கோவையில் 8 மணி நேர மின்வெட்டைக் கண்டித்து 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
11 மணிநேர மின்வெட்டு
கோவையில் தினசரி குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல், அதிக பட்சமாக 11 மணிநேரம் வரை மின் தடைநீடிப்பதால் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். மின் தடையைக் கண்டித்து கோவையில் உள்ள 36 தொழில் அமைப்பினர் கூட்டாக இணைந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோவையில் உள்ள வேலாண்டிபாளையம், ஆவாரம்பாளையம் பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, சின்ன வேடம்பட்டி, சிகோ, அரசூர், மலுமிச்சம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் என்ஜினீயரிங், குறுந்தொழில் கூடங்கள், வார்ப்பட தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சில தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது.
இது தவிர கோவையில் உள்ள காட்டூர், பழையூர், இடையர்பாளையம், ஒண்டிப்புதூர், உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் பம்பு, உதிரிபாகங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டு கிடந்தன.
ஆர்ப்பாட்டம்- கஞ்சித்தொட்டி
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 10.30 மணிக்கு கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு தொழில் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொடிசியா தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழில் அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி, பலர் கைகளில் கறுப்பு கொடிகள், சிம்னி விளக்குகளை பிடித்தபடி கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் தடையில்லாமல் மின்சாரம் வழங்கு, பாரபட்சம் இல்லாமல் மின்சாரம் வழங்கு, உடலுக்கு தேவை உயிரோட்டம், தொழிலுக்கு தேவை மின்னூட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கஞ்சி தொட்டிகளை திறந்து, தொழிலாளர்களுக்கு இலவச கஞ்சி வழங்கினர்.
ரூ.250 கோடி உற்பத்தி இழப்பு
இது குறித்து போராட்டக்குழுவினர் சிலர் கூறுகையில், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொடிசியா, சிமா, இந்திய தொழில் வர்த்தக சபை, தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர் சங்கம், சிஸ்பா, காட்மா, டேக்ட் ஆகிய குறுந்தொழில் சங்கங்கள், கோவை சிறுமின் விசை பம்பு உற்பத்தியாளர் சங்கம், கோவை மாவட்ட வார்ப்பட சங்கம், சிறு வார்ப்பட ஆலை உரிமையாளர் சங்கம், கோப்மா, உள்ளிட்ட 36 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உரிமையாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர்.
கோவையில் ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு, 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ரூ.250 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்றனர்.
மறியல்- தடியடி
சில அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இருந்து கிளம்பி, கோவை டவுன் பஸ் நிலையம் எதிரே உள்ள சிக்னல் பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை.
ஆவேசத்துடன் அவர்கள் கோஷம் போட்டவாறு அங்கிருந்து செல்லாமல் அடம் பிடித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நாலா புறமும் கலைந்து ஓடினர்.
வாகனங்களில் வந்த பலரும் பீதியடைந்து ஓடினார்கள். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண், மற்றும் ஓட்டல் தொழிலாளியான முருகன் ஆகியோர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் காயம் அடைந்த முருகனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயத்துடன் அந்த பெண், அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பினார்.
இதைத் தொடர்ந்து போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பிய சில தொழிலாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.