சூர்யாவின் 7 ஆம் அறிவு படத்தில் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இடம்பெற்ற வசனங்களை நீக்கிய இலங்கையைக் கண்டிக்கும் வகையில் இனி அங்கு தமிழ் திரைப்படங்களே திரையிடக்கூடாது என போராட்டம் வெடித்துள்ளது.
ஈழத் தமிழர்கள் மீது பல நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தியதாலேயே தமிழரக் விடுதலைப் போராட்டம் வீழ்ச்சியை அடைந்ததாக ஏழாம் அறிவு படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் நீக்கி விட்டு இலங்கையில் திரையிட்டுள்ளனர்.
இதற்கு தமிழ் பட உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இனிமேல் இலங்கையில் எனது படங்களை திரையிடமாட்டேன் என்று இயக்குநர் சசிகுமார் அறிவித்துள்ளார்.
7ஆம் அறிவு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுபோல் எல்லா தயாரிப்பாளர்களும் இலங்கையில் தமிழ் படங்கள் திரையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வற்புறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் தமிழ் படங்களை திரையிட அனுப்ப மாட்டோம் என்று உதயநிதி ஸ்டாலின், சசிகுமார் ஆகியோர் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம்.
உலகம் முழுவதும் இலங்கை தமிழர்கள்தான் தமிழ் படங்களை பார்க்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை உலகமே கண்டித்து வருகிறது. அந்த நாட்டுக்கு நடிகர்- நடிகைகள் செல்லக் கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் தமிழ் படங்களையும் அனுப்புவதில்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?