பிரம்மாண்டத்தாலும், காட்சி அமைப்புகளிலும் ரசிகர்களைக் கவரும் இயக்குநர் ஷங்கர், 'ஐ' படத்தில் காதல் உணர்வையும், பழிவாங்கும் படலத்தையும் கையில் எடுத்திருக்கிறார்.
உடல் வலிமையோடு இருக்கும் ஒருவனை ஒரு கும்பலே சேர்ந்து உருக்குலைக்கிறது. அவன் மனவலிமையோடு திருப்பி அடிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்...? இதுதான் 'ஐ'-யின் ஒன்லைன். இதில், உடலை அறுவறுப்பாக உருக்குலைத்தல் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. உடல் அழகுக்கும் காதலுக்கும் இடையிலான 'தொடர்பு'ம் இங்கே மையமாக்கப்படுகிறது.
'ஐ' ட்ரெய்லரில் வரும் காட்சி நினைவிருக்கலாம். 'யார் நீ? என்னைக் கொல்லப் போறியா? கெடுக்கப் போறியா?' என அழுதபடி கேட்பார் ஏமி ஜாக்சன். 'அதுக்கும் மேல' என்று சொல்வார் 'கூனன்' விக்ரம். இதுவே ஆரம்ப காட்சிகளில் இடம்பெற்றபோது, திரையரங்கில் ரசிகர்களின் சலசலப்பு குறைந்து, கொஞ்சம் சீரியஸாக நிமிர்ந்தபடி கூர்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள்.
அதன்பின் விரியும் ஃப்ளாஷ்பேக்கில், விரிந்த மார்புடன் இளைஞன் லிங்கேசனாக விக்ரம் தோன்றும்போது விசில் சீட்களில் இருந்து மெர்சலின் விளைவால் பறந்தது விசில் சத்தம்.
விக்ரம் என்ட்ரி மெர்சல் என்றால், ஏமி ஜாக்சன் வருகை அதுக்கும் மேலே. ஏமி - விக்ரம் காதல் அத்தியாங்களில் எல்லாம் ரசிகர்களிடம் குதூகலம் பொங்குவதைப் பார்க்க முடிந்தது.
ஒரு காட்சியில் ஏமி வருவதைப் பார்த்து மயங்கி விழுந்தது, விக்ரம் மட்டுமல்ல... ரசிகர்களும்தான். அப்போதுதான், இந்தப் படத்துக்கு யு/ஏ வழங்கியதன் காரணங்களுள் ஒன்று நமக்கு விளங்கியது.
பாடிபில்டர்களைத் துவைத்து எடுக்கும் முதல் சண்டைக் காட்சியில் வீசிய அனலுக்குக் காரணம், அக்காட்சி அமைக்கப்பட்ட விதமா? ரசிகர்கள் அதற்கு அரங்கில் அளித்த வரவேற்பா..? இப்படி ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய கொண்டாட்ட வன்முறை அது. ஆனால், எப்படா 'இடைவேளை' என்று ஏக்கம் ரசிகர்கள் பலருக்கும் தொத்திக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை.
இடைவேளைக்குப் பின்னர், கேன்டீனில் ரசிகர்கள் நடத்து ஸ்டேண்டிங் வட்டமேஜை மாநாடுகள் சிலவற்றில் காதுகொடுத்தபோது, இதுக்கும் மேல ஏதோ எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.
ஆனால், முக்கியமான வில்லன் இவர்தான் என்று தெரியவரும்போது "நாமதாம் எப்பவோ கண்டுபிடிச்சிட்டோம் மாப்ளே" என்ற பக்கத்து சீட்டில் இருந்த இளைஞர் தனது தோழரிடம் உரைத்தது, அவர்களிடன் இடைவேளை மாநாட்டு விவாதத்தின் வீரியத்தைப் பறைசாற்றியது.
படம் கொஞ்சம் நீளம் என்றாலும்கூட, கடைசி 45 நிமிடங்கள் வேகமாக நகர்ந்த விதம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு மெர்சலானுபவத்தைத் தந்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இடையில், பவர் ஸ்டார் என்ட்ரியில் சந்தானத்தின் வழக்கமான கலாய்ப்பினால் ரசிகர்கள் கிச்சுகிச்சுமூட்டப்பட்டனர். மற்றபடி, விக்ரம் - சந்தானம் காமெடி ரசிகர்களை சிரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.
கூனன், பாடி பில்டர், விளம்பர மாடல் என மாறி மாறி ரசிகர்களை வியப்பூட்டும் விக்ரம், உடல் ரீதியினால வேறுபாடுகளையும், குரல் வழியிலான வித்தியாசத்தியும் புகுத்தி கச்சிதமாக உழைத்தும் நடித்தும் படம் முழுவதுமே "'ஐ' அம்" தான் என்று நிரூபித்திருக்கிறார். விக்ரமுக்கு திரையரங்கில் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை, அவரது விடாமுயற்சிக்கும் காத்திருப்புக்கும் கிடைத்த பலனாகவே பார்க்க முடிந்தது.
ஏமி ஜாக்சனுக்கும் இது முக்கியமான படம்தான். இவரால் ரசிகர்கள் எந்த அளவுக்கு குதூகலம் அடைந்தார்களோ, அந்த அளவுக்கு பாராட்டைப் பெறவும் ஏமி தவறவில்லை. வசனத்துக்கான உதட்டு அசைவுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்துவதுடன், மிகை இல்லாத சரியான நடிப்பால் கவர்ந்திழுக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், கலை இயக்குநர் முத்துராஜ், இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதலானோரின் பங்களிப்பு 'ஐ'-யை உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.
ஆயிலா ஆயிலா, மெர்சலாயிட்டேன், பூக்களே, என்னோடு நீ இருந்தால் என பாடல்கள் அனைத்துமே ஷங்கரின் வழக்கமான சுவை குறையாத பொங்கல் படையலாக தியேட்டரில் ரசிக்கப்பட்டது.
ஆனால், ஏற்கெனவே பல படங்களில் காட்டப்பட்ட சண்டைக் காட்சிகளுக்கான காரணப் பின்னணிகள், காதல் மிகத் தொடங்கும் காட்சிகள் எல்லாம் அவ்வப்போது அலுப்பூட்டவும் தவறவில்லை. படத்தில் காட்டப்படும் அறுவெறுப்பான அம்சங்களும்கூட இப்படம் பெரியவர்களுக்கு உரியது என்பதைச் சொல்லின.
உபேன் பட்டேல், சுரேஷ் கோபி, ராம் குமார், ஒஜாஸ் ரஜனி முதலானோர் நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் மீது ரசிகர்கள் பெரிய அளவில் கவனம் கொள்ளவில்லை.
படத்தின் நீளம், யூகிக்க முடிந்த கதைப் போக்கு, வசனங்களின் பங்களிப்பு முதலான குறைகள் அடுக்கப்பட்டாலும், விக்ரமின் மிரட்டலும், அதற்குக் காரணகர்த்தா ஷங்கரின் டீட்டெயிலிங் உடனான இயக்கமும், காதல் கண்களுடன் கூடிய 'ஃபிலிம் மேக்கிங்'கான ஐ-க்கு ஓர் 'ஓ...' போட வைக்கிறது.
படம் முடிந்ததும் ரசிகர்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது கிடைத்த பாயின்ட்ஸ்:
அதிகம் பகிரப்பட்டவை: "மெர்சலாயிட்டேன்", "அதுக்கும் மேல", "விக்ரம், ஷங்கர் கிரேட்"!
ஓரளவு சொல்லப்பட்டவை: "தமிழ் சினிமாவை அடுத்த ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாங்கப்பா!"
மிகச் சிலர் குறிப்பிட்டவை: "ஒரு தடவை பார்க்கலாம்!"
ஆக, முதல் காட்சியில் ரசிகர்கள் உணர்த்திருயிருப்பது... 'ஐ'-யைத் தவறேல்