Img சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ.11 லட்சம் கள்ள நோட்டுகளை கடத்த முயன்ற வெளிநாட்டு வாலிபர் கைது Youth arrested for smuggling fake currency
சென்னை, டிச. 12-
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று மாலை டெல்லிக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது மேற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கெய்னியா நாட்டை சேர்ந்த பிராங்கிளின்(வயது 27) என்பவர் அந்த விமானத்தில் ஏற வந்தார். அவரது சூட்கேசை பாதுகாப்பு அதிகாரிகள் 'ஸ்கேனிங்' கருவியில் வைத்து சோதனை செய்தனர்.
அப்போது துணிகளுக்கு நடுவே கட்டுக்கட்டாக பணம் இருப்பது போன்று தெரியவந்தது. உடனே அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் 2 கவர்களில் கட்டுக்கட்டாக ஆயிரம் ரூபாய் தாள்கள் இருந்தன. உடனே இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.
வெளிநாட்டு வாலிபர் ரூபாய் நோட்டுகளை கடத்த முயன்றது பற்றி தகவல் அறிந்ததும் மத்திய உளவு படை, கியூபிராஞ்ச் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
அதில் கெய்னியா நாட்டை சேர்ந்த பிராங்கிளின், அவரது நண்பர் ஜான்சன் இருவரும் கடந்த 9–ந் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்ததும், பிராங்கிளினிடம் இருந்த ரூ.11 லட்சத்து 29 ஆயிரம் பணம் அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பதும், இவை பாகிஸ்தான் நாட்டில் அச்சடிக்கப்பட்டவை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுபற்றி பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன், மீனம்பாக்கம் உதவி கமிஷனர் விஜயகுமார், விமான நிலைய இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டு வாலிபர் பிராங்ளினை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 29 ஆயிரம் கள்ளநோட்டுகள் மற்றும் பச்சை நிறமை ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.
கெய்னியா நாட்டை சேர்ந்த இவர்கள் இருவரும் எதற்காக சென்னை வந்தனர். இவர்களிடம் கள்ள நோட்டுகளை தந்தது யார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்று தெரியவில்லை.
மேலும் இவர்கள் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உடையவர்களா? உடன் வந்த ஜான்சன் என்பவர் எங்கு உள்ளார்?. அவரிடமும் கள்ள நோட்டுகள் இருக்கிறதா?. கடந்த 3 நாட்களாக சென்னைக்கு வந்து யார், யாரிடம் கள்ள நோட்டுகளை தந்து உள்ளார்கள்?. கள்ள நோட்டுகளை தமிழகத்தில் எந்தந்த பகுதிகளில் புழக்கத்தில் விட்டு உள்ளார்கள்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான பிராங்கிளினுடன் வந்த அவனது கூட்டாளி ஜான்சன் படம் விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து அவன் மீண்டும் விமானம் நிலையம் வரலாம் என கருதி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நேரத்தில் இரவு செல்லும் டெல்லி விமானத்தில் ஏறி நைசாக தப்பி ஓடிவிடாலம் என கருதி ஜான்சன் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு 8.30 மணி அளவில் வந்தான்.
போலீசார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு வேறுவிமானத்தில் ஏறி தப்பிவிடலாம் என நினைத்து வந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீடியோவில் பதிவான அவனது படத்தை ஏற்கனவே பார்த்திருந்த போலீசார் அவனை மடக்கி பிடித்தனர். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் அவனிடம் இருந்த ரசாயன கலவையையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
பிடிபட்ட ஜான்சனின் செல்போனை போலீசார் கைப்பற்றி சோதனை போட்டனர். அப்போது அவனது செல்போனில் ஏற்கனவே பிராங்கிளினிடம் கைப்பற்றப்பட்ட ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகளை யார்–யாருக்கு? எவ்வளவு கொடுக்க வேண்டும் என ரகசிய குறியீடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பிடிபட்ட ஜான்சனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 'சென்னையில் அச்சடிக்கும் கள்ள நோட்டுகளை 2 பேரும் வாங்கிக்கொண்டு டெல்லி செல்வோம். அங்கு சென்றதும், அந்த நோட்டுகளை ரசாயன கலவையில் நனைப்போம். அப்போது கள்ளநோட்டுகள் நல்லநோட்டுகள் போன்று மாறிவிடும். பின்னர் இந்த நோட்டுகளை புழக்கத்தில் விடுவோம்' என கூறியதாக தெரிகிறது.
வெளிநாட்டு ஆசாமிகளுக்காக சென்னையில் கள்ளநோட்டு எங்கு அச்சடிக்கப்படுகிறது? அவர்களுக்கு துணை போகிறவர்கள் யார்? என போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
...
[Continue reading...]