Friday, 28 October 2011

கருணாநிதியின் முழு கட்டுப்பாட்டில் தி.மு.க. இல்லை; பரிதி இளம்வழுதி குற்றச்சாட்டு

- 0 comments
 
 
 
தி.மு.க.வின் எழும்பூர் பகுதி 103-வது வட்ட செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி உள்பட 3 பேர் உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பரிதி இளம்வழுதி புகார் கூறியதன் பேரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட 2 நாளிலேயே அவர்கள் 3 பேரும் பரிதி இளம்வழுதிக்கு தெரியாமலேயே மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
 
இதனால் தனது துணைப்பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக பரிதி இளம்வழுதி கட்சி தலைவருக்கு கடிதம் எழுதினார். நேற்று முன்தினம் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் நேற்று மாலை பரிதி இளம்வழுதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
கட்சி தலைமைக்கு நான் தான் ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அதனை ஏற்றுக் கொண்டு புதிய நிர்வாகிகளாக வி.பி.துரைசாமி, கிருஷ்ணசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். நான் தி.மு.க.வில் இன்னும் வடசென்னை மாவட்டத்தின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். என் பணி தொடர்ந்து இருக்கும். கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று நான் கூறியதில் உறுதியாக இருக்கிறேன்.
 
கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள், கட்சி வேட்பாளர்களின் தோல்விக்கு பாடுபட்டவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் கருணாநிதியிடம் கூறினேன். அவரும் உண்மையை புரிந்து கொண்டு நீக்க உத்தரவிட்டார். ஆனால் அவர்களை கட்சியில் சேர்க்கும் போது என்னிடம் எந்த தகவலும் கூறவில்லை. அவர்களை சேர்க்கும்போது என்னிடம் கேட்டிருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து. நான் இதுகுறித்து தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து கூறலாம் என்று 4 முறை முயற்சித்தேன். ஆனால் அவர் என்னை சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்து விட்டார்.
 
நான் ராஜினாமா கடிதம் கொடுத்த போதும் என்னை அழைத்து விசாரணை செய்வார்கள் என்று நினைத்தேன். என்னையும் விசாரிக்கவில்லை. இங்கு இருக்கும் நிலை தான் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் மத்தியில் இருக்கிறது என்கிற வருத்தத்தில் தான் ராஜினாமா செய்தேன். இதுபோன்ற மனக்குமுறலோடு இருப்பவர்களுக்கு நிச்சயமாக தலைமை ஏற்பேன். இப்போதும் எனக்கு தலைவர் கருணாநிதி தான். கட்சியில் ஜனநாயக ரீதியாக யார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதனை ஏற்றுத் தான் ஆக வேண்டும்.
 
இப்போதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளாக இருவர் நியமிக்கப்பட்டிருப்பதையும் தலைவர் கருணாநிதி மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டிருக்க மாட்டார். அவரையும் மீறி நடந்திருக்கும் செயலாகவே நான் கருதுகிறேன். அவரது முழுகட்டுப்பாட்டில் கட்சி இல்லை. எனக்கு மீண்டும் பொறுப்பு கொடுக்க அழைத்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம். நான் என் மீதான வழக்குகளுக்கு பயந்து தான் இப்படி செயல்படுவதாக கூறுவது சிரிப்பாக இருக்கிறது. என்னைப் பற்றி அனைவருக்குமே தெரியும். நான் பல அடக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.
 
வழக்குகளுக்கெல்லாம் நான் பயப்படுவதில்லை. கட்சி தலைவர் கருணாநிதியையோ, பொருளாளர் ஸ்டாலினையோ வாய்ப்பு வரும்போது சந்திப்பேன்.
 
இவ்வாறு பரிதி இளம்வழுதி கூறினார்.
 
அவருடன் அவரது ஆதரவாளர்கள் சுமார் 20 பேரும் வந்திருந்தனர்.



[Continue reading...]

கலைந்தது ஜெயலலிதா வேஷம் :மூவருக்கும் தண்டனை ரத்து கூடாது - தமிழக அரசு

- 1 comments
 
 
ராஜீவ் கொலையாளிகள் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுக்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும், என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசும் தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
திட்டமிட்டு படுகொலைகள் செய்த இவர்கள் மூவரின் மனுக்களும் ஏற்கத் தக்கவை அல்ல என்று தனது பதில் மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது.
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு கருணை வழங்கக்கோரி 3 பேரும் 2000-ம் ஆண்டில் குடியரசுத் தலைவரிடம் விண்ணப்பித்திருந்தனர்.
 
இந்த விண்ணப்பங்களை நிராகரித்து ஜனாதிபதி 12.8.11 அன்று உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேருக்கும் 9.9.11 அன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று 26.8.11 அன்று சிறை நிர்வாகம் தீர்மானித்தது.
 
இடைக்கால தடை
 
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பேரும் ஆள்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்யநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். 3 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
 
மேலும் இவர்களின் மனுக்களுக்கு மத்திய அரசு, தமிழக அரசு 8 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் 2 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து நேற்று நீதிபதிகள் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
 
மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். தமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் வெங்கடேஷ் பதில் மனு தாக்கல் செய்தார்.
 
மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி ஆஜராக இருப்பதாகவும், எனவே வழக்கை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் எம்.ரவீந்திரன் வாதிட்டார்.
 
வைகோ விவாதம்
 
கொலையாளிகள் தரப்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அந்த கட்சியைச் சேர்ந்த வக்கீல்கள் தேவதாஸ், நன்மாறன், ராம.சிவசங்கர் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது நடந்த விவாதம் வருமாறு:
 
வைகோ: சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்படும் இந்த வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. கடந்த முறை விசாரணைக்கு வந்து தள்ளிவைக்கப்பட்டது. எனவே இந்த வழக்கை நவம்பர் கடைசி வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும்.
 
நீட்டிக்க வேண்டும்
 
அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்: வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தமிழக அரசு எதிர்த்துள்ளது. இந்த வழக்கை மாற்றக்கூடாது.
 
வைகோ: வழக்கை வேறு ஒரு தேதிக்கு தள்ளிவைக்கும் பட்சத்தில், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை மேலும் நீட்டிப்பு செய்ய வேண்டும்.
 
நீதிபதி சி.நாகப்பன்: தடை நீட்டிப்பு என்ற கேள்விக்கே இடம் எழவில்லை. இந்த வழக்கில் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த உத்தரவு வழக்கு விசாரணை முடியும் வரை தொடர்ந்து நீடிக்கும்.
 
நவம்பர் 29-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
 
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், "இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அடுத்த வாரம் அந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. அதை முன்வைத்து இரண்டு தரப்பு வக்கீல்களும் வைத்த வாதத்தை ஏற்று விசாரணையை நவம்பர் 29-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.
 
மூவருக்கும் தண்டனை ரத்து கூடாது - தமிழக அரசு
 
3 கொலை கைதிகளின் மனுவுக்கு பதிலளித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
 
இந்த சம்பவத்தில் ராஜீவ்காந்தியுடன் 15 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பலர் போலீஸ் துறையைச் சேர்ந்தவர்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. வெளிநாட்டு தீவிரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் ஊடுறுவி, இங்குள்ள சிலருடன் சேர்ந்து நடத்திய கொடூர கொலை இது, என்பதுதான் அந்த சம்பவத்தின் வரலாறு.
 
மனுதாரர் மூன்று பேர் மற்றும் நளினி ஆகியோருக்கு தடா கோர்ட்டு விதித்த மரண தண்டனையை உச்சநீதிமன்றம் 11.5.99 அன்று உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து 4 பேரும் தமிழக கவர்னரிடம் கருணை கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை கவர்னர் நிராகரித்தார்.
 
கவர்னர் உத்தரவு
 
அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். கவர்னரின் உத்தரவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, அமைச்சரவையின் பரிந்துரைப்படி புதிய உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டது.
 
நளினிக்கு மட்டும் மரண தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், மற்ற 3 பேருக்கும் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் தமிழக அமைச்சரவை 20.4.2000 அன்று தீர்மானித்தது. அதன்படி கவர்னர் உத்தரவு பிறப்பித்தார்.
 
நல்ல வசதிகள்
 
இதை எதிர்த்து ஜனாதிபதியிடம் 3 பேரும் 26.4.2000 அன்று கருணை மனு கொடுத்தனர். அந்த மனுக்களை நிராகரித்து 12.8.11 அன்று ஜனாதிபதி உத்தரவிட்டார். ஜனாதிபதியின் உத்தரவுப்படி 3 பேரையும் தூக்கில் போடுவதற்கு வேலூர் ஜெயில் நிர்வாகம் எடுத்த முடிவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
 
இவர்களின் கருணை மனு மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு எதுவும் கூற முடியாது. அவர்களுக்கு சிறையில் மருத்துவம் உள்ளிட்ட நல்ல வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.
 
அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தகுதியற்றவை என்பதால் அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் - மத்திய அரசு
 
மத்திய அரசு சார்பில் உள்துறை இணை செயலாளர் சுக் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
 
கருணை மனுவை நிராகரித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை, இவர்கள் 3 பேரும் எதிர்க்கவில்லை என்ற காரணம் ஒன்றே இவர்களின் மனுவை நிராகரிக்க போதுமானதாகும். இவர்கள் விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் சம்பளம் பெற்று வந்த ஊழியர்கள்.
 
ராஜீவ்காந்தியை கொலை செய்யும் ஒரே நோக்கத்தில் இந்தியாவுக்குள் ஊடுறுவி வந்தவர்கள் இவர்கள். இங்குள்ள ஒரு சிலருடன் சேர்ந்து இந்த படுகொலையை செய்தது, தேசத்துக்கு எதிரான செயல் என்று நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
 
திரிவேணிபென் Vs குஜராத் வழக்கு
 
இவர்களின் கருணை மனு மீதான முடிவை காலம்தாழ்த்தி ஜனாதிபதி எடுத்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலை, பொருளாதார நிலை, சர்வதேச சூழ்நிலைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சரவை கூறிய பரிந்துரையின் அடிப்படையில்தான் குடியரசுத் தலைவர் முடிவெடுத்தார்.
 
இந்த காலதாமதத்தால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், கடுமையான பாதிப்பை அடைந்ததாகவும் கூறியுள்ளனர். இதுசம்பந்தமாக திரிவேணிபென் மற்றும் குஜராத் அரசுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய கருத்து பொருத்தமானதாக இருக்கும்.
 
கருணை மனு மீது முடிவெடுப்பதற்கு காலதாமதம் ஏற்பட்ட சூழ்நிலையை பற்றி மட்டும் ஆராய்வோமே தவிர, ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்குள் நுழைய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதோடு, ஒரு வழக்கின் தன்மை மற்றும் அதற்கான விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில்தான், கருணை மனு மீது முடிவெடுப்பதற்கு காலம் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்றும் கருத்து கூறியுள்ளது.
 
மேலும், கருணை மனு மீது முடிவெடுப்பதற்கு காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு உத்தரவு சட்டமாக இருக்கும்போது, இவ்வளவு கொடூரமான குற்றத் தன்மையைக் கொண்ட இந்த வழக்கில், காலதாமதம் ஏற்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது.
 
பலர் மரணம்
 
மற்றவர்களின் வாழ்க்கையை முடித்தவர்கள், தங்கள் வாழ்க்கையின் உரிமையை கோருகின்றனர். 16 பேர் மரணம், 43 பேர் காயம் என்ற அளவோடு மட்டும் இந்த சம்பவம் முடிந்துவிடவில்லை. நாடுமுழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கலவரங்களால் பலர் காயமடைந்தனர். 4 நாட்களாக நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 
தற்போது நன்றாக கல்வி அறிவு பெற்றிருப்பதாகவும், இனிமேல் சமுதாயத்துக்கு உதவிகரமாக இருக்கப்போவதாகவும் மனுதாரர்கள் கூறுவதை சட்டப்பூர்வமாக ஏற்க முடியாது.
 
தவறான முன்னுதாரணம்
 
திரிவேனிபென் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 'வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகு, அந்த தீர்ப்பை மாற்றுவதற்காக நன்நடத்தையை ஒரு காரணமாக ஏற்க முடியாது' என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மனுதாரர்கள் கூறியுள்ள கருத்துகள் அனைத்தையும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
 
சில பிரமுகர்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் நீதிபதிகள் போன்றவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு கடிதம் எழுதி தண்டனையை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதை தண்டனை குறைப்புக்கான காரணமாக எடுத்துக்கொண்டால் அது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும். மதம், சாதி போன்றவற்றின் அடிப்படையில் தண்டனை குறைப்புக்கான கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கிவிடுவார்கள். இது ஒரு சமாதானமற்ற நிலையை நாட்டில் ஏற்படுத்திவிடும்.
 
சுயலாபம் தேடும் அரசியல் கட்சிகள்
 
இவர்கள் அனைவருமே விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். மனுதாரருக்கு ஆதரவு தெரிவிக்கும் சில அரசியல் கட்சிகளில் சில கட்சிகள், மாநிலத்தில் அரசாண்டபோதும், மத்திய அரசுடன் இணைந்திருந்தபோதும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கு பரிந்துரைத்திருந்தனர். அதுமட்டுமல்ல, இந்த மனுதாரர்களின் கருணை மனுவை நிராகரிப்பதற்கும் பரிந்துரைத்தனர்.
 
இந்த விவகாரத்தை வைத்து சுயலாபம் தேடுவதற்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் முயலுகின்றனர். அவர்களால் இந்த விவகாரத்தில் பூசப்படும் சாயம் எதுவும் சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல.
 
சரியான முடிவுதான்
 
ஜெயிலில் இருந்தபோது அவர்களின் உரிமை எதையும் பறிக்கவில்லை. அனைத்து கைதிகளுக்கும் வழங்கப்படும் சலுகைகள், இவர்களுக்கும் வழங்கப்பட்டது. தங்கள் வழக்கை எதிர்கொள்வதற்கு சட்ட ரீதியான வாய்ப்புகளும் தரப்பட்டன. கல்வி கற்றதாக கூறியுள்ளனர். எனவே காலதாமதத்தால் இவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள் என்று கூற முடியாது.
 
மனுதாரர்கள் கூறும் காரணங்களை வைத்து கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு செய்திருந்தால், அது இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்திருந்த உத்தரவை திருத்துவதுபோல் அமைந்திருக்கும். மற்ற மரண தண்டனை கைதிகளின் கருணை மனுவோடு, இவர்களின் மனுவையும் சீர்தூக்கி பார்த்த பின்பே, சரியான முடிவை ஜனாதிபதி எடுத்தார்.
 
இன்னொரு குற்றம் நடக்காமல் இருக்க...
 
இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைதான், இதுபோல் இன்னொரு குற்றம் நடக்காமல் இருக்க உதவும். கருணை மனு மீது காலதாமதமாக எடுத்த முடிவு, எந்த ஒரு குற்றத்தின் தன்மையையும் குறைப்பதற்கு காரணமாக அமையாது.
 
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 72-ம் பிரிவில் ஜனாதிபதிக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிமுறைகள், உத்தரவுகளை மீறி அவர் முடிவு செய்யலாம். அப்படிப்பட்ட அதிகாரம் கொண்ட அவருக்கு, கருணை மனு மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியாது.
 
அதனால் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கு காலக்கெடு இல்லை. எனவே தண்டனையை குறைப்பதற்கு காலதாமதத்தை ஒரு காரணமாக கூற முடியாது. அனைத்து ஆதாரங்களையும், ஆவணங்களையும் பரிசீலித்து பார்த்த பிறகே குடியரசுத் தலைவர் முடிவெடுத்துள்ளார்.
 
மரண தண்டனை விதிக்கப்பட்ட யாருமே, அரசியல் சாசனத்தின் 21-ம் பிரிவில் உள்ள அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதாக குற்றம்சாட்ட முடியாது. இவர்கள் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டியவர்கள்.
 
மக்கள் ஆதரவு இருந்தாலும்...
 
பொதுமக்கள் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதையெல்லாம் இதுபோன்ற கொடூர குற்றங்களை தீர்மானிப்பதற்கான அளவுகோலாக கொள்ளக்கூடாது.
 
இவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். மனுதாரர்கள் தங்கள் வழக்கை எதிர்கொள்வதற்கு அதிக பணத்தை செலவு செய்கின்றனர். மனுதாரர் முருகனின் மகள் லண்டனில் படிக்கிறார்.
 
ஆனால் அவர்களால் பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் இன்னும் இருள் விலகாமல் உள்ளன. குடும்பத்தை நடத்தி வந்த பலர் இவர்களால் உயிரிழந்துவிட்டனர்.
 
காலதாமதம் தரும் வாழும் வாய்ப்பு
 
இவர்களின் கருணை மனு முன்பே முடிவு செய்யப்பட்டு இருந்தால், முன்பே தூக்கில் தொங்கியிருக்க வேண்டும். கருணை மனு காலதாமதமானதால்தான் அவர்களுக்கு வாழும் உரிமை மற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கருணை மனு ஏற்கப்பட்டிருந்தாலும், ஜெயிலில் அவர்கள் இயற்கையாக மரணம் அடையும் வரை இருந்தாக வேண்டும். குறிப்பிட்ட உத்தரவு வந்தால்தான் நிவாரணம் கிடைக்கும்.
 
அவர்கள் தாக்கல் செய்த கருணை மனு எவ்வளவு காலம் நிலுவையில் இருக்க வேண்டுமோ, அவ்வளவு காலம் நிலுவையில் இருக்க வேண்டும். அது தள்ளுபடி ஆகிவிடக்கூடாது என்பதுதான் அவர்களின் எண்ணம். கருணை மனு நிலுவையில் இருந்ததால்தான், ஜெயிலில் அவர்கள் உயிருடன் இருக்கின்றனர்.
 
ரத்து செய்யுங்கள்
 
மரண தண்டனையை ரத்து செய்ய கேட்டு இவர்கள் கூறியுள்ள காரணங்கள் எதையும் ஏற்க முடியாது என்பதால், அபராதம் விதித்து அவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



[Continue reading...]

வேலாயுதம் - FIR

- 0 comments
 


விஜய் பற்றி எவ்வளவு நக்கல் ஜோக்ஸ் வந்தாலும் மக்களுக்கு அவர் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. கில்லி மாதிரி இன்னொரு படம் வராதா என்று மக்கள் ஜாலியாக ஒரு படம் பார்க்க இன்றும் ஏங்குகிறார்கள். அந்த நம்பிக்கையை விஜய் 75% பூர்த்தி செய்திருக்கிறார்.

தங்கை செண்டிமெண்டுடன் கந்தசாமி, அந்நியன் இரண்டையும் கலந்துக்கட்டி அடித்திருக்கிறார்கள். முதல் காட்சி "பாக்கிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில்.." என்று போடும் போது பக்கத்தில் இருப்பவரிடம் "சார் இது வேலாயுதமா ? இல்லை ஏதாவது விஜயகாந்த் படமா ?" என்று கேட்க அவரும் "எனக்கும் சந்தேகமா தான் சார் இருக்கு" என்றார்.



தீவிரவாதிகளுக்கு இந்திய அரசியல்வாதியுடன் (ஹோம் மினிஸ்டர்) தொடர்பு என்ற அதே ஃபார்முலா!. விஜய் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு சென்று சண்டை போட்டால் கூட இருக்கும் கிராமத்து மக்கள், சந்தானம், தங்கை, இரண்டு ஹீரோயின், போலீஸ் என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு போக முடியுமா ? செலவு என்ன ஆவது அதனால் தீவிரவாதிகள் சொந்த செலவில் (இவரை தேடி சென்னை வந்து) சூனியம் வைத்துக்கொள்கிறார்கள்.

விஜய் ஓபனிங் சீன் அருவாளுடன் வந்து ரயில் சீட் போடும் அந்த காமெடி - சூப்பர், அண்ணன் தங்கை பாசத்தை காண்பிக்க அவர் கோழி பிடிக்கும் காமெடி, பிறகு சீட்டு கம்பெனியில் போட்ட பணத்தை எடுக்க சென்னை வருவது, அவர் பணத்தை லவுட்ட சந்தானம் போடும் பிளான் என்று படம் முழு மூச்சு காமெடியாக மாறுகிறது. சும்மா சொல்லக்கூடாது ஜாலியாக போகிறபோக்கில் சந்தானம் பேசும் வசனங்கள் படத்துக்கு பலம். கடைசியில் அவர் "ஏம்பா இதை மூன்றாவது சீனிலேயே சொல்லியிருக்க கூடாதா ?" என்று அவர் விஜயிடம் கேட்பது அக்மார்க் சந்த(தா)னம் காமெடி.

பத்திரிகையாளரான ஜெனிலியா வேலாயும் கதாபாத்திரத்தை கொண்டு வர காமெடியுடன் அதிரடி சரவெடியாக மாறுகிறது படம். ஹன்சிகா முறை பெண்ணாக டினோபால் போட்ட உடம்பை அடிக்கடி காண்பிக்கிறார். இவர் கிராமத்து பெண்ணாம் :-)

சினிமா வில்லன் என்றால் என்ன செய்வார் ? பாம் வைப்பார், கள்ள நோட்டு அடிப்பார், பெண்கள் வியாபாரம் செய்வார், சீட்டு கம்பெனி நடத்தி மக்களின் பணத்தை ஏமாற்றுவார் இல்லை ரயிலை கவுப்பார். இந்த பட வில்லன் பயங்கிரம் இவை எல்லாவற்றையும் செய்கிறார்!. பாம் வைக்கும் வெளிநாட்டு தீவிரவாதி யாராக இருந்தாலும் அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நியதிப்படி இந்த படத்திலும் அவர்களேதீவிரவாதிகளாக வருகிறார்கள். அவரை சப்போர்ட் செய்ய குங்கும போட்டு இட்டுக்கொண்டு ஒரு மந்திரி வந்தால் சமய உணர்வு பாதிக்கப்படாது என்ற ஃபார்முலாவை தவறாமல் இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார்.

விளையாட்டு போட்டிக்கள் நடக்கிறதோ இல்லையோ, மக்களை கூட்டி சினிமா டான்ஸ் ஆட மற்றும் படத்தில் சினிமா ஹீரோ மக்களை கூட்டி பிரசங்கம் செய்ய நேரு விளையாட்டு அரங்கம் என்று ஃபார்முலாபடி இந்த படத்திலும் கடைசியில் வருகிறது. ஏனோ முகமூடி போட்டுக்கொண்டு வரும் போது அந்நியன் ஞாபகம் வருகிறது.

சந்தானத்தின் 'குசு' வசனத்துக்கு பிறகு "உங்களால் ஓசாமா பின்லேடனை கூட காப்பாத்த முடியலை, ஆனால் கசாப்பை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்" என்று போலீஸ் பேசும் வசனம்.

மசாலா படத்துக்கு உண்டான கேமரா, இசை என்று படம் சரியான எண்டர்டெயினர். தியேட்டர் காரர்கள் நினைத்தால் இன்னும் கொஞ்சம் சரியாக படத்தை எடிட் செய்யலாம்.
கொடுத்த காசுக்கு ஏமாற்றவில்லை. குடும்பத்துடன் ஜாலியாக பார்க்கலாம், விஜய்யை கிண்டல் பண்ணலாம்.


சிக்ஸ் பேக் ஃபீவர் விஜயையும் தொற்றுக்கொண்டு விட்டது. கடைசியில் உடம்பை முறுக்கேற்றி சண்டை போடுகிறார். எதற்கு இதெல்லாம் மிஸ்டர் விஜய் ? ஆறாம் அறிவை ஆப் செய்துவிட்டு பார்க்கும் எங்களுக்கு நீங்கள் கெமிக்கல் ஃபேக்டரியை நோக்கி ஓடும் ரயிலை சடன் பிரேக் போட்டு நிறுத்தும் காட்சி ...உங்களுக்கும் ஒரு பிரேக் தான்.


இட்லிவடை மார்க் - 6/10

முதலில் "Thanks Jaya TV" என்று வருகிறது :-)

நாளை ஏழாம் அறிவு விமர்சனம்

[Continue reading...]

வெற்றி சான்றிதழை திரும்ப பெற்றனர்: 98 வயது மூதாட்டிக்கு அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி

- 0 comments
 
 
 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்குளம் 1-வது பிட் பகுதியில் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 98 வயது மூதாட்டி தாடகத்தி என்பவர் போட்டியிட்டார். அதே பதவிக்கு மணிமாறன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் அதிகாரிகள் தவறுதலாக தாடகத்தி வெற்றி பெற்றதாக அறிவித்து அவருக்கு சான்றிதழையும் வழங்கி விட்டனர்.
 
இந்நிலையில் மணிமாறன் தரப்பினர் தாங்கள் தான் வெற்றி பெற்றதாகவும் அதிகாரிகள் தவறுதலாக மாற்றி அறிவித்து விட்டதாக மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் புகார் செய்தனர். பின்னர் கலெக்டர் சகாயம் உத்தரவின்பேரில் வாக்கு எண்ணிக்கை சரி பார்க்கப்பட்டது. அப்போது தாடகத்தி தோல்வி அடைந்ததும் மணிமாறன் வெற்றி பெற்றதும் தெரியவந்தது.
 
இதை தொடர்ந்து தாடகத்திடம் கொடுக்கப்பட்ட வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் திரும்ப வாங்கி விட்டு மணிமாறன் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
 
இது குறித்து மூதாட்டி தாடகத்தி தரப்பினர் கலெக்டரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிகாரிகள் திருப்பி வாங்கி கொண்டனர். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் செய்தனர். பின்னர் கலெக்டர் உத்தரவின்பேரில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



[Continue reading...]

ஈரோடு மேயருக்கு செங்கோலால் வந்த சிக்கல்!

- 0 comments
 
 
 
ஈரோடு மாவட்ட மேயருக்கு செங்கோலால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
 
நகராட்சியாக இருந்த ஈரோடு கடந்த 2008ம் ஆண்டு மாநகராட்சியாக்கப்பட்டது. எனவே நகரமன்ற தலைவராக இருந்த குமார் முருகேஷ் மேயராக்கப்பட்டார். இதையடுத்து பதவியேற்பு விழாவில் அவருக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி கையால் செங்கோல் வழங்குவதாக இருந்தது.
 
இந்நிலையில் முருகேஷ் தனது சொந்த பணம் ரூ. 1.35 லட்சம் செலவு செய்து 3,400 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கோல் செய்து வாங்கினார். அதை பதவியேற்பு விழாவில் கருணாநிதி கையால் வாங்கிக் கொண்டார். கடந்த வாரம் நடந்த மேயர் தேர்தலில் போட்டியிட்ட முருகேஷ் எப்படியும் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் செங்கோலை மாநகராட்சி அலுவலகத்திலேயே வைத்திருந்தார்.
 
ஆனால் எதிர்பாராவிதமாக மல்லிகா பரமசிவம் மேயராகிவிட்டார். இதையடுத்து முருகேஷ் தனது செங்கோலை திருப்பித் தருமாறு மாநகராட்சி ஆணையரிடம் கேட்டுள்ளார்.
 
இது குறித்து முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
 
எனது சொந்த பணத்தில் வாங்கிய செங்கோலுக்கான தொகையை மாநகராட்சி நிதியில் இருந்து எடுத்துக் கொடுக்குமாறு அப்போதைய ஆணையாளர் செல்வராஜிடம் கேட்டேன். சரி என்று சொன்னவர் கடைசி வரை பணத்தை தரவேயில்லை. தற்போதுள்ள ஆணையாளர் செங்கோலை திருப்பிக் கேட்டால் பதில் பேசமாட்டேன் என்கிறார் என்றார்.
 
போகிற போக்கைப் பார்த்தால் மல்லிகாவும் ஒரு செங்கோல் வாங்க வேண்டியது வரும் போலும்.



[Continue reading...]

இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீசுக்கு தர்ம அடி

- 0 comments
 
 
புரசைவாக்கத்தை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி ஜெர்சி (30) . பம்மலில் உள்ள தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக ஜெர்சி வந்தார்.
 
2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அதே பகுதியில் வசிக்கும் ஆவடி சிறப்பு காவல்படை காவலர் அருண்குமார் (28), ஜெர்சி மீது காதல் கொண்டுள்ளார். ஜெர்சியிடம் இதுபற்றி ஜாடைமாடையாக பேசியுள்ளார். பலமுறை அவரை செல்போனில் படம் பிடித்துள்ளார்.
 
 
 
 
கடந்த ஞாயிற்றுக்கிழ மை விடுமுறையில் அருண்குமார் வீட்டில் இருந்தார். ஜெர்சி வீட்டிலும் யாரும் இல்லை.
 
இதையறிந்த அருண்குமார், ஜெர்சி பாத்ரூமில் குளிக்கும்போது எட்டிப்பார்த்ததோடு, செல்போனில் படம் எடுக்கவும் முயன்றுள்ளார்.
 
ஜெர்சி கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அருண்குமாரை அடித்து உதைத்தனர். தடுக்கமுயன்ற அவரது மனைவிக்கும் அடி விழுந்தது.
 
தகவலறிந்த சங்கர் நகர் போலீசார் அருண்குமாரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
 
அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். ஆனால் அவர் மீது வழக்கு பதிவு செய்வதை விட்டு விட்டு "அருண்குமாரை ஏன் அடித்தீர்கள்? அவரது மனைவியை எதற்காக தாக்கினீர்கள்? உடனடியாக எங்களுக்குதானே தகவல் கூறியிருக்க வேண்டும். அருண்குமாரின் மனைவி காயம் அடைந்துள்ளார்.
 
 
எனவே உங்கள் மீதுதான் வழக்கு தொடர வேண்டும்" என்று பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இதனால் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர வாக்குவாதத்துக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.



[Continue reading...]

உடல் ஆரோக்கியத்துடன் 150 வயது வரை வாழஒரு மாத்திரை போதுமாம்

- 0 comments
 
 
 
மருத்துவ துறை வளர்ச்சியின் காரணமாக, மனிதனின் சராசரி வயது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்தியர்களின் சராசரி வயது 69 ஆக உள்ளது. இந்நிலையில், ஆரோக்யமான உடல்நலத்துடன் 150 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கான மாத்திரையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் பீட்டர் ஸ்மித் கூறுகையில், மனிதனுக்கு வயதாவதை ஒத்திப்போடும் மாத்திரையை கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 150 ஆண்டுகளைத் தாண்டி வாழ முடியும். அதாவது வயதாவதைத் தடுக்கும். இதுமட்டுமல்லாமல் நோய்நொடியின்றி ஆரோக்யமாக வாழவும் இந்த மாத்திரை உதவும். இந்த மாத்திரை உடலில் உள்ள செல்களை புதுப்பித்து உற்சாகமுடன் இருக்க வகை செய்யும் என்றார்.
 
ஹார்வர்டு யுனிவர்சிட்டி பேராசிரியரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான டேவிட் சின்க்ளெய்ர் கூறுகையில், மனிதன் வயதாவதற்கு உடலில் உள்ள ஜீன்கள் குழுவே முக்கிய காரணமாக உள்ளது. அவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பை நமது உடல் பெற்றிருக்கிறது. ரெட் ஒயினில் உள்ள ஒரு பொருள் ரெஸ்வரேட்டல் என்ற தாவரத்திலும் உள்ளது. இதை ஈஸ்ட், புழு, ஈ மற்றும் எலி ஆகியவற்றில் செலுத்தியபோது அதன் வாழ்நாள் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்நாளை அதிகரிப்பதற்கான மாத்திரையை தயாரிக்க முயற்சி நடைபெற்று வருகிறது என்றார்.



[Continue reading...]

மனமுடைந்து குமுறினார் சச்சின் : சேப்பல் பகீர்

- 0 comments
 
 
 
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2005 முதல் 2007 வரை பயிற்சியாளராக இருந்தவர் கிரேக் சேப்பல். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் பயிற்சியாளராக இருந்த போது பல்வேறு சர்ச்சைகள் இருந்தது. கேப்டன் கங்குலி அணியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். உலககோப்பையில் இந்திய அணி முதல் சுற்றிலேயே தோல்வியடைய சேப்பலின் தவறான வியூகங்களே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சேப்பல் 'பியர்ஸ் போகஸ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.அதில், சச்சின் குறித்து பரபரப்பு கருத்தை கூறியுள்ளார். இந்த புத்தகத்தில் மலேசியாவில் 2006ல் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது சச்சின் சரியாக ஆடவில்லை. இதையடுத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக என்னுடன் அவர் உரையாடினார். அன்றைய ஆட்டத்தில் தனது செயல்பாடு குறித்தும், காயங்கள் குறித்தும் மனமுடைந்து என்னிடம் பேசினார். இதிலிருந்து விடுபடுவதற்கு ஆலோசனைகளையும் கேட்டார். கோடிக்கணக்கான மக்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளதால் அதன் காரணமாக சச்சின் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். பிராட்மேனிடம் இருந்துகூட ஆஸி. ரசிகர்கள் அந்த அளவு எதிர்பார்க்க மாட்டார்கள். சச்சினுக்கு ஓய்வு என்பதே இல்லை என்று கூறியுள்ளார்.



[Continue reading...]

நிர்வானமாகவும் நடிப்பேன்"-பிரபல நடிகர் பரப்பரப்பு பேட்டி

- 0 comments
 
 
 
ஒளிப்பதிவளாராக சினிமாவில் அறிமுகமான இளவரசு, தற்போது ஒரு சிறந்த நடிகராக கோடம்பாக்கத்தையே கலக்கி வருகிறார். வில்லன், குணச்சித்திரம், காமெடி என அத்தனை ஏரியாக்களிலும் ஸ்கோர் பண்ணும் இவர், ராசுமதுரவன் இயக்கத்தில் வெளியான 'முத்துக்கு முத்தாக' படத்தில் கதையின் நாயகனாக நடித்து அசத்தினார்.
 
தற்போது மீண்டும் அசத்தப் போகும் இளவரசு 'கொண்டான் கொடுத்தான்' என்ற படத்தில் சிறுவிவசாயியாக நடிக்கிறார். இந்த படத்தில் கோவனத்துடன் இளவரசு, வயலில் ஏர் உழும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஜி.இராஜேந்திரன்.
 
இது பற்றி கூறிய இளவரசு, "கதாபாத்திரத்திற்கு தேவையென்றால் கோவனமென்ன நிர்வானமாகவும் நடிக்க நான் தயார். இயக்குநர்களின் நடிகன் நான். கதாபாத்திரங்களை நேசிப்பவன் நான்." என்கிறார்.



[Continue reading...]

மின் தடை நேரம் அதிகரிக்க திட்டம்

- 0 comments
 
 
 
தமிழகம் முழுவதும் நிலவும் மின்சார தட்டுப்பாட்டைப் போக்க, 2 மணி நேர மின் தடையை, 3 மணி நேர மின் தடையாக அமல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. ஓரிரு நாளில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம். பருவமழை துவங்கியுள்ளதால், காற்றாலை உற்பத்தி அதிகரிக்கக்கூடும். அவ்வாறான நிலையில், மின் தடையில் இருந்து விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
தமிழகத்தில், வீடு, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என, இரண்டு கோடி மின் இணைப்புகள் உள்ளன. மொத்த உற்பத்தி தேவையான, 10 ஆயிரம் மெகாவாட்டில், தற்போது, 8,500 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. தொழிற்சாலைகளுக்கு, 3,500 மெகாவாட் மின்சாரம் போக, மீதமுள்ளவற்றில் வீடுகளுக்கும், வணிக பயன்பாட்டுக்கும், இலவச மின்சாரத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. 2,500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைத்தால், அனைத்து பயன்பாட்டுக்கும் எந்தவித தடையுமின்றி வழங்க முடியும். தற்போது, மின் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில், இலவச மின்சாரத்தையும், அனுமதி வாங்காமலும், தொழிற்சாலை மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு மின்சாரத்தை திருடி வருகின்றனர். சில இடங்களில், அதிகாரிகளும் இதற்கு துணை போகின்றனர். மின் திருட்டு தொடர்வதால், மின்சார தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது.
 
நாள்தோறும் இரண்டு மணி நேர மின் தடை அமலில் உள்ள நிலையில், தற்போது, 4 முதல் 5 மணி நேரம் மின் தடை ஏற்படுத்தப்படுகிறது. அவற்றை, மூன்று மணி நேர தடையாக முறைப்படுத்த, தமிழக அரசிடம் மின்வாரியம் அனுமதி கேட்டுள்ளது. சென்னையில் ஒரு மணி நேரம் என்பதை, இரண்டு மணி நேரமாக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எண்ணூர் அனல் மின் நிலையத்தில், இயந்திர கோளாறால், அங்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இருந்து எப்போதும் கிடைக்கும், 840 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், உற்பத்தியில் தடையில்லை. காற்றாலை உற்பத்தி குறைந்ததாலும், மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
தொழிற்சாலைகளுக்கு, 40 சதவீத மின் தடை ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது, 20 சதவீத மின் தடை அமலில் உள்ளது. அவற்றை, 30 சதவீதமாக உயர்த்தவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு, 2 மணி நேரம் என்பதை, 3 மணி நேர மின் தடையாக அறிவிக்க, மின்வாரியம் அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. ஓரிரு நாளில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம். வெளி மாநிலங்களிலும், மின் உற்பத்தி குறைந்து வருவதால், மின் தடை, காற்றாலை உற்பத்தி கிடைக்கும்பட்சத்தில், அதன் மூலம் நிலைமையை சமாளிக்க அரசு முடிவு செய்துள்ளது.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger