அரக்கோணம், அக்.18–
அரக்கோணம் அருகே உள்ள மின்னல் கிராமம் மெயின்ரோட்டு தெருவில் வசிப்பவர் சக்கரபாணி நாயுடு (வயது 47). சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சக்கரபாணி நாயுடுவின் மனைவி விஜயலட்சுமி (43) தனது வீட்டு திண்ணையில் உட்கார்ந்து பூ கட்டிக் கொண்டு இருந்தார்.
அப்போது தேன் விற்பது போல் வந்த 2 பெண்கள், விஜயலட்சுமியிடம் உனக்கு ஏதோ மன வருத்தமும், பிரச்சினையும் இருப்பதாக தெரிகிறது. எங்களுக்கு தெரிந்த ஒரு பெண் ஜோதிடமும், மாந்திரீகமும் தெரிந்தவர். அவர் உன்னை வெள்ளிக்கிழமையன்று வந்து பார்ப்பார். அதன்பிறகு உனக்கு நல்ல காலம் பிறக்கும். உன்னிடம் இருக்கும் பணமும், நகையும் இரட்டிப்பாகும் என கூறி உள்ளனர். அதன்பின்னர் இரு பெண்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.
நேற்று காலை 11 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜயலட்சுமி, வீட்டில் தனியாக இருந்தார். விஜயலட்சுமியை பார்த்த அந்த பெண் உனக்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால் உனது பணமும், நகையும் இரண்டு மடங்காகும். மேலும் வாழ்க்கையில் பல வசதிகளை பெறுவாய் நீ என கூறி உள்ளார். ஏற்கனவே தேன் விற்கும் பெண்கள் கூறிய மாந்திரீக பெண் இவர்தான் என தெரிந்து கொண்ட விஜயலட்சுமி வீட்டிற்குள் அந்த பெண்ணை அழைத்து சென்றார்.
அங்கு தரையில் அமர்ந்த அந்த பெண், வீட்டிற்குள்ளே சென்று மூடி உள்ள ஒரு பாத்திரத்தை கொண்டு வா என கூறி உள்ளார். பாத்திரத்தை விஜயலட்சுமி கொண்டு வந்ததும் அதில் கொஞ்சம் அரிசியையும், குங்குமத்தையும் போட்ட அந்த பெண் உன்னிடம் உள்ள நகைகளையும், பணத்தையும் இந்த பாத்திரத்தில் போடு என கூறி உள்ளார். உடனடியாக விஜயலட்சுமி தன் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையையும், பீரோவில் இருந்து எடுத்து வந்த 15 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் பாத்திரத்தில் போட்டு மூடி கொடுத்து உள்ளார். அதை பெற்றுக்கொண்ட அந்த பெண் உள்ளே சென்று ஒரு புடவை எடுத்து வா என்று கூறி உள்ளார். புடவை வைத்து பூஜை செய்வது போல் நடித்த அந்த பெண் இன்று மாலை 6 மணிக்கு மேல் விளக்கு வைத்த பிறகு இந்த பாத்திரத்தை திறந்து பார்.
அப்போது உனது நகையும், பணமும் இரு மடங்காக மாறி இருக்கும் என கூறி விஜயலட்சுமிக்கு விபூதியும், குங்குமமும் கொடுத்து நெற்றியில் பூச சொல்லி விட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வாங்கி குடித்து விட்டு பூஜை முடிந்தது என கூறி விட்டு வெளியே சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவரது உறவுக்கார பெண் ஒருவர் விஜயலட்சுமியை பார்க்க வந்துள்ளார். அந்த பெண்ணிடம் விஜயலட்சுமி காலையில் வந்த பெண் மற்றும் அவர் செய்த பூஜை குறித்து விளக்கமாக கூறி உள்ளார். அதை கேட்ட உறவுக்கார பெண் என்ன இது, இந்த காலத்தில் போய் இப்படி எல்லாம் பூஜை செய்கிறாயே, ஏமாந்து விடப் போகிறாய். முதலில் சென்று அந்த பாத்திரத்தை திறந்து பார் என்று கூறி உள்ளார். உடனடியாக விஜயலட்சுமி ஓடிச் சென்று பூஜை அறைக்குள் வைத்திருந்த பாத்திரத்தை திறந்து பார்த்தபோது அதில் பணமோ, நகையோ இல்லை. வெறும் அரிசியும், சிறிது குங்குமமும்தான் இருந்தது.
அதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயலட்சுமி உடனடியாக உறவினர்கள் மூலமாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன், சப்–இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 10 பவுன் நகையையும், 15 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் பறிகொடுத்த விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாந்திரீகம் செய்வதாக கூறி ஏமாற்றி சென்ற 30 வயது பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மின்னல் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[Continue reading...]