சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விலங்கு, எது தெரியுமா? பாலைவன கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்கள் தான். இவற்றின் வாயிலிருந்து வெளியேறும் மீத்தேன் என்ற நச்சு வாயு, புவி வெப்பமயமாவதற்கு முக்கிய காரணமாக விளங்குவதாக, அறிவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஒட்டகமும், ஒரு ஆண்டுக்கு, தலா, 45 கிலோ கிராம் மீத்தேன் நச்சு வாயுவை வெளிப்படுத்துகின்றனவாம். இந்த, 45 கிலோ மீத்தேன் வாயுவால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு, ஒரு மெட்ரிக் டன் கரியமில வாயுவால் ஏற்படுத்தும் பாதிப்புக்கு சமம். இதனால், ஒட்டகங்களை கண்டாலே, உலக நாடுகள் அலறுகின்றன. இதில், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியா தான். ஆஸ்திரேலியாவை கங்காரு நாடு என, பலரும் அழைத்தாலும், ஒட்டகங்களும் அங்கு அதிக அளவில் உள்ளன.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள், ஆஸ்திரேலியாவில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் மக்கள் குடியேறாத காலத்தில், புதிய பகுதிகளை கண்டுபிடிப்பதற்காக வந்தவர்கள், தங்களின் பயணத்துக்காக, ஒட்டகங்களை இங்கு கொண்டு வந்தனர். இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒட்டகங்கள் தான், தற்போது பெருகி, ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகின்றன.
இவற்றை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு, அதிரடியாக ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. காடுகளில் சுற்றித் திரியும் ஒட்டகங்களை, ஹெலிகாப்டர்களில் பறந்தவாறு, சுட்டுத் தள்ளுவதற்கு வேட்டையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. கொல்லப்படும் ஒவ்வொரு ஒட்டகங்களுக்கும், வேட்டையாளர் களுக்கு வெகுமதியும் உண்டு.
இந்த வெகுமதியை அளிக்கப் போவது, ஆஸ்திரேலிய அரசு அல்ல. தொழிற்சாலைகளை அமைத்துள்ள தொழில் அதிபர்கள், தங்களின் தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுக்கான நஷ்ட ஈடாக, வேட்டையாளர்களுக்கு பணம் அளிக்க வேண்டும்.
இது தான், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் தந்திரமோ?
எது எப்படியோ, ஒரு காலத்தில், ஆஸ்திரேலியாவில் மக்கள் குடியேறுவதற்காக உதவிய ஒட்டகங்கள், தற்போது, துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகப் போவதை நினைத்தால், வேதனையாகத் தான் இருக்கிறது.
[Continue reading...]