எந்தவித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் சிறீலங்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என சிறீலங்காவுக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி நபி ஹசனிபேர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்த உறவினை அமெரிக்கா மற்றும் சிறீலங்காவின் எதிர்க்கட்சி உள்ளிட்ட எந்தவொரு தரப்பினராலும் கூட தடுக்க முடியாது என்றும் அவர் அவர் உறுதிபடக் குறிப்பிட்டார்.
ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு 33 ஆண்டு நிறைவு மற்றும் தேசிய தினம் ஆகியவற்றினை சனிக்கிழமை ஈரான் கொண்டாடியது. இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றியபோது ஈரானியத் தூதர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.
அமெரிக்காவினால் ஈரானிய எண்ணெய் தொடர்பில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் சிறீலங்காவுக்கான ஈரான் தூதுவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவின் ஒருதலைபட்சமான இந்த தடையின் ஊடாக சிறிய நாடுகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறான பொருளாதாரத் தடைகளினை ஐக்கிய நாடுகள் மாத்திரமே விதிக்க முடியும். அமெரிக்கா போன்ற ஏனைய நாடுகள் இவ்வாறான ஒருதலைபட்சமான தடைகளை விதிப்பது சட்டவிரோதமான செயலாகும் எனவும் ஈரான் தூதுவர் குற்றம்சாட்டினார்.
'ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது இன்று நேற்றல்ல. கடந்த 50 வருடங்களாக பொருளாதர தடை விதிப்பு இடம்பெற்று வருகின்றது. ஆனால் குறித்த பொருளாதார தடைகளுக்கு மாற்றீடான வழிகளை ஈரான் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இது போன்றே தற்போது ஈரான் தொடர்பில் உலக நாடுகளுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைக்கும் மாற்றுவழி காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்தத் தடைகளுக்கு மத்தியில் எரிபொருள் மற்றும் தேயிலை ஆகியன தொடர்ச்சியாக இரு நாடுகளுக்குமிடையில் பறிமாறப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். சுமார் 32 வருட நெருங்கிய உறவினை கொண்ட சிறீலங்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு தொடர்ந்து நீடிக்கும் எனவும் சிறீலங்காவுக்கான ஈரான் தூதுவர் மேலும் அழுத்தமாகக் தெரிவித்தார்.
ஆனால், இந்த உறவு எவ்வளவு காலம் நீடிக்க அமெரிக்கா அனுமதிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இந்தியா தனது மசகு எண்ணெய் தேவையில் 20 சதவீதத்தை ஈரான் மூலம் நிறைவேற்றி வருகின்றது. இதைக் குறைத்துக் கொள்ளும்படி இந்தியாவை அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. எனினும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக இதைக்குறைக்க முடியாது என்றும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெய் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார். இது இந்தியாவை அமெரிக்கா ஓரளவுக்கு என்றாலும் அடிபணிய வைத்துவிட்டது என்றே கருதப்படுகின்றது.
கடந்த வாரம் வாஷிங்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம் இதுகுறித்து பேசப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம், ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை படிப்படியாகக் குறைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக ரஞ்சன் மத்தாயிடம் கூறப்பட்டது. கடந்த டிசம்பர் 29ம் திகதி அதிபர் ஒபாமா கையெழுத்திட்ட கடிதம் ஒன்றில், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி தொடர்பாக மாற்று வழிகளைக் கண்டுபிடிக்குமாறும், மசகு எண்ணெய் இறக்குமதியில் ஈரானைச் சார்ந்திருப்பதை (180 நாட்களுக்குள் அதாவது 6 மாதங்களுக்குள்) குறைத்துக் கொள்ளும்படியும் நட்பு நாடுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யாமல் அதைத் தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து டில்லியுடன் பேச்சு நடத்தப்பட்டதாகவும் நூலண்ட் தெரிவித்திருந்தார். ஒவ்வொரு நாடும் எந்தெந்த பணிகளுக்காக ஈரானை சார்ந்துள்ளது என்று தரம்பிரித்து அதனடிப்படையில் ஈரானை சார்ந்திருப்பதிலிருந்து விலகி இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஒவ்வொரு நாடும் அதன் செயல்பாடு அடிப்படையில் தரம் பிரிக்கப்படும் என்றார் நூலண்ட். இந்நிலையில், ஈரான் மீதான தடைகளால் சிறீலங்காவிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அதனை நிவர்த்தி செய்வதற்கான தெரிவுகள் தொடர்பாகவும் விபரிப்பதற்காக, பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தல் மற்றும் நிதி தொடர்பான குற்றச் செயல்களுக்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவிச் செயலாளர் லியூக் பிரௌனின் கடந்த வியாழக்கிழமை கொழும்பு சென்றிருந்தார்.
ஈரானிடமிருந்து தனது எரிபொருள் தேவையில் 93 சதவீதத்தை சிறீலங்கா இறக்குமதி செய்கிறது. ஒபெக் அமையத்தின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ஈரானிலிருந்து பெறப்படும் மசகு எண்ணெய் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் வடிகட்டப்படுகிறது. 50 ஆயிரம் பரல்கள் இந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் வடிகட்டப்படுகின்றன. அதேவேளை, ஓமான் மற்றும் சவுதி அரேபியாவுடன் இறக்குமதிகள் தொடர்பாக சிறீலங்கா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால், ஓமானிய மசகையோ சவுதியின் மசகையோ நேரடியாக சபுகஸ்கந்தவில் சுத்திகரிக்க முடியாது.
இதனால், குறிப்பிட்டளவு சதவீத மசகே ஈரானிய மசகுடன் சேர்த்து சுத்திரிக்க வேண்டியுள்ளது. அத்துடன் முக்கியமான மற்றொரு விடயமாகக் காணப்படுவது ஈரான் 7 மாத கடனுக்கு அனுமதியளித்திருக்கும் விடயமாகும். இந்தக் கடன்தான் சிறீலங்காவை ஈரானை விட்டுப் பிரியாமல் ஒட்டி உறவாட வைத்துள்ளது. எனவே, சிறீலங்காவை ஈரானிடம் இருந்து பிரித்தெடுக்கவேண்டியது அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமாகவுள்ளது.
கொழும்பு சென்றிருந்த அமெரிக்க திறைசேரியின் உதவி செயலாளர் லியூக் பிரௌனின் தலைமையிலான அமெரிக்கத் தூதுக்குழு, இலங்கை பெற்றோலியத் துறை செயலாளர் மற்றும் ஈரானுக்கான சிறீலங்காவின் கொடுப்பனவுகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரியை சந்தித்துப் பேசி அவர்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தனர்.
ஆனால், இந்த விடயத்தில் அமெரிக்காவிற்கு எதிராகவே சிறீலங்கா செயற்பட முனைந்துள்ளதாக கூறப்படுகின்றது. காரணம், ஈரானின் அணு அபிலாசைகளுக்கு டொலர் நிதியாக பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா கருதுகின்றது. டொலர்கள் மூலமான கொடுக்கல் வாங்கல்களை துண்டித்தால் ஈரானின் நடவடிக்கைகளை தடுக்க முடியும் என்று கருதித்தான் ஈரான் மீதான தடை அறிவிப்பை அமெரிக்கா கொண்டுவந்தது.
ஆனால், எண்ணைய்க்கு டொலரைக் கொடுக்கும் சிறீலங்காவிற்கு இது அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக மாற்று நடவடிக்கைகளைக் கண்டறியுமாறு கடந்த வாரம் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதிகாரிகளைப் பணித்திருந்தார். இதனையடுத்து டொலர் மூலமாகச் செலுத்துவதுதான் பிரச்சினை என்றால், வேறு நாணயங்களில் பணத்தைச் செலுத்தி ஈரானைப் பாதுகாக்க சிறீலங்கா முனைந்துள்ளது.
அதாவது, ஈரானிய மசகு எண்ணெய்த் தேவைகளுக்கான கொடுப்பனவை ரூபாவின் மூலம் மேற்கொள்வது தொடர்பாக இந்தியா பரிசீலித்து வருகிறது. இந்தியாவின் முடிவைப் பின்பற்றி டொலரிலும் பார்க்க ஏனைய நாணயங்களில் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்வதன் மூலம் ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகளினால் ஏற்படும் பாதிப்பை தாங்கள் தவிர்த்துக்கொள்ளவதுடன், ஈரானின் நட்பையும் பாதுகாக்க முடியும் என்று சிறீலங்கா கருதுகின்றது.
சிறீலங்கா எடுத்துள்ள இந்த முடிவு அமெரிக்காவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மசகு எண்ணையின் விலையை டொலரில் இருந்து ஈரோவிற்கு மாற்ற முனைந்தமையாலேயே ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசைன் அழிக்கப்பட்டதாகவும், இதேசிந்தனை கொண்ட வெனிசுவேலா அதிபர் ஹ§கோ சாவேஸ் தற்போது அமெரிக்காவினால் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், ஈரானின் எரிபொருளையும் வேறு நாணயங்களுக்கு மாற்ற அமெரிக்கா அனுமதிக்காது என்றே கருதுகின்றார்கள்.
இந்நிலையில், எரிபொருள் கொடுப்பனவிற்காக சிறீலங்கா வேறு நாணயத்தைப் பயன்படுத்த முனைவது அமெரிக்காவிற்கு எதிரானதாகவே கருதப்படும். இது சிறீலங்காவிற்கு பாரிய ஆபத்தான ஒன்றாகவே இருக்கும் என்றும் கூறுகின்றார்கள். எனவே, சிறீலங்காவின் மீதான அமெரிக்காவின் கோபத்தின் எதிரொலி முதலில் ஜெனீவாவில் ஒலிக்கலாம் என்றும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எதனையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பார்ப்போம்.
ஈழமுரசு
http://tamil-cininews.blogspot.com
http://tamilfashionshow.blogspot.com