இசைப்பிரியா படுகொலை: இலங்கை மந்திரி டக்லஸ் தேவானந்தா கண்டனம் isaipriya killed sri lanka minister douglas devananda condemn
கொழும்பு, நவ. 4–
இசைப்பிரியா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என இலங்கை மந்திரி டக்லஸ் தேவானந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண் விடுதலைப்புலி இசைப்பிரியா. இலங்கையில் உள்ள தமிழ் தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தார். வன்னியில் நடந்த இறுதி கட்ட போரில் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
ஆனால், அவரை கைது செய்த இலங்கை சிங்கள ராணுவம் நிர்வாணப்படுத்தி கற்பழித்து கொலை செய்ததை வீடியோ காட்சி மூலம் சேனல் 4 தொலைக் காட்சி சமீபத்தில் அம்பலப்படுத்தியது. இது உலக நாடுகளையும், தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த கொடூர ஈவு இரக்கமற்ற கொலைக்கு தமிழ் மக்கள் தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் மந்திரி டக்லஸ் தேவானந்தாவும் இசைப்பிரியா கொலைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரான இவர் பி.பி.சி. தமிழோசைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
''காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வர உள்ளனர். இந்த வேளையில் சேனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப் பிரியா படுகொலை தொடர்பான வீடியோ காட்சிகள் உலக நாடுகளை மட்டுமின்றி உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சேனல் 4 தொைக்காட்சி இசைப்பிரியாவை உயிருடன் ராணுவத்தினர் கைது செய்த காட்சியை ஒளிபரப்பி இருப்பது தமிழ் மக்களை எரிச்சலடைய செய்துள்ளது. நம்பிக்கைகளை தகர்த்துள்ளது. மனித நேயமுள்ளவர்களை உலுக்கியுள்ளது.
தற்போது வெளியாகி இருக்கும் இசைப்பிரியா படுகொலை செய்தி தொடர்பாக முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மையை தெளிவு படுத்த வேண்டும். இது குறித்த கடிதத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவுக்கு அனுப்பியுள்ளது.
முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். அதுவே இறுதிகட்ட போர் தொடர்பாக தமிழ் மக்களிடம் எழுந்திருக்கும் படுகொலைகள் தொடர்பான அச்சங்களுக்கும், சந்தேகங்களுக்கும் விடை காண்பதாக அமையும்.
தமிழ் மக்களிடையே இருக்கும் சந்தேகங்களுக்கும், அச்சங்களுக்கும் நியாயமும், பரிகாரங்களும் காணப்பட வேண்டும். எனவே, எனது கோரிக்கைக்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் உண்மையை உலகுக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கிறோம்'' என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
...
shared via
[Continue reading...]