இளவரசன்–திவ்யா காதல் தமிழகத்தில் யாரும் மறக்க முடியாத சுவடுகளாக பதிவாகி விட்டது. கலப்பு திருமணம் செய்ததால் ஏற்பட்ட மோதல், வன்முறை என சினிமாவை போல் நீண்டு கொண்டே சென்ற இவர்களின் காதல் இளவரசனின் மரணத்தால் முடிவுக்கு வந்து விட்டது.
காதல் மனைவியை பிரிந்த துக்கத்தில் இருந்த இளவரசன் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இறந்து விட்டது பல காதல் ஜோடிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறந்து கிடந்த இளவரசன் தனது மனைவி திவ்யா, பெற்றோருக்கு தனிதனியாக கடிதம் எழுதி உள்ளார். அதில் திவ்யாவை அவர் எந்த அளவுக்கு நேசித்து உள்ளார் என்று விவரித்து உள்ளார். இந்த கடிதம் இளவரசனின் பெற்றோரிடம் போலீசார் படிக்க கொடுத்தனர். இதே போல் அந்த கடிதத்தை போலீசார் திவ்யாவிடமும் படிக்க கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.
இளவரசனின் கடைசி காதல் கடிதம் பற்றி பத்திரிகை மற்றும் டி.விக்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதை பார்த்த திவ்யா கண்ணீர் விட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது. தனக்காக தன் உயிரையும் விட்ட இளவரசனை நினைத்து திவ்யா மிகுந்த சோகத்தில் உள்ளார்.