வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்
இந்திய ஏ அணி வெற்றி India A team beat
West Indies A team
15 Sep 13 08:45:37 PM by Tamil | Tags : தினசரி செய்திகள் , Daily News | 23 views | 0 comments
பெங்களூர், செப்.16-
கீரன் பவெல் தலைமையிலான வெஸ்ட்
இண்டீஸ் ஏ கிரிக்கெட் அணி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3
ஒருநாள், ஒரு 20 ஓவர் மற்றும் 3 டெஸ்ட்
போட்டி தொடரில்
விளையாடுகிறது.
இந்தியா ஏ -வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள்
இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட
ஒருநாள் போட்டி தொடரில்
முதலாவது ஒருநாள் கிரிக்கெட்
போட்டி பெங்களூர்
சின்னசாமி ஸ்டேடியத்தில்
நேற்று நடந்தது.
முந்தைய நாளில் பெய்த மழையால்
அவுட் பீல்டு ஈரப்பதமாக இருந்ததால்
ஆட்டம் 1 மணி 45 நிமிடம் தாமதமாக
தொடங்கியது. இதனால் போட்டி 42
ஓவர்களாக குறைக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி டாஸ்
ஜெயித்து, இந்திய ஏ
அணியை முதலில் பேட்டிங் செய்ய
பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக
ராபின் உத்தப்பா, உன்முக்த் சந்த்
ஆகியோர் களம் இறங்கினார்கள். உன்முக்த்
சந்த் 10 பந்துகளில் ஒரு ரன்னுடனும்,
ராபின் உத்தப்பா 37 பந்துகளில் 2
பவுண்டரியுடன் 23 ரன்னுடனும் ஆட்டம்
இழந்தனர்.
இதனை அடுத்து கேப்டன் யுவராஜ்சிங்,
மன்தீப்சிங்குடன் இணைந்தார்.
ஜனவரி மாதத்துக்கு பின்னர் முதல்
முதல் முறையாக களம் காணும்
யுவராஜ்சிங் முதலில் அடித்து ஆட
சற்று தடுமாறினார். யுவராஜ்சிங் 39-
வது பந்தில் தான் முதல்
பவுண்டரியை விரட்டினார். அதன்
பின்னர் அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது.
61 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
இதற்கிடையில் மன்தீப்சிங் 78 பந்துகளில்
7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 67 ரன்
எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து யூசுப்பதான் களம்
கண்டார்.
அரை சதத்துக்கு பின்னர் அடுத்த 16
பந்துகளில்
அதிரடி காட்டி யுவராஜ்சிங்
சதத்தை தொட்டார். இது லிஸ்ட் ஏ
போட்டியில் அவர் அடித்த 18-
வது சதமாகும். யுவராஜ்சிங் 35-
வது ஓவரில் நிகிதா மில்லர்
பந்து வீச்சில் 3 சிக்சர்,
ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்னும், 38-
வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன்
24 ரன்னும் சேர்த்தார்.
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க
தனக்கு கிடைத்த 2-வது கட்ட
வாய்ப்பை அதிரடி ஆட்டக்காரர் யூசுப்
பதான் சரியாக பயன்படுத்தினார். அவர்
யுவராஜ்சிங்குக்கு நிகராக
அதிரடியில் வெளுத்து கட்டினார்.
யூசுப்பதான் 37-வது ஓவரில்
ஆஷ்லே நுர்ஸ் பந்து வீச்சில் 3 சிக்சர், 2
பவுண்டரி உள்பட 29 ரன் சேர்த்தார்.
அணியின் ஸ்கோர் 39.2 ஓவர்களில் 272
எட்டிய போது யுவராஜ்சிங்,
நிக்ருமாக் பொன்னர் பந்து வீச்சில்
ரோன்ஸ்போர்ட் பீடோனிடம் கேட்ச்
கொடுத்து ஆட்டம் இழந்தார். யுவராஜ் 89
பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 123
ரன் குவித்தார். அடுத்து நமன் ஓஜா களம்
இறங்கினார்.
கடைசி ஓவரில் பொன்னர் பந்து வீச்சில்
யூசுப் பதான் 3 சிக்சர்கள் தூக்கினார்.
நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் இந்திய ஏ
அணி 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன்
குவித்தது. யூசுப் பதான் 32
பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 70
ரன்னும், நமன் ஓஜா 8 பந்துகளில்
ஒரு பவுண்டரியுடன் 10 ரன்னும்
எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின்னர் 313 ரன் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ
அணி, இந்திய ஏ அணி வீரர்களின்
சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க
முடியாமல் 39.1 ஓவர்களில் 235 ரன்னில்
ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய ஏ
அணி 77 ரன் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் ஏ
அணியில் அதிகபட்சமாக டியோநரைன்
57 ரன்னும், ஆஷ்லே நுர்ஸ் 57 ரன்னும்
எடுத்தனர். இந்திய ஏ அணி தரப்பில்
சுமித் நர்வால், வினய்குமார், ரோகித்
ஷர்மா, யூசுப் பதான் தலா 2
விக்கெட்டும், உனட்கட்
ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்தியா ஏ -வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள்
இடையேயான 2-வது ஒருநாள்
போட்டி பெங்களூர்
சின்னசாமி ஸ்டேடியத்தில்
நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.