Friday 10 February 2012

சிம்பு, தனுஷ் பாடல்கள் : அண்ணா பல்கலை துணைவேந்தர் கடும் கண்டனம்

- 0 comments
 
 
சென்னையில் நேற்று பள்ளி ஆசிரியை ஒன்பதாம் வகுப்பு மாணவனால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நகரையே உலுக்கிவிட்டது. சினிமா, டி.வி.க்களில் வரும் வன்முறை காட்சிகளே இந்த கொலைக்கு காரணம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் வருத்தம் தெரிவித்தார்.
 
 
அவர் கூறும்போது, வகுப்பறையில் ஆசிரியை கொலை செய்யப்படும் சம்பவத்தை தமிழ்நாட்டில் கேள்விப்படுவது இதுதான் முதல்முறை. சினிமா, டி.வி.க்களில் வன்முறை தூண்டும் காட்சிகளால் மாணவன் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
 
 
மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அவசியம் என்றார். புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ், சினிமா பாடல்கள்மேல் சாடினார்.
 
'நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே', 'திருடாதே பாப்பா திருடாதே', 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி', 'வாழ நினைத்தால் வாழலாம்' என பழைய பாடல்கள் குழந்தைகளை ஒழுக்க சீலர்களாக வளர்க்க பயன்பட்டன.
 
 
ஆனால் இப்போது 'ஒய்திஸ் கொலைவெறிடி', 'உதடா அவளா வெட்டுடா அவள', 'எவன்டி உன்ன பெத்தான் கையில கிடைச்சா செத்தான்', 'லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே' என்றெல்லாம் பாடல்கள் வருகின்றன. இவை மாணவர்கள், இளைஞர்கள் மனதில் வன்முறை தனமான வக்கிரங்களை பதிய வைக்கின்றன. ஆசிரியையை மாணவன் கொன்றத்திற்கு இது போன்ற பாடல்கள்தான் காரணம் என்றார்.
 
 
மயிலாப்பூரைச் சேர்ந்த கவுதம் கூறும்போது, 'சினிமா பாடல்கள் இப்போதைய தலைமுறையை ஒழுக்கமில்லாதவர்களாக மாற்றி வருகின்றன. சினிமாவில் இருப்பவர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்' என்றார்.



[Continue reading...]

காப்பி அடிக்கப்பட்டது தான் தோனி :பிரகாஷ்ராஜ் ஒப்புதல் வாக்குமூலம்

- 0 comments
 
 
 
நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்கி வெளிவந்திருக்கும் படம் தோனி. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். பிரபல தொலுங்கு இயக்குனர் பூரி ஜகநாத்தின் மகன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபு தேவா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
 
 
 
இதில் மாணவன் சரியாக படிக்கவில்லை என்றால், அவன் முட்டாள் இல்லை. அவனுக்குள் இருக்கும் வேற திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். படிச்சு மார்க் வாங்குவது மட்டும் தான் கல்வி என்பதை மாற்றி நம் கல்வி முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது தான் படத்தின் மையக் கருத்து.
 
இந்த படம் மராத்தி படமான 'ஷீக்‌ஷநச்சிய ஆய்ச கோ' என்ற படத்தின் தழுவலில் அமைந்துள்ளது. படிப்பில் கவனம் செலுத்தாத மாணவன், தோனி மாதிரி கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறான். அதை புரிந்து கொள்ளாத தந்தையும் ஆசிரியரும் அவனை துன்புறுத்துவதால், அந்த மாணவன் 'கோமா' நோய்க்கு தள்ளப்படுகிறான். அந்த நோயிலிருந்து மகனை தந்தை போராடி மீட்டெடுத்து, மீண்டும் கிரிக்கெட்டில் உற்சாகப்படுத்துவது தான் கதை.
 
இதைப்பற்றி பிரகாஷ் பேசும்போது, நல்ல கதையை எங்கிருந்து எடுத்தால் என்ன? நான் சினிமாவை வியாபாரமாக பார்ப்பவன் அல்ல. என் நிருவனமான டூயட் மூவீஸ் தாயாரிக்கும் அனைத்து படங்களும் தரமான நல்ல படங்களாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
 
நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் தோனி படத்தை நானே தயாரித்து இயக்கி இருக்கிறேன் என்றார்.
 
மராத்தியில் வெளியான ஒரு படம் தான் இப்படத்துக்கு இன்ஸ்பிரேஷன். நல்ல கதைகளை எந்த மொழியில் இருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதில் எந்த தவறும் இல்லை.
 
கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்பதையும், மாணவர்களுக்கு இருக்கும் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் இந்தியில் வெளியான "தாரே ஜமீன் பர்", " 3 இடியட்ஸ்" போன்ற படங்கள் உணர்த்தின. அதே கருத்தை உணர்த்தும் வகையில் "தோனி" படமும் அமைந்திருக்கிறது.

 


[Continue reading...]

தனுஷ் - சிம்பு மோதல்!

- 0 comments
 
 
தனுஷும் சிம்புவும் வெளியில் சிரித்துப் பேசி கட்டிப் பிடித்து போஸ் கொடுத்தாலும், உள்ளுக்குள் அப்படி இல்லை என்பது கோலிவுட் அறிந்த சமாச்சாரம்.
 
கொஞ்ச நாள் அடங்கியிருந்த இவர்களின் பகை, மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது, ட்விட்டர் வழியாக.
 
சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு பாடலை உருவாக்கியிருந்தார் தனுஷ். இந்தப் பாடல் யு ட்யூபில் வெளியானது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பாடலை யுட்யூப் நீக்கிவிட்டது. அதற்குள் 4.5 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டிருந்தனர்.
 
உடனே தனுஷ், "அடுத்தவர் துன்பத்தைப் பார்த்து சிலர் சிரித்து மகிழ்கிறார்கள். மனித இனம் அன்பு செலுத்த படைக்கப்பட்டது என்ற உண்மை புரியாத அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்," என்று ட்வீட் செய்திருந்தார்.
 
உடனே சிம்பு தனது ட்விட்டரில், "காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமா இருக்காங்களே," என்று ட்வீட் பண்ணியிருந்தார்.
 
அடுத்த சில நிமிடங்களில் தனுஷ்: "பிரதர், அந்தப் பாட்டை சச்சினுக்காக இலவசமாதான் செய்து கொடுத்தேன். பாடல் உருவாக்கத்துக்கான செலவு மட்டும் பூஸ்ட் நிறுவனம் கொடுத்திருக்கு," என்று கூறியிருந்தார்.
 
உடனே பதிலுக்கு சிம்பு, "உலகில் யாரும் யாருக்கும் எதிரியில்லை. வெற்றிதான் ஒருவரை உலகுக்கு காட்டுகிறது. தோல்வியோ உலகை உனக்குக் காட்டுகிறது," என தத்துவமழை பொழிந்திருந்தார்.
 
"போங்கப்பா... பொழப்பை சரியா பாருங்க... இல்லன்னா உங்களை ஒருத்தனும் பார்க்க மாட்டான்" - இது குறுக்கில் புகுந்த ஒரு ரசிகரின் கமெண்ட்!
 
இதெப்டி இருக்கு!



[Continue reading...]

சங்கரன் கோயில்: மதிமுக தனித்துப் போட்டி - வைகோ அறிவிப்பு!

- 0 comments
 
 
 
ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகர் விஜயசேஷ மகாலில் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
 
*முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு கேரளாவுக்கு சாதகமாக நடக்கக்கூடாது. அணையை பாதுகாத்து நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
*மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை தேசிய உடமை ஆக்க வேண்டும். அதற்கான சட்டத்தை பாராளு மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
 
*தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் உதவி வழங்க வேண்டும். தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
 
*மின்சார நிலமை முன்பு இருந்ததைவிட மோசமாகி உள்ளது. இந்த மின்வெட்டுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது. மின் கட்டணத்தை எந்த காரணத்தை கொண்டும் உயர்த்தக்கூடாது.
 
*அமராவதி, பவானி ஆற்றுநீரை தடுக்கும் விதத்தில் கேரள அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
 
*ஒரு டன் கரும்புக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
 
*தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
 
*திருப்பூர் சாயக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
 
*ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
 
*மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
 
*பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
*தமிழக அரசு ஒப்பந்தப் பணிகளில் மின் ஆளுமை முறையை பின்பற்ற வேண்டும்.
 
*படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
 
*சமச்சீர் கல்வியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
 
*அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்கூடாது. கோட்டூர்புரத்திலேயே தொடர்ந்து இயங்க வேண்டும்.
 
*தமிழ்நாட்டில் ஊழலை அகற்றும் வகையில் லோக் ஆயுக்தா (ஊழல் விசாரணை மன்றம்) அமைக்க வேண்டும்.
 
*விஷவாயு விபத்துக்கு காரணமான டோகெமிக்கல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிட்டால், இந்தியா ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வேண்டும்.
 
*கூடங்குளம் அணு மின்நிலையத்தை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
*சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனையை குறைக்க தமிழக அரசு அதிகார உரிமையை பயன்படுத்த வேண்டும்.
 
*இலங்கை தமிழர் பிரச்சினையில் சிங்கள அரசுக்கு மத்திய அரசு உடந்தையாக இருக்கக் கூடாது. இலங்கையில் தமிழர்களிடம் ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
 
*தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக ம.தி.மு.க.வை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்துச் செல்வது என்றும் சங்கரன் கோவில் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது என்றும் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
 
இவ்வாறு தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.



[Continue reading...]

சந்திரபாபு நாயுடு நாக்கை அறுப்பேன்: சந்திரசேகரராவ் மிரட்டல்

- 0 comments
 
 
 
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு 2 நாட்களுக்கு முன்பு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திர சேகரராவ் மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறினார். மேலும் அவர் கூறும் போது, ஆந்திராவில் போலவரம் நீர்த்தேக்கம் கட்டும் பணியை சந்திரசேகரராவிடம் மாநில அரசு ஒப்படைத்துள்ளது. இதனால்தான் அவர் தனித் தெலுங்கானா போராட்டத்தை கைவிட்டு விட்டார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சந்திரசேகரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
சந்திரபாபு நாயுடுவை ஊழலில் பிறப்பிடம் என்றே சொல்லலாம். அவரது ஆட்சியில்தான் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகமாக நடந்தது. இதனால்தான் ஆந்திர மக்கள் அவரது ஆட்சியை தூக்கி எறிந்தார்கள். போலவரம் நீர்த்தேக்கம் கட்டும் பணியை ஆந்திர அரசு என்னிடம் ஒப்படைத்திருப்பதாக சந்திரபாபு நாயுடு பொய்யான தகவலை கூறி வருகிறார்.
 
என் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தால் சந்திரபாபு நாயுடுவின் நாக்கை அறுப்பேன். அவரது பேச்சு எல்லை மீறி விட்டது. அவரை தெலுங்கானா மக்கள் சும்மாவிட மாட்டார்கள். சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில்தான் விவசாயிகள் தற்கொலை அதிகரித்தது. விவசாயிகளுக்கு அவர் எந்தவித உதவிகளும் வழங்க வில்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.



[Continue reading...]

காதல் தோல்வி விரக்தியால் தமிழ் சினிமாவுக்கு முழுக்கா?

- 0 comments
 
 
 
காதல் முறிவு ஏற்பட்டதால்தான் தமிழ் படங்களில் தமன்னா நடிக்க மறுக்கிறார் என்று பரபரப்பாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் விளக்கம் அளித்தார். நடிகர் ஒருவரை தமன்னா காதலித்ததாகவும் அது தோல்வியில் முடிந்த தாகவும் பேசப்பட்டது. இந்நிலையில், 'இனி தமிழில் நடிப்பதில்லை' என்று அதற்கு பிறகுதான் தமன்னா முடிவு எடுத்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஹமத் இயக்க ஜீவா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் தமன்னா நடிக்கிறார் என்று கோலிவுட்டில் தகவல் பரவியது. இதை தமன்னா மறுத்திருக்கிறார்.
 
இதுபற்றி அவர் கூறியதாவது: என்னை பற்றி பல வதந்திகள் வருவது தெரியும். தமிழில் நடிக்காததற்கும் ஒரு வதந்தி பரப்புகிறார்கள். தமிழில் நடிக்கக் கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. அதனால்தான் நடிக்கவில்லை. மற்றபடி, வேறு எந்த காரணமும் இல்லை. கடைசியாக 'வேங்கை' படத்தில் நடித்தேன். அதற்கு பிறகு வாய்ப்பு வரவில்லை. தமிழில் நான் ஒரு படம் ஒப்புக்கொண்டிருப்பதாக வரும் தகவலும் வதந்திதான். வாய்ப்பு வந்தாலும் மார்ச், ஏப்ரலுக்கு பிறகுதான் கால்ஷீட் தர முடியும். தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறேன். இந்தியிலும் நிறைய வாய்ப்பு வருகிறது. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு தமன்னா கூறினார்.



[Continue reading...]

மாணவனின் கொலைவெறி

- 0 comments
 

அமெரிக்காவில் அடிக்கடி நடக்கும் "வகுப்பறையில் இந்திய மாணவன் சுட்டு கொலை" "பள்ளியில் ஆசிரியர் சுட்டு கொலை" பொன்ற செய்தி நேற்று சென்னையில் நடந்திருக்கிறது. பள்ளிக்கு பெற்றோர்கள் வந்து தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போகும் முன் மீடியா உள்ளே நுழைந்து இதை மேலும் பரபரப்பாக்கிவிட்டார்கள். எல்லா ஆங்கில சேனல்களிலும் பிளாஷ் நியூஸ் என்று அமர்க்களப்படுத்துவிட்டார்கள். நேற்று பள்ளியில் நுழைந்த பெற்றோர்கள், மீடியா தான் இந்த கொலைக்கே காரணம் என்று சொல்லுவேன்.

ஒரு வாரமாக டிவியில் வரும் 'செங்காத்து பூமியிலே' என்ற படத்தின் ட்ரைலரை பார்த்திருப்பீர்கள், அவ்வளவு ரத்தம் அந்த ட்ரைலரில். இந்த மாதிரி படங்களை பார்த்து வளரும் குழந்தைகள் தங்களுக்கு கட்டுக்கடங்காத கோபம் வரும் போது, வீட்டில் இருப்பதை தூக்கி எறிவதற்கு பதில் சமையல் அறையில் இருக்கும் கத்தியை எடுப்பார்கள். முன்பு தாத்தா பாட்டி இருந்த இரவு நேரங்களில் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்லுவார்கள். ஆனால் தற்போது அவர்களுக்கு இரண்டு பொண்டாட்டி கதை சீரியல் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. சீரியலை மிஸ் செய்துவிட்டால் அடுத்த நாள் மத்தியானம் நினைவு வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். சின்ன பாட்டிகள் யூ டியூபில் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் இப்படி இருந்தால் குழந்தைகள் எப்படி உருப்படும்?

பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பதில் தவறு இல்லை. ஆனால் ஆசிரியர்கள், இண்டர்னலில் கை வைத்துவிடுவேன், பிராக்டிகளில் கம்மி செய்துவிடுவேன் என்று மாணவர்களை பயப்பட செய்வது அவர்களுக்கு மன அழுத்ததையும் மனநிலை பாதிப்பையும் கொடுக்கும். சமீபத்திய சினிமா படங்களில் அழுக்காகவும் தாடி வைத்துக்கொண்டு பெண்கள் பின்னால் சுற்றும் பொறுக்கிக்களாகவும் ஹீரோக்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். வீட்டிலிருந்து திருடும் பணத்தை கொண்டு குடித்து கும்மாளம் போடும் பொறுக்கிக்கள். இவர்களை பாக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள் ?

இந்த மாணவன் கடைசியாக பார்த்த `அக்னிபத்` என்ற இந்தி படத்தில் வரும் காட்சிகள் கொலைக்கு தூண்டுதலாக இருந்துள்ளது என்று போலீஸில் தெரிவித்துள்ளான். நாம் பார்க்கும் சீரியல்களில் தினமும் விஷம் வைத்து கொலை செய்யும் காட்சி ஏதாவது ஒரு சீரியலில் வந்துவிடுகிறது. அவர்கள் பேசும் வசனங்கள் நல்ல ஒழுக்கமாக குடும்பத்தில் யாரும் பார்க்க, கேட்க மாட்டார்கள். நம்முடன் சீரியல் பார்க்கும் நம் குழந்தைகள் கொஞ்ச நாளில் அதே மாதிரி முகபாவம், வார்த்தைகள், வசனங்களை பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

மாணவர்கள் தங்கள் வாழ்கைக்கு 99 மார்க் பின்னாடி ஓடுவதை காட்டிலும், ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் உபதேசிக்க வேண்டும். பெற்றோர்கள் ட்விட்டரிலும், பிளாகிலும் செலவு செய்யும் நேரத்தை தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்ய வேண்டும். முதல் காரியமாக வீட்டில் சீரியல் பார்ப்பதை நிறுத்தினால் நல்ல சமுதாயம் உருவாகும்.

திருட்டு விசிடி என்றாலும் பரவாயில்லை. "I am Kalam" போன்ற படங்களை உங்கள் குழந்தைகளுக்கு போட்டு காண்பியுங்கள்.

நிச்சயம் 15 வயது மாணவன் தப்பு செய்ய மாட்டான், இந்த கொலைக்கு அவன் காரணம் இல்லை. நல்ல வேளை அது என் குழந்தை இல்லை என்று மற்ற பெற்றோர்கள் ஆறுதல் அடையலாம். இது தற்காலிகமான ஆறுதல் தான்.

படம்: செங்காத்து பூமியிலே என்ற படத்தின் ஸ்டில்! இது வீரம் இல்லை ரவுடித்தனம்.
[Continue reading...]

ஆசிரியையை குத்திக்கொன்றது ஏன்? கைதான மாணவர் பரபரப்பு வாக்குமூலம்

- 0 comments
 
 
 
போலீஸ் விசாரணையின்போது ஆசிரியை உமா மகேஸ்வரியை எதற்காக கொலை செய்தார் என்று கைதான மாணவர் முகமது இஸ்மாயில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
9ம் வகுப்பு மாணவர் முகமது இஸ்மாயில் இந்தி ஆசிரியை உமா மகேஸ்வரியை வகுப்பறையில் வைத்து கத்தியால் குத்திக் கொன்றார். இதையடுத்து அந்த மாணவர் மீது சட்டக்கல்லூரி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை ரகசியை இடத்தில் வைத்து விசாரித்தபோது பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
அதன் விவரம் வருமாறு,
 
நான் சென்னை ஏழுகிணறு தெருவில் பெற்றோருடன் வசித்து வருகின்றேன். என் தந்தை கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். எனக்கு இந்தி பாடம் அவ்வளவாக வராது. அதனால் ஆசிரியை உமா மகேஸ்வரி என்னை திட்டிக் கொண்டே இருப்பார். அது எனக்கு பிடிக்காது. மேலும் நான் சரியாகப் படிப்பதில்லை என்று ரிப்போர்ட் கார்டில் 3 முறை எழுதினார். அதைப் பார்த்து எனது பெற்றோர்கள் திட்டினார்கள். அவரால் நான் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது.
 
இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து எனது வீட்டருகே உள்ள கடையில் ரூ. 20 கொடுத்து கத்தி வாங்கினேன். இந்நிலையில் உமா மகேஸ்வரி இந்தி ஸ்பெஷல் வகுப்பு நடத்தப் போவதாகக் கூறினார். அப்பொழுதே அவரை கொல்வது என்று தீர்மானித்தேன்.
 
காலை 11 மணிக்கு வகுப்புக்கு வரச் சொன்னார். ஆனால் நான் 10.50 மணிக்கே சென்றேன். அப்போது வகுப்பில் யாரும் இல்லாததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கத்தியால் குத்தினேன்.
 
நான் இப்படி செய்வேன் என்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. டேய் இப்படி செய்துவிட்டாயே என்று மட்டும் கூறினார். மேலும் தன்னைக் காப்பாற்றுமாறும் கத்தினார். அவரைக் கொன்றவுடன் தப்பிக்க முயலவில்லை. தண்டனையை ஏற்பது என்று முடிவு செய்தேன் என்றார்.
 
இந்த சம்பவம் குறித்து கொலை நடந்த புனித மேரீஸ் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் பாதிரியார் போஸ்கோ கூறியதாவது,
 
எங்கள் பள்ளியில் நடந்த துயரச்சம்பவத்தால் எங்களுக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது. இறந்த ஆசிரியை உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர். அவர் மாணவர்களை தரக்குறைவாக நடத்துபவர்கள் அல்ல என்று தான் பிற மாணவர்கள் தெரிவி்த்துள்ளனர். அவர் கண்டிப்பாக இருந்தாலும் மாணவர்களிடம் அன்பாகவும் இந்துள்ளார் என்றே பிற மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
முகமது இஸ்மாயில் பள்ளிக்கு ஒழுங்காக வந்தாலும் சரியாக படிக்கமாட்டார். இதை ஆசிரியை ரிப்போர்ட் கார்டில் குறிப்பட்டதால் இஸ்மாயில் கோபம் அடைந்துள்ளார். கோபத்தின் விளைவாக இந்த விபரீதம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் திங்கட்கிழமை வரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இனி வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


 


[Continue reading...]

ரஜினி படத்திலிருந்து விலகி வேறு படத்திற்கு`கால்ஷீட்' கொடுத்த சினேகா

- 0 comments


ரஜினிகாந்த் நடிக்கும் `கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்குகிறது. இந்த படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.


ரஜினிகாந்த்-தீபிகா படுகோன் ஜோடியுடன் சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா ஆகியோரும் நடிக்கிறார்கள். ரஜினிகாந்தின் தங்கை வேடத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

`கால்ஷீட்' தேதி ஒத்து வராததால், `கோச்சடையான்' படத்தில் இருந்து சினேகா விலகிக்கொண்டார்.


அவருக்குப் பதில், `கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக ருக்மணி நடிக்கிறார். இவர், பாரதிராஜா டைரக்ஷனில் `பொம்மலாட்டம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் சம்பந்தப்பட்ட `போட்டோ சூட்' (முன்னோட்ட படக்காட்சி) நேற்று நடந்தது.

`கோச்சடையான்' படத்தில் இருந்து விலகிய சினேகா அடுத்து, `ஹரிதாஸ்' என்ற புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

இந்த படத்தில் அவருடன், `வெண்ணிலா கபடிக்குழு' புகழ் கிஷோர் நடிக்கிறார். ஜி.என்.ஆர்.குமரவேல் டைரக்டு செய்கிறார்.




 


[Continue reading...]

ஜெயலலிதாவுடன் நயன் தாரா சந்திப்பு

- 0 comments
 
 
 
தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை நாசமாக்கிய தானே புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதிக்கு நடிகை நயன் தாரா ரூ5 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.
 
தொழிலதிபர்கள், திரை உலக நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே புயல் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
 
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகுமார் உள்ளிட்டோரும் தானே புயல் நிவாரண நிதி வழங்கியிருந்தனர்.
 
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நடிகை நயன் தாரா இன்று சந்தித்தார்.
 
தானே புயல் நிவாரண நிதியாக ரூ5 லட்சத்துக்கான காசோலையை அவர் முதல்வரிடம் வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயன், அனைவரும் தானே புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger