தள்ளுபடி, தாதுமணல், மதுரை, உயர் நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கு

[Continue reading...]

வக்கார் பந்தில் வாங்கிய அடி - சச்சின் சுயசரிதை Sachin Playhing It My Way

- 0 comments


தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் முதல் டெஸ்ட் போட்டித் தொடரில் ஆடிய சச்சின் டெண்டுல்கர் இந்தியா-பாகிஸ்தான் தொடர் என்றால் என்ன என்பதை அறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அவரது சுயசரிதை நூலில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்தத் தொடரில் தாடி வைத்த பாகிஸ்தானியர் ஒருவர் மைதானத்தில் இறங்கி கபில்தேவ், கேப்டன் ஸ்ரீகாந்த், மனோஜ் பிரபாகர் ஆகியோரை வசைபாடியது பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும் வக்கார் யூனிஸ் பந்தில் மூக்கில் அடிபட்ட தருணம் எப்படிப்பட்டது என்பதையும் வர்ணித்துள்ளார்.

இனி சச்சின்...

"அது ஒரு அக்னி பரிட்சை. வாசிம், வக்கார் பந்து வீச்சிற்கு எதிராக நான் ஒன்றும் புரியாமல் இருந்த சமயம். நான் எனது பேட்டிங் திறமையை சந்தேகித்தேன், சர்வதேச தரத்திற்கு என்னால் உயரமுடியுமா என்ற சந்தேகம் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது.

என்னுடைய அறிமுகப் போட்டியின் முக்கியத்துவம் என்னவெனில் பாகிஸ்தானில் அவர்களது சிறந்த பந்து வீச்சாளர்களான இம்ரான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அகிப் ஜாவேத், அப்துல் காதிர் ஆகியோரை எதிர்கொண்டதே. 

எனது அறிமுக டெஸ்ட் போட்டியில் வாசிம் அக்ரம் வீசிய ஓவரின் 3வது பந்தில் நான் ஸ்ட்ரைக்கிற்கு வந்தேன். அது ஒரு பயங்கர பவுன்சர். வாசிம் அக்ரம் பந்து வீச்சை ஓரளவுக்குக் கணித்திருந்த நான் அடுத்த பந்து பயங்கர யார்க்கராக இருக்கலாம் என்று நினைத்தேன். அதற்குத் தயாராகவும் இருந்தேன். ஆனால் அந்த ஓவர் முழுதையும் பவுன்சர்களாகவே வீசினார் வாசிம்" என்று எழுதியுள்ளார் சச்சின்.

சியால்கோட் டெஸ்ட் போட்டியில் வக்கார் யூனிஸ் பவுன்சரில் அடி வாங்கியது பற்றி அவர் எழுதுகையில், "வக்கார் பந்து வீச வந்த போது நான் ஒரு ரன் எடுத்திருந்தேன். வக்கார் ஒரு ஷாட் பிட்ச் பந்தை வீசினார். நான் பந்தின் பவுன்சை தவறாகக் கணித்தேன். நான் எதிர்பார்த்ததை விட 6 அங்குலம் அதிகமாக பந்து எழும்பியது. அது ஹெல்மெட்டின் முனையில் பட்டு என் மூக்கைப் பதம் பார்த்தது.

என்னுடைய பார்வை மங்கத் தொடங்கியது. எனது தலை கனக்கத் தொடங்கியது. அடிபட்டவுடன் எனது உடனடி எதிர்வினை பந்து எங்கு சென்றது என்பதைப் பார்ப்பதாகவே இருந்தது. அதன் பிறகுதான் கவனித்தேன் மூக்கிலிருந்து ரத்தம் சட்டையில் வழிந்திருந்தது. 

அடிபட்டதிலிருந்து மெதுவே மீள நினைத்த போது ஜாவேத் மியாண்டட் கூறிய கமெண்ட் என்னை ஆச்சரியப்படுத்தியது, "நீ மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், உன் மூக்கு உடைந்து விட்டது" என்றார். எனது இந்த நிலையில் என்னைப் பற்றி பார்வையாளர்கள் வைத்திருந்த பேனர் என்னை மேலும் அசவுகரியப்படுத்தியது. "குழந்தை! நீ வீட்டுக்கு போய் பால் குடி" என்று அந்த பேனரில் எழுதியிருந்தது" என்று நினைவு கூர்ந்துள்ளார் சச்சின்.

அதன் பிறகுதான் அவரை திடுக்கிட வைத்த சம்பவம் பற்றி அவர் எழுதியுள்ளார்:

சர்வதேச கிரிக்கெட்டில் எனது முதல் நாளில் நாடகத்திற்குக் குறைவில்லை. குறிப்பாக ஒரு சம்பவம் என்னை சங்கடப்படுத்தியது. உணவு இடைவேளைக்குப் பிறகு தாடி வைத்துக் கொண்டு சல்வார் கமீஸில் மைதானத்திற்குள் புகுந்த ஒரு ரசிகர், நேராக கபில்தேவிடம் சென்று பாகிஸ்தானில் அவர் இருப்பதற்காக வசைச்சொற்களைப் பயன்படுத்தினார். 

கபில்தேவை வசைபாடிய பிறகு மிட் ஆஃப் திசையில் மனோஜ் பிரபாகரிடம் சென்று சிலபல வசைச்சொற்களைப் பயன்படுத்தினார். பிறகு நேராக கேப்டன் ஸ்ரீகாந்திடம் சென்ற அந்த நபர் அவருடன் கைகலப்பில் ஈடுபட்டார். 

நான் பாயிண்ட் திசையில் பீல்ட் செய்து கொண்டிருந்தேன், அடுத்து நான் என்ற பீதி என்னைத் தொற்றிக்கொண்டது. அவர் என்னிடம் வந்தால் ஓய்வறை நோக்கி ஓட ஆயத்தமானேன். உண்மை என்னவெனில், இரு நாடுகளுக்கு இடையிலும் கிரிக்கெட் ஆட்டத்தைத் தாண்டிய விவகாரங்கள் உள்ளன என்பதே" இவ்வாறு சச்சின் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

Keywords: சச்சின் சுயசரிதை, முதல் டெஸ்ட், இந்தியா-பாகிஸ்தான் 1989, பிளேயிங் இட் மை வே, Playhing It My Way, Sachin's Autobiography, cricket, India-pak series 1989, debuy series

[Continue reading...]

ஆணாதிக்கம் போல பெண்ணாதிக்கம் என்றும் ஒன்று இருக்கிறது

- 0 comments


​"ஆணாதிக்கம் என்று ஒன்று இருப்பதைப்போல பெண்ணாதிக்கம் என்றும் ஒன்று இருக்கிறது... ஆனால், அதைப் பற்றி யாரும் பெரிதாகப் பேசுவதில்லை" என்று நண்பர் ஒருவர் வருத்தப்பட்டுக்கொண்டார்.

காலங்காலமாகப் பெண்களை அடிமைப்படுத்தியும் அவர்கள் சுதந்திரத்தை முடக்கியும் கட்டுப்படுத்தியும் வந்துள்ள ஆண் சமூகம் பெண்ணாதிக்கம் சொல்லைப் பயன்படுத்துவது எவ்வளவு குரூரமானது என்னும் கேள்வி என்னுள் எழுந்தாலும் நண்பர் என்ன சொல்லவருகிறார் என்று புரிந்துகொள்ள முயன்றேன்.

"இங்கு ஆதிக்கம் செலுத்துவதில், தவறுகள் செய்வதில் ஆண்/பெண் என்கிற பாகுபாடு இல்லாமல் பரஸ்பரம் சளைக்காமல் செய்கிறார்களே. கணவனும் மாமியாரும் சேர்ந்து மனைவியைக் கொடுமைப்படுத்தும் இதே ஊரில்தானே பொய்யான வரதட்சணைக் கொடுமை வழக்கில் கணவனையும் வயதான பெற்றோரையும் சிறையில் தள்ளுகிறார்கள். இதுபெண்ணாதிக்கம் இல்லையா?" என்று கேட்டார் நண்பர்.

பெண்ணின் அடிப்படையான தகுதி, உரிமைகள், சமூகத்திலும் குடும்பத்திலும் அவளுடைய இடம், பங்களிப்பு ஆகிய எல்லா அம்சங்களிலும் ஆணுக்கு இரண்டாம்பட்சமான நிலையில் பெண்ணை வைத்துவந்த சமூகம் ஆண் சமூகம். ஆணே மேலான நிலையில் இருக்குமாறு இங்கே அனைத்து விதிகளும் சூழலும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சமயம், சம்பிரதாயம், நெறிமுறைகள், சட்டங்கள் என யாவுமே ஆணை ஒரு படி தூக்கியே வைத்திருக்கின்றன. மத நூல்கள், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், பழமொழிகள், சட்ட நூல்கள் எனப் பல அம்சங்களை மேற்கோள் காட்டி இதை நிரூபிக்க முடியும்.

இப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ள சமூகத்தில் வளரும் பெண்ணும் இதே மனநிலையைக் கைக்கொண்டு சக பெண்களுக்கு எதிராகச் செயல்படுவதும் உண்டு. இதையும் ஆண்மையச் சிந்தனை, ஆணாதிக்கப் போக்கின் விளைவு என்றுதான் பார்க்க வேண்டும். அதுபோலவே, அதிகாரம் கைக்குக் கிடைத்ததும் சில பெண்கள் மோசமாக நடந்துகொள்வது பொதுவாக மனித சுபாவத்தில் உள்ள பிரச்சினையே தவிர அதுவும் பெண்ணாதிக்கம், பெண்ணின் பிரத்யேகமான குறை என்று சொல்லிவிட முடியாது.

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளில் சில சமயம் பெண்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதுதான் நண்பரின் வாதம். ஆனால் ஆணாதிக்கம் என்பதற்கு இணையான பெண்ணாதிக்கம் என்னும் சொல்லை அவர் பயன்படுத்துகிறார். பெண்களை இரண்டாந்தர மனிதர்களாக நடத்துவதற்குக் காரணமான ஒரு அணுகுமுறை ஆணாதிக்கச் சிந்தனை. போக்கிற்கு ஒப்பான ஒரு சொல்லைப் பெண்களின் குறைகளைச் சுட்டப் பயன்படுத்தக் கூடாது என்பதை அவருக்குப் புரியவைக்க முயன்றேன்.

எல்லா விதங்களிலும் பாதிப்பு

இங்கு குடும்ப வன்முறை தொடங்கி சமூக வன்முறை வரை உடல்ரீதியாக, மனரீதியாக ஆண்களைவிட பெண்களே எல்லா விதங்களிலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வீடுகளிலும் பொது வெளியிலும் இருக்கும் நுட்பமான ஒடுக்குமுறைகள் ஒருபுறம் இருக்கட்டும். வேலைக்குச் செல்வதால் வீட்டிலும் அலுவலகத்திலுமாக இரட்டிப்பு வேலைச் சுமையைத் தாங்கும் நெருக்கடி இருக்கட்டும். பணியிடத்தில் சுமக்க நேரிடும் பழிபாவங்களும் சக ஊழியர்களான ஆண்களால் ஏற்படும் நேரடியானதும் மறைமுகமானதுமான பாலியல் தொல்லைகள் இருக்கட்டும். வெளிப்படையான சம்பவங்களைப் பார்த்தாலே பெண்களின் நிலையைப் புரிந்துகொள்ளலாம்.

ஆசிட் வீச்சு சம்பவங்களையே எடுத்துக்கொள்வோம். எவ்வளவு எழுதினாலும், கதறினாலும் ஆசிட் வீச்சுகள் தொடர்ந்துகொண்டேதானே இருக்கின்றன. பெண்களின் முகங்களில்தானே தொடர்ந்து ஆசிட் வீசுகிறார்கள். கத்தியால் குத்திக் கொலை செய்வதைவிடக் கொடூரமானது ஆசிட் வீச்சு. சமீபத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட சுபா என்னும் பெண்ணிடம் பேச வாய்ப்புக் கிடைத்தது. "கோபம் இருந்துச்சுன்னா வேற ஏதாச்சும் செஞ்சிருக்கலாமில்லைங்ணா" என்று அவர் கேட்டபோது தலை குனிவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

ஒரு பெண்ணின் மீது விசப்படும் ஆசிட் அவள் உடல் மீது மட்டும் வீசப்படுவது அல்ல. அது அவளது தன்மானத்தின் மீது, தன்னம்பிக்கையின் மீது, சுயத்தின் மீது வீசப்படுவது. ஒரு பெண்ணை இதுபோல வேறு எப்படியும் அதிகபட்சமாக அவமானப்படுத்த முடியாது. அவள் ஆயுள் முழுவதும் தனது முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் வேதனைப்பட வேண்டும்; மறந்தும் கசப்பை மறந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டுச் செய்யும் குரோதத்தின் உச்சம் இது.

இதுபோல இன்னும் வகைப்படுத்தலாம். 'வாச்சாத்தி' தண்டனை அறிவிக்கப்பட்ட பின்பும் உடுமலை காவல் நிலையத்தில் அத்துமீறல் நடந்திருக்கிறதே. அத்துமீறல் நடக்கவில்லை என்று காவல் துறையினர் சொன்னாலும், அங்கு ஒரு பெண்ணுக்குரிய காவல் துறையின் சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்பது உண்மைதானே. அத்துமீறல் நடக்கவில்லை என்பதை எப்படி நம்புவது?

உண்மையில் பெண்ணைப் 'பெண்'என்று தனி இனமாக பிரித்து, அனுதாபம்/ ஆதிக்கம்/ பாசம்/ வெறுப்பு இப்படி எதையுமே மிகையாகச் செலுத்துவதுமே தவறுதான். இதன் நீட்சிதான் காதல் விவகாரங்களிலும் எதிரொலிக்கிறது. பெண் என்றால் தேவதை /தெய்வம் என்று கற்பிதம் செய்துகொண்டு அளவுக்கு அதிகமாக அவர்களை நேசித்து, அளவுக்கு அதிகமாக அவர்களிடம் எதிர்பார்த்து, ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணும் ஒரு சராசரி மனுஷிதான் என்பதை உணரும்போது உடைந்து, பின்பு அவளை துரோகியாக, சாத்தானாகச் சித்தரிப்பது காதலில் வழக்கமாகிவிட்டது. பெண்களை ஆண்கள் ஏமாற்றுகிறார்கள்.

அதேபோல் பெண்களும் ஆண்களை ஏமாற்றுகிறார்கள். இதற்கான காரணங்கள் தனிநபர்களின் பலவீனம், சுயநலம், மேம்போக்கான உணர்வுகள், சூழல் எனப் பல விதமாக இருக்கலாம். காரணத்தைப் புரிந்துகொண்டு மதிப்பிடுவதே யதார்த்தமாக இருக்கும். அதை விட்டுவிட்டு "இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்" என்று சொல்லும் ஆணின் குரல்தான் ஆசிட் வீச்சாகப் பரிணமிக்கிறது.

நம் சமூகத்தில் பெண்ணியவாதிகள் என்கிற ஒரு குழு உருவானதே ஆண்களுக்கு அவமானம். உண்மையில் பெண்களை உயர்த்தியோ, ஒதுக்கியோ வைக்காமல் அவர்களை சக மனுஷியாக மதிப்பதே ஆண்கள் அவர்களுக்குச் செய்யும் பெரும் புண்ணியமாக இருக்கும். இந்த அணுகுமுறை இருந்தால் 'பெண் உரிமை' என்று தனியாகப் பேச வேண்டிய அவசியம் இருக்காது.

Keywords: பார்வை, பெண்ணாதிக்கம், ஆண்கள் அவதி, பெண்கள் தவறு, சமநிலை, சமூகம், சம உரிமை, பெண்ணுரிமை
Topics: பெண்கள்

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger