தயாரிப்பு: திருப்பதி பிலிம் மீடியா (பி) லிட்., யூடிவி மோஷன் பிக்சர்ஸ்
கதை, திரைக்கதை, இயக்கம்: என்.லிங்குசாமி
நடிகர்கள். சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால். மனோஜ் பாஜ்பாய், சூரி, பிரம்மானந்தம்.
இசை: யுவன் சங்கர்ராஜா
ஒளிப்பதிவு; சந்தோஷ்சிவன் ,எடிட்டிங்; அந்தோணி
கலை; ராஜீவன்
ரசிகர்களின் பரவலான எதிர்பார்ப்பு திறந்து 'அஞ்சான்' முதல் காட்சி காணும் தருணம் ஒருவித பரபரப்பும் பரவசமுமானது.
எப்போது அஞ்சான்' என்று எதிர்பார்த்தவர்களுக்கு அந்த பெரியநாளும் வந்து விட்டது.இதோ வந்தே விட்டது அஞ்சான். எனவே இனி திரையரங்கெல்லாம் திருவிழா அனுபவம்தான். ரசிகர்களின் தீர்மானமான எதிர்பார்ப்புக்கு லிங்குசாமி சரியான கொழுத்த தீனி போட்டிருக்கிறார் நிச்சயமாக இந்த குதூகலமான பொழுதுபோக்கு விருந்து, படம்முழுக்க ருசிக்கிறது.
பொழுது போக்கு எண்ணத்தில் இப்படத்துக்கு போகிறவர்களைக் கூட திரையரங்கம் விட்டு வரும்போது கொடுத்த காசுக்கு திருப்தியான விருந்து என ஒவ்வொருவரையும் சொல்ல வைக்கும்.
நேரத்தை வீணடிக்காமல் ஆக முதல் காட்சியிலேயே நம்மை நேரடியாக கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிறார் இயக்குநர்
கிருஷ்ணா தன் சகோதரனைத் தேடி மும்பைக்கு வருகிறான். ராஜுபாய் என்று மும்பை காரர்களால் அழைக்கப்படும் ராஜுவை தேடி மும்பைக்கு வருகிறான் (அதுவும் சூர்யாநடிக்கும் இன்னொரு பாத்திரம்)
கிருஷ்ணா சில மனிதர்களைச் சந்திக்கிறான். அதன்பிறகு கதை பின்னோக்கிப் பயணிக்கிறது.
அப்போது ராஜுபாய் அவரது நண்பன் சந்துரு (வித்யுத் ஜம்வால்)என புதியநிகழ்வுகள்.
இந்த தேடல் தொடர்கையில் கதையில் பல புதிர்கள். பல மர்மக் கதவுகள் திறக்கின்றன. பல எதிர்பாராத முடிச்சுகள் விழுகின்றன. இது பார்க்கும் பார்வையாளர்களை இருக்கை நுனிக்கு இழுத்துச் செல்லும்.
ராஜுபாய், கிருஷ்ணா என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங் கள் மூலம் புது அவதாரம் எடுக்கிற சூர்யா தன் நடிப்புத் திறனை தாராளமாக அவிழ்த்து விடுகிறார். படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் நம்மைக் கவர்ந்து கவனத்தை அள்ளிக் கொண்டு போகிறார்.
காதல் இளைஞனாக அழகான தோற்றத்தால், கவர்கிறார். உடல் மொழிகளால் ஒரு ஸ்வீட் ராஸ்கலாக சமந்தாவுடன் பொருத்தமான ஜோடியாக மிளிர்கிறார்.சாது மிரண்டால் காடு கொள்ளாது நடிப்பையும் அவரே தருகிறார். இழப்புகளுக்குப் பின் அவர் சிங்கமாக சீறுவது உணர்ச்சிகர விருந்து.
இந்தப்படம் ஒரு மறக்க முடியாத படமாக சொல்வதற்கு அனேக அம்சங்கள் உதாரணமாக உள்ளன.
தன் நண்பன் இரக்கமற்று கொல்லப்பட்டது கண்டு சூர்யா கொதிப்பது ஒரு காட்சி. நமக்கே துக்கம் தொண்டையை அடைக்கும்.
கிருஷ்ணாவாக வரும் சூர்யா நம் அனுதாபங்களை ஒட்டு மொத்தமாக அள்ளுகிறார். இன்னொரு பக்கம் மாபெரும் தாதா ராஜுபாய் தொடர்பான காட்சிகளில் இன்னொரு விதத்தில் நம்மை அலாக்காக தூக்குகிறார். அவர் பல்லைக் கடித்து பேசும் பாணி நிச்சயம் பலரையும் பாதித்து தொற்றிக் கொள்ளப் போகிறது.
சமந்தா அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக அதுவும் 'ஏக் தோ தீன்' பாடலில் நம்மை சொல்லி வைத்து குறிவைத்து தாக்குகிறார். கிளாமரில் அவரது அழகு கவர்ச்சி, கொழுக் மொழுக் தோற்றம் பார்க்கிற இளைஞனை எல்லாம் பள்ளம் தோண்டாமல் கூட விழவைக்கும்.
சூர்யாவின் சமந்தா கடத்தல் விறு விறு சுவாரஸ்யம்.
வித்யுத் ஜம்வால் அவரது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட புதிய பாத்திரத்தை ஏற்றுள்ளார். நிஜ நட்புக்கு உதாரணம் அவரது பாத்திரம். வசனங்களிலும் அழுத்தம்.
இம்ரான் பாயாக வரும் மனோஜ் வாஜ்பாய் அந்த ஹோலோ கிராபிக் 3டி திட்டத்துக்கு பாராட்டு பெறுகிறார். அது புத்திசாலித்தனமான சர்ப்ரைஸ் காட்சி.
படம் முழுக்க சூரி வரவில்லை .என்றாலும் சூர்யாவுடன் இணைந்து வரும்போது கலகலப்பூட்டத் தவறவில்லை. பிரம்மானந்தமும் சிறிது வந்து அவர் பகுதியை சரிவரச் செய்து சிரிக்க வைக்கிறார்.
ஆக்ஷன் நட்பு, காதல், நகைச்சுவை, கவர்ச்சி ஆவேசம், பழிவாங்கல் ஆகியவை சரிவிகித கலவையாகி ஓடுதளத்தில் பறக்கும் கதையாக அஞ்சானை மாற்றியுள்ளது.
நட்பு, காதல், ஆவேசம் ஆகியவற்றை காட்சிகளாக்க லிங்குசாமி திரைக்கதையில் கடுமையாக உழைத்திருக்கிறார்.
திரைக்கதையில் நுழைந்து கலந்துள்ள பிருந்தா சாரதியின் வசனமும் பளிச்சிட்டிருக்கிறது. 'நீ என் கூட இருக்கிற துரோகத்தை பார்த்திருக்கே விசுவாசத்தை பார்த்ததில்ல', 'தூக்குறவரைக்கும்தான் உன் ஆளு, ஆன்த வே ல என் ஆளு', 'எதிரியோட கூட துரோகி இருக்கக் கூடாது' போன்றவை சில பளிச் வசனங்கள்;கைதட்டல் பெறுபவையும் கூட.
கார் துரத்தல் காட்சிகள், க்ளைமாக்ஸ் எல்லாம் நம்மை சிலிர்க்க வைப்பவை. ஆரம்பம், இடைவேளை, முடிவு மூன்றுமே 3 அதிரடிகள்தான். சூர்யா, வித்யுத் ,சமந்தா மூவரை வைத்து நடுரோட்டில் ஆக்ஷன் கவிதை எழுதியிருக்கிறார் லிங்குசாமி.
யுவன் சங்கர்ராஜா ஆக்ஷன் ரொமான்ஸ் எமோஷன்ஸ் என எல்லாவற்றிலம் பின்னணி இசையில் பின்னியிருக்கிறார்.
'பேங்.பேங்பேங்..''காதல் ஆசை' 'ஏக் தோ தீன் சார்' பாடல்களின் காட்சிகள் கவிதை.
வழக்கமாக மும்பை பின்னணியில் நிறைய காட்சிகளை பார்த்திருந்தாலும் சந்தோஷ் சிவனின் கேமரா கோணங்களில் எல்லாமே புதியனவாகத் தெரிகின்றன. அவர் வண்ணங்களை பயன்படுத்தியுள்ள அழகும் அற்புதம். கண்களுக்கு விருந்து.
மொத்தத்தில் 'அஞ்சான்' சந்தேகமில்லாமல் சொல்லியடிக்கும் வெற்றிப்படமாக அமையும். அதற்கான அனைத்து விதமான வணிகக்கலவைகளையும் அழகாகக் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர்.