கே. ராஜேஸ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் பெரும் வரவேற்பு பெற்ற 'அமரன்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.
1992-ம் ஆண்டு ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. ஆதித்யன் மற்றும் விஸ்வா குரு இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். அன்னலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 'அமரன்' படத்தின் மூலமாக கார்த்திக் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் திரைப் பாடகர்களாகவும் அறிமுகமானார்கள்.
'அனேகன்' படத்தின் மூலமாக மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற கார்த்திக், 'அமரன்' இரண்டாம் பாகத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். கே. ராஜேஸ்வர் இரண்டாம் பாகத்தையும் இயக்க, மே அல்லது ஜுன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் கார்த்திக் உடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.