Thursday, 11 August 2011

தமிழ்ச் சினிமாவ��க்கு வரிவிலக்கு - குழப்பமான அரசாணை - யாருக்கு லாபம��..?



26-07-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கருணாநிதி தனது கடந்த கால ஆட்சியில் திரையுலகத்தினருக்கு அளித்த மாபெரும் சலுகை, தமிழில் தலைப்பு வைத்தால் அத்திரைப்படங்களுக்கு முழு வரிவிலக்கு என்று அறிவித்ததுதான்.

இந்த வரிவிலக்கால் கடந்த நான்கரையாண்டு காலமாக வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், கூடவே தாத்தாவின் பேரன்களும் முழு பலன்களைப் பெற்றார்கள். அதே நேரத்தில் வழக்கமான முறையில் கேளிக்கை வரியைப் பிடித்தம் செய்திருந்தால் அதில் குறிப்பிட்ட தொகை உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். இதனால் ஏற்படும்  இழப்பீட்டுத் தொகையை அரசே உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் என்றும் அரசு சொல்லியிருந்த்து. இதனால் திரைப்படங்களின் தயாரிப்புக்கு ஏற்றவாறு மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரிவிலக்கு அளித்த தொகையை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது.

இது ஒரு புறமிருக்க.. தமிழ்ப் பெயர்கள் என்று சொல்லிக் கொண்டு அன்றாடம் பயன்படுத்தும் நடைமுறைத் தமிழை வைத்துக் கொண்டு ஜல்லியடித்தது தமிழ்ச் சினிமாவுலகம். முதல் அம்பு சிவாஜியில் ஆரம்பித்தது. சிவாஜி என்ற எழுத்து நடைமுறைத் தமிழ் என்று விளக்கமளித்த கருணாநிதி அரசு அதற்கு வரிவிலக்கு அளித்தது. அவ்வளவுதான் அதன் பிறகு அனைத்து நடைமுறை தமிழ்களும் சினிமா தலைப்புகளாகி நடைமுறைக்கு வந்துவிட்டன.

சென்ற ஆண்டு வெளிவந்த அம்பாசமுத்திரம் அம்பானி, மதராசபட்டினம்,  தில்லாலங்கடி, பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, எந்திரன், பாஸ் என்ற பாஸ்கரன், மைனா, வ குவார்ட்டர் கட்டிங், சித்து +2, கோட்டி, சிக்குபுக்கு, சிங்கம், பையா, குட்டி, கோவா, சுறா, கொலை கொலையாம் முந்திரிக்கா, மிளகா என்று வரிசை கட்டி வந்த திரைப்படங்களிலெல்லாம் தமிழ் மொழியின் வளர்ச்சி, இந்த நடைமுறைத் தமிழ் என்கிற ஓட்டைக்குள் நுழைந்து பதுங்கிவிட்டன..!

இந்த வரிவிலக்கால் யாருக்குத்தான் லாபம் கிடைத்தது..? இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து, 2010 டிசம்பர் 31-வரையிலும், 1,208 தமிழ் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு நிச்சயம் 300 கோடி ரூபாய்வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதே சமயம் இத்தொகை முழுவதும் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும்தான் கிடைத்திருக்குமே தவிர, படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இதனால் எந்தவித்த்திலும் நன்மையில்லை. மாறாக அவர்களிடமிருந்து கூடுதலான தொகையைத்தான் சுருட்டியிருக்கிறார்கள்.

கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்புதான் ஏஸி இல்லாத தியேட்டர்களில் கட்டணம் 50-க்கு கீழேதான் இருக்க வேண்டும். ஏஸி உள்ள தியேட்டர்களிலும் ஊரைப் பொறுத்து 75 ரூபாய்தான் அதிகபட்ச கட்டணம் என்று ஒரு நாள் அறிவித்தார். அவர் அவ்வாறு அறிவித்த அன்று இரவிலேயே சென்னையில் இருந்த மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள், அபிராமி ராமநாதன் தலைமையில் கோபாலபுரத்துக்கு படையெடுக்க, மறுநாளே அந்த உத்தரவில் மாறுதல் செய்யப்பட்டு, இந்த டிக்கெட் விலை கட்டுப்பாடு மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களுக்கு பொருந்தாது என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து திரைப்படம் வெளியான சில நாட்களுக்கு மட்டும் டிக்கெட் கட்டணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. இதனாலும் அதிகம் பயனடைந்தவர்கள் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும்தான்..!

சிறு நகரங்களில் வெறும் 30 ரூபாய் டிக்கெட்டை வணிகவரித்துறையின் சீல் இல்லாமல் 50 ரூபாய்க்கு கவுண்ட்டரில் கொடுத்து துவக்கப்பட்ட கொள்ளையடிப்பு, புதிய படங்களின்போது 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு 30 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டு அந்த 30 ரூபாய்க்கு கொடுக்கப்பட வேண்டிய வரியான 1 ரூபாயும் வரிவிலக்கால் அவர்களிடமே போய்ச் சேர்ந்த்து. கடைசியில் ஏமாந்த்து என்னைப் போன்ற அதீத சினிமா ரசிகர்கள்தான்..!

தியேட்டர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரியில் 90 சதவீதத் தொகை,  உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்று கொண்டிருந்தன. இந்த வரிச் சலுகையால் 300 கோடி ரூபாயை அனாவசியமாக தேவையில்லாமல் அரசு தனது இருப்பில் வைத்திருக்கும் பணத்தில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறது..!

ஒரு பக்கம் தமிழை வளர்க்க உதவும் என்று வாயில் முழம் போட்ட அந்த வார்த்தைகளும் பொய்யாகி, வரி விலக்கினால் சாதாரண பொதுஜனத்திற்கும் எந்தப் பலனுமில்லை என்ற இன்றையச் சூழ்நிலையில் கடந்த 6 மாதங்களாக எத்திரைப்படத்திற்கும் வரிவிலக்கு அளிக்காமல் மெளனம் காத்து வந்தனர் அரசு அதிகாரிகள்.

இதற்கு அச்சாரமாக கடந்த வருடமே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் பெரிய படங்களுக்கு வரி விலக்கு தேவையில்லை. சிறிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் கொடுங்கள் போதும் என்று அரசிடம் முறையிட்டிருந்தார்கள். ஏனெனில் பெரிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்யும்போது தியேட்டர்காரர்கள் அதிக விலைக்கு டிக்கெட்டுக்களை விற்றதன் மூலம் கிடைத்த லாபம் பெரும்பாலும் தியேட்டர் அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்குமே போய் சேர, தயாரிப்பாளர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை..! அதே சமயம் சிறிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் வரி விலக்கு அளித்து, அதன் மூலம் தியேட்டர் கட்டணத்தை குறைத்தால், மக்கள் கூட்டம் அதிகமாக வந்து, சுமாரான வசூலாவது கிடைக்குமே என்று தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இதனை திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம், முளையிலேயே கிள்ளியெறிந்துவிட்டதால் இந்தக் கோரிக்கை குப்பைக் கூடைக்குப் போனது.

கடந்த 6 மாதங்களாக வெளிவந்த திரைப்படங்களுக்கான வரியை உடனே கட்டும்படி 2 மாதங்களுக்கு முன்பாக பல திரையரங்குகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது. சில திரையரங்கு உரிமையாளர்கள் வரித்தொகையைக் கட்டியிருக்கிறார்கள். சிலர் அவகாசம் கேட்டுவிட்டு தங்களது சங்கத்தில் முறையிட்டுக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் கடந்த 21-ம் தேதி நம்ம ஆத்தா, புண்ணியவதி ஜெயலலிதா இது தொடர்பாக புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டு இன்னும் கொஞ்சம் குழப்பத்தைக் கூட்டியிருக்கிறார்.

அந்த அரசாணையை படித்துப் பாருங்கள் :

2006-ம் ஆண்டு ஜூலை 22-ம் நாள் வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.72-ன் படி தமிழிலேயே பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டது.

2006-ம் ஆண்டு நவம்பர் 20-ம் நாள் வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.147-ன் படி, கேளிக்கை வரிவிலக்கு பழைய திரைப்படங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

2007-ம் ஆண்டு மார்ச் 30-ம் நாள் வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.85-ன் படி, தமிழ்த் திரைப்படங்களின் காப்புரிமை வைத்திருப்போருக்கும் கேளிக்கை வரிவிலக்கு நீட்டிக்கப்பட்டது.

2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் நாள் வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.159-ன் படி, திரையிடப்படும் பழைய மற்றும் புதிய திரைப்படங்களின் தமிழ்ப் பெயர், தமிழ்ப் பண்பாட்டிற்கு உகந்ததாகவும், கண்ணியமானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து பரிந்துரை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது..

திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிடப்பட்டால் மட்டுமே அத்திரைப்படங்களின் கதைக் கரு தமிழ்ப் பண்பாட்டிற்கு உகந்த்தாகவும், கண்ணியமானதாகவும் உள்ளது என உறுதி செய்ய இயலவில்லை. மேலும் சில தரமில்லாத திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்பட்டதால் மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு பெற்று விடுகின்றன.

மேற்கண்ட சூழ்நிலையில் கேளிக்கை வரிச்சலுகை பெற திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், கீழ்க்கண்ட கூடுதல் தகுதி வரையறைகளை நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

(1). அவ்வாறான திரைப்படம், திரைப்படத் தணிக்கை வாரியத்திடமிருந்து "யு" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

(2). திரைப்படத்தின் கதையின் கருவானது, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்த்தாக இருத்தல் வேண்டும்.

(3). திரைப்படத்தின் தேவையைக் கருதி பிற மொழிகளைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.

(4). திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால், அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.

மேற்கண்ட வரையறைகள், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு கோரப்பட்டு தற்போது நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.

மேலும் கேளிக்கை வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்கின்ற திரைப்படங்களை பார்வையிட்டு வரி விலக்கிற்கு பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும் என அரசு ஆணையிடுகிறது. அவ்வாறான புதிய குழு அமைப்பதற்கான ஆணை தனியே வெளியிடப்படும்.

இப்படியொரு குழப்பமான விதிமுறைக்கு ஐடியா கொடுத்த மவராசன் யாருன்னு தெரியலை. ஆத்தாதான் இதுக்குக் காரணம்ன்னா சீக்கிரமா இந்தம்மாவை பெங்களூர் ஜெயிலுக்குள்ள கொண்டு போடா முருகான்னு திரும்பவும் வேண்டிக்கிறேன்..

இந்த அரசாணையின் வரலாற்றை ஒரு முறை பாருங்கள்..

முதல்ல தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்குன்னு சொல்லியிருக்காங்க. 2-வதா பழைய திரைப்படங்களை டூரிங் டாக்கிஸிலும் ரூரல் பகுதிகளிலும் திரையிடும்போது அவற்றுக்கும் வரி விலக்குன்னு சொல்லியிருக்காங்க.. 3-வதா பழைய திரைப்படங்களின் காப்பிரைட் உரிமையாளர்களுக்கும் இந்தச் சலுகையைக் கொடுத்திருக்காங்க. 4-வதா தமிழ்ப் பெயர்கள்தானா என்று கண்டறிந்து வரி விலக்கிற்கு அனுமதி வழங்க ஒரு தனிக் குழுவை அமைக்கப் போவதாகச் சொல்லியிருக்காங்க. இது வ குவார்ட்டர் கட்டிங் படத்தின் தலைப்பு பற்றிய சர்ச்சை எழுந்தபோது, தாத்தா செய்த தில்லாலங்கடி வேலை..!

இப்போது விதிக்கப்பட்டிருக்கும் முதல் விதியை கண்மூடித்தனமாக நான் ஏற்றுக் கொள்கிறேன். யு சர்டிபிகேட் இருந்தால்தான் வரி விலக்கு. ஓகே..

இரண்டாவதாக சொல்லப்பட்டிருக்கும் "திரைப்படத்தின் கதையின் கருவானது, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்.." என்ற நிபந்தனையை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்று புரியவில்லை.

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்துவதற்கா இங்கே எல்லோரும் சினிமா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..? முதலில் தமிழ்ப் பண்பாடு என்றால் என்னவென்று இங்கே யாருக்காவது தெரியுமா..? அப்படியொன்று இருக்கிறதா என்ன..?

ஒரு இடைவேளை, 5 பாடல்கள், இதில் 2 குத்துப் பாடல் காட்சிகள், 4 சண்டைக் காட்சிகள், 2 ரீல்களுக்கு ஒரு முறை 1 நகைச்சுவைக் காட்சி என்று அரைத்த மாவை அரைப்பதை போல எதையோ எடுத்து ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்ப் பண்பாடு என்று எதை, எதையோ சொல்லி பயமுறுத்தினால் எப்படி..? இது எப்படி வேலைக்காகும் என்று ஆலோசனையில் இருந்த ஐ.ஏ.எஸ்.ஸுகள் யோசித்திருக்க வேண்டாமா..?

சரி அப்படியே ஒருவர் தமிழ்ப் பண்பாட்டின்படிதான் திரைப்படத்தை எடுத்திருக்கிறேன் என்று சொன்னாலும், அதற்கு மதிப்பீடு அளிக்கப் போவது யார்..? அதற்கான அளவுகோல்கள் என்னென்ன..? அவர்களுக்கு தமிழ்ப் பண்பாடு இதுதான் என்று எப்படி தெரியும்..? யாராவது இதற்கு பதிலளிக்க முடியுமா..? சுத்தம். சரி இதைவிடுங்க..

"திரைப்படத்தின் தேவையைக் கருதி பிற மொழிகளைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர, பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.." என்ற மூன்றாவது நிபந்தனை எந்த அளவுக்கு இயக்குநர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது சந்தேகமே..!

ஏனெனில் உயர்தர வர்க்கத்தினரின் வீடுகளில் இப்போது தமிழ் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் காவலாளிகள்கூட ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். இது போன்ற சூழ்நிலைகளை காட்டுகின்றபோது நடைமுறைத் தமிழைக்கூட ஒதுக்கிவிட்டு ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். அதுதான் ஓரளவு சினிமாவுக்கு இயல்பாக இருக்கும். தமிழ்நாட்டிலேயே தமிழ் பேசாமல் இருக்கும் வீடுகளெல்லாம் இருக்கும் நிலையில் அது போன்றவைகளை வெளிப்படுத்த, தமிழை பயன்படுத்த முடியாது என்பதுதான் இயக்குநர்களின் கருத்தாக இருக்கும்.

"திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால், அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்" என்ற இந்த 4-வது விதிமுறையினால் நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கும், சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கும் சிக்கல்தான்..!

ஏனெனில் கந்தசாமி படத்துக்கும், நடுநசி நாய்கள் படத்துக்கும் யு சர்டிபிகேட் கொடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டவர்கள் சென்சார் போர்டு உறுப்பினர்கள். இந்த நிலையில் இது போன்ற படங்களை பார்க்கும் தகுதிக் குழு நியாயமாகச் செயல்பட்டு இந்தப் படங்களுக்கு வரிவிலக்கில்லை என்று சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். மாறாக அவர்களும் சென்சார் போர்டு உறுப்பினர்களை போல கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்திட்டால் இதுவும் பணால்தான்..! சென்சார் போர்டு யு சர்டிபிகேட் கொடுத்தும் தகுதி குழு அதனை ஏற்க மறுத்தால், தயாரிப்பாளர்கள் என்ன செய்வார்கள்..?

ஆக மொத்தம், இந்தப் புதிய அரசாணையால் புதிய குழப்பத்திற்கு அடி போட்டிருக்கிறார் ஜெயல்லிதா. விரைவில் தமிழ்த் திரைப்பட உலகத்தினர் இந்த விதிமுறைகளை நீக்கச் சொல்லி ஆத்தாவைப் பார்க்க படையெடுப்பது உறுதி.

செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு நிற்கவிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், முரளீதரனுக்கும் இந்தப் பிரச்சினை நிச்சயம் தலைவலியைக் கொடுக்கப் போகிறது..

இப்படி திரையுலகில் அனைவருமே அவரவர் சுய லாபத்தைத்தான் குறிக்கோளாக பார்க்கிறார்களே ஒழிய, சமூகம், துறை, கடைநிலை ஊழியர்கள், மற்றும் ரசிகர்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அரசு இந்தத் திட்டத்தையே நீக்கிவிட்டு திரையரங்கு கட்டணங்களைக் குறைக்க முயன்றால், தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு எதிர்காலத்தில் பெரும் உதவியாக இருக்கும்..!

திரையரங்கு கட்டணங்களை நாங்கள் குறைக்கிறோம். நீங்களும் வரிவிலக்கு அளியுங்கள். வரிவிலக்கு அளித்த பின்பு வருகின்ற கட்டணத்தையே ரசிகர்களிடம் வசூலிக்கிறோம் என்று சொல்லவும் சினிமாக்காரர்களுக்கும்  மனமில்லை.

இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை..!

அள்ள அள்ளப் பணம் என்பதைப் போல டிக்கெட் கட்டணத்தை எத்தனை உயர்த்தினாலும் ஆன்லைனில் டிக்கெட்டை புக் செய்துவிட்டு அரக்கப் பரக்க தியேட்டருக்கு ஓடிப் போய் நிற்கும் ரசிக குஞ்சாமணிகள் இருக்கின்றவரையில், பொழுது போக்க தியேட்டர்களுக்கு வர நினைக்கும் அப்பாவி தமிழர்களின் குடும்பங்களுக்கு இது நிச்சயம் சோதனைதான்..! 


http://tollywwod.blogspot.com/




  • http://tollywwod.blogspot.com/


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger