சீர்காழி, அக்18–
சீர்காழியில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நீருடன் செப்டிக்டேங்க் கழிவு நீரும் கலந்து தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் பேருந்துநிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் அவலநிலை இருந்துவருகிறது. மேலும் பேருந்து நிலையவளாகத்தில் போடப்பட்ட சிமெண்ட் தரை தளங்கள் சிதலமடைந்து குண்டும் குழியுமாக காணபடுகிறது. இந்த குழிகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் எது மேடு எது என்று தெரியாமல் பயணிகள் விழுந்து எழுந்து செல்கின்றனர்.
மழைநீருடன் கழிவுநீர் கலந்து இருப்பதால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி பேருந்துநிலையத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றியும், சிதலமடைந்த சிமெண்ட் தரை தளங்களை சீரமைக்கவும் பயணிகள் உட்கார வசதி ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதேபோல் சீர்காழி நகர் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது குறிப்பாக சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மாணவ–மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?