பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர
மோடி: அடுத்த வாரம் அதிகாரபூர்வ
அறிவிப்பு BJP PM candidate Narendra Modi
official announcement next week
புதுடெல்லி, செப். 10-
ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் நடைபெற்ற
பேச்சுவார்த்தையில்
உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து,
பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக
நரேந்திரமோடி அறிவிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
அது குறித்து அதிகாரபூர்வ
அறிவிப்பு, அடுத்த வாரம்
வெளியாகும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற
இருக்கும் பாராளுமன்ற பொதுத்
தேர்தலை சந்திப்பதற்கு பிரதான
எதிர்க்கட்சியான
பா.ஜனதா தயாராகி வருகிறது. இந்த
தேர்தலில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர்
பட்டியல் வரிசையில், குஜராத் முதல்-
மந்திரி நரேந்திரமோடி முதல் இடத்தில்
இருந்து வந்தார்.
அதற்கு முன்னோடியாக, கட்சியின்
பிரசார குழு தலைவராக சமீபத்தில்
நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டு,
நாடு தழுவிய பிரசாரத்தையும்
தொடங்கிவிட்டார். ஆனால், கட்சியின்
மூத்த தலைவர்களான
எல்.கே.அத்வானி மற்றும்
சுஷ்மா சுவராஜ் போன்றவர்கள் இந்த
நியமனத்தை விரும்ப வில்லை.
அவர்களுடைய எதிர்ப்பை மீறி,
பா.ஜனதா கட்சியின்
கொள்கை வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்.
இயக்கத் தலைவர்கள்
நரேந்திரமோடியை பிரதமர்
வேட்பாளராக அறிவிப்பதில்
உறுதியாக இருந்தனர்.
எதிர்ப்பு தெரிவித்த மூத்த
தலைவர்களை சந்தித்து அவர்கள்
சமாதானப்படுத்தி வந்தனர். அதன்பின்
நரேந்திரமோடியை பிரதமர்
வேட்பாளராக ஏற்றுக்கொண்ட மூத்த
தலைவர்கள், 5 மாநில சட்டசபை தேர்தல்
முடிந்தபின்னர்
அது குறித்து அதிகாரபூர்வமாக
அறிவிக்கலாம் என்று, அவர்கள்
கருத்து தெரிவித்து இருந்தனர்.
ஆனால், நரேந்திரமோடியை பிரதமர்
வேட்பாளராக நியமிப்பதை தள்ளிப்போட
விரும்பாத ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்,
பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் கடந்த
இரண்டு நாட்களாக டெல்லியில்
சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையில், ஆர்.எஸ்.எஸ்.
இயக்கம் தவிர, விசுவ இந்து பரிஷத்
உள்ளிட்ட 13 இந்து மத அமைப்புகளின்
பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
நேற்று நடைபெற்ற
பேச்சுவார்த்தையில், ஆர்.எஸ்.எஸ். இயக்க
தலைவர் மோகன் பகவத், விசுவ
இந்து பரிஷத் இயக்க தலைவர் பிரவீன்
தொகாடியா உள்பட
பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் நடந்த
பேச்சுவார்த்தையில் எல்.கே.அத்வானி,
நரேந்திரமோடி போன்ற தலைவர்கள்
பங்கேற்றனர்.
நேற்றுடன் முடிவடைந்த இந்த
பேச்சுவார்த்தையில்,
நரேந்திரமோடியை பா.ஜனதா பிரதமர்
வேட்பாளராக அறிவிப்பதில் ஒருமித்த
முடிவு ஏற்பட்டது. அதன்படி, இன்னும்
ஒரு வாரத்தில் பா.ஜனதா ஆட்சி மன்ற
குழு கூடி, இந்த
முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க
முடிவு செய்யப்பட்டு உள்ளது.13-ல்
இருந்து 19-ந்தேதிக்குள் இந்த கூட்டம்
நடைபெறும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நரேந்திரமோடியும் ஆட்சி மன்ற
குழுவின் மற்ற முக்கிய
உறுப்பினர்களும் 14-
ந்தேதி அன்று டெல்லியில் இருப்பதால்,
அன்றைய தினம் கூட்டம் நடைபெறலாம்.
ஒரு வேளை அன்று கூட்டத்தை நடத்த
முடியாவிட்டால், 20-
ந்தேதி அன்று முன்னோர்
வழிபாட்டுக்கான 'மகாளய பட்சம்'
தொடங்குவதால், அதற்கு முன்னதாக,
19-ந்தேதிக்குள்
இறுதி முடிவு எடுக்கப்பட்டு அதிகாரபூர்வ
அறிவிப்பது வெளியாகும் என்று,
பா.ஜனதா கட்சி வட்டாரத்தில்
தெரிவிக்கப்பட்டது.17-
ந்தேதி அன்று நரேந்திரமோடியின்
பிறந்தநாள் வருவதால், அன்றைய
தினமே இந்த
அறிவிப்பை வெளியிடவும்
வாய்ப்பு உள்ளது. இந்த
தகவல்களை உறுதி செய்யும்
வகையில், பிரதமர் வேட்பாளராக
மோடியை நிறுத்துவதில்
பா.ஜனதாவில் எந்த
கருத்துவேறுபாடும் இல்லை என்று,
ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மோகன்
வைத்யா நேற்று அறிவித்தார்.
அத்வானி மற்றும்
சுஷ்மா சுவராஜை சமாதானப்படுத்தும்
விதத்தில், ஆர்.எஸ்.எஸ்.
பொதுச்செயலாளர் சுரேஷ்
பையாஜி அவர்கள் இருவரையும்
தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து மூத்த
தலைவர்கள் இருவருடன், ஆர்.எஸ்.எஸ்.
இயக்க தலைவர் மோகன் பகவத் பங்கேற்ற
விருந்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.