செங்கல் சூளைக்கு வெட்டப்படும் பனை மரங்கள்: அழிந்து வரும் தமிழரின் அடையாளத்தை காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை....
உலகின் மூத்த மொழி தமிழ். தமிழின் எழுத்துக்கள் முதலில் பதியப்பட்டது பனைஓலையில்தான். இத்தையை முக்கியத்துவம் வாய்ந்த பனைமரத்தின் உயிருக்கு இன்று ஆபத்து நேர்ந்திருக்கிறது.
பனைமரம் தமிழர்களின் அடையாளம், தமிழர் வாழும் பகுதிகளில் மட்டுமே பனைமரங்களும் வாழுகிறது அல்லது தமிழர்களின் மூதாதையர்கள் வாழும் பகுதியில் மட்டுமே பனைமரங்களும் இருக்கின்றது.
தமிழகத்தில், மலேசியாவில், ஈழத்தில், மோரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில் என்று தமிழர்கள் வாழும் இடங்களில் மட்டுமே பனைமரமும் வளருகிறது.
இலங்கையில் பனை வளர்ச்சித்துறை என்று ஒரு துறையும் அதற்கு தனி ஒரு அமைச்சரையே நியமனம் செய்து பனை மரத்தின் பயனை மக்களுக்கு கொடுக்கிறது இலங்கை அரசு.
மலேசியாவில், பனை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணை இன்று உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் உணவு எண்ணையாக பயன்படுகிறது. பாம்ஆயில் என்று சொல்லப்படும் இந்த எண்ணை தான் நம் ஊரில் கிடைக்கும் அனைத்து என்னையிலும் கலந்துள்ளது.
சங்க காலம் முதல், தமிழரின் வாழ்வில் பனைமரம் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது அதில் கிடைக்கும் பச்சை குருத்து உண்பதற்கு சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும்.
கொஞ்சம் வளர்ந்து பனை மரமானதும் அதில் கிடைக்கும் பனை ஓலை, வீடுகள் மேயவும், படுப்பதற்கும், உட்காருவதற்கும், பண்டங்கள் கட்டுவதற்கும் தேவையான பாய்கள் செய்ய பயன்பட்டது. கடுமையான வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக இந்த பனை ஒலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போதும் கூட பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகளில் வீசும் போது குளுமையான காற்று கிடைக்கும்.
பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் எனும் தெலுவு கிடைக்கும், அதே தெலுவில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது சுவையானதாகவும், அதே நேரம் கொஞ்சம் போதையுடன் கூடிய இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும்.
கொஞ்சநாள் கள்ளு இறக்கிய பின்னர் வளரும் பாளையில், பனங்காய் காய்க்கும், இந்த காய்களில் தான் குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும்.
அதற்கு அடுத்த கட்டமாக, காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும் முற்றிய பணங்காயிலிருந்து சதை பகுதியை கத்தியால் சீவி எடுத்து வேகவைத்து உண்ணலாம்.
அதற்கு பின்னர், பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும், பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும், கொஞ்ச நாட்கள் போனால் கொட்டைக்குள் உருவாகும் சீப்பை கிடைக்கும், இந்த சீப்பை குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.
அதை இன்னும் கொஞ்சநாள் விட்டால் பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இப்படி மனித வாழ்வில் உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல், வீடுகள் கட்ட வெட்டுக்கை, விட்டம், ஓடுகள் பாதிக்கும், பனை வாரைகள் கொடுத்தது பனைமரம்.
பனை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்படும் பனம்பட்டையை வெய்யலில் கொஞ்சம் வாடிய பின்னர் உரித்து எடுக்கப்படும் நார் முன்பு கட்டுகள் கட்டவும், கால்நடை தீவனங்கள் கட்டி அடுக்கிவைப்பதர்க்கும், ஓலை வீடுகளை அமைக்கவும், பண்டங்கள் கட்டுப்போட்டவும் நார் பயன்பட்டது.
நம் வீட்டு பெண்கள் விறகு அடுப்பில் சமையல் செய்த காலங்களில், அடுப்பில் நெருப்பு பத்தவைக்க பெண்களுக்கு பனை மரத்தின் பன்னாடையும், வரண்டு போன ஓலைகளும் அவசியம் இருக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. காய்ந்து போன பனம்பட்டைகள், காய்ந்து போன நொங்கு காய்களும் அடுப்பு எரிக்க சிறந்த விறகாகப் பயண்பட்டது.
இப்படி மனித வாழ்கையின் ஒரு அங்கமாக இருந்த பனைமரம்... சமீபகாலத்தில் உருவாகிய இரும்பு, சனல், நைலான், எரிவாயு போன்ற நவீன சாதனங்கள் தோன்றியதால்... இக்கால மனிதர்களுக்கு பனைமரத்தின் அவசியமே இல்லாமல் போய்விட்டது.
எத்தனை வருடமானாலும் தண்ணீர் இல்லாமலேயே வளரும் தனமையுடைய பனைமரம், காடு, தோட்டம் என வித்தியாசம் இல்லாமல் வயல் ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வைத்து வளர்த்தார்கள்.
சமீப காலமாக இதன் பயன்பாடு இல்லாமல் போனதாலும், வருடம் ஒருமுறை பனைமரத்தில் வளர்ந்துள்ள ஓலைகளை வெட்டி, பட்டையை அறுத்து சுத்தம் செய்து சிரை எடுத்து விடுவதற்கு மட்டும் ஒரு மரத்திற்கு ஐம்பது ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது.
அப்படி சிரை எடுக்காவிட்டால், மரத்தில் உள்ள பட்டைகள் எல்லாம் வரண்டு காய்ந்து இலை தலைகள் விழுந்து பனைமரத்திலேயே தொங்குவதால், பாம்புகள் கூட குடியிருக்க தொடங்கிவிடும் ஆபத்து உள்ளது. பெரும்பாலும் அணில், எலி போன்றவைகள் கூடு கட்டிவிட்டால் அதில் இருந்து கொண்டு நிலத்தில் விளையும் தானியக் கதிர்களை வெட்டிக் கொண்டுபோய் விடும் என்பதால் பனைமரத்தில் ஓலையை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சூழலில் பனைமரங்களை வளர்க்கும், எந்த ஒரு விவசாயிக்கும் பனைமரத்தால் எந்தவித பயனும் கிடையாது, ஆனால் வருடத்திற்கு ஒரு மரத்திற்கு குறைந்தது ஐம்பது ரூபாயாவது செலவு செய்தால் தான், பனைமரத்தை சுத்தமாக வைத்திருக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இவ்வளவு செலவு செய்தாலும், ஐம்பது அறுபது வருடம் வளர்ந்த ஒரு பனைமரத்தை வியாபாரியிடம் விற்றால் இருநூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வறை மட்டுமே காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு பனை மரத்துக்கும் விவசாயி செய்துள்ள செலவை கணக்கிட்டால் இந்த காசு எதற்கும் உதவாது என்பதால், எல்லா இடங்களிலும் உள்ள பனைமரங்களை விவசாயிகள் வெட்டி செங்கல் சூளைக்கு அனுப்பி வருகிறார்கள்.
நகரங்களில், ஒரு பக்கம் மரம் வைக்கவும், அவற்றை வளர்க்கவும் அரசு பல கோடி ரூபாய்களை செலவு செய்கிறது. ஆனால், மறுபக்கம் கிராமங்களில் உள்ள விவசாயிகள், தாங்கள் நிலங்களில் உள்ள கெட்டுப்போன கரியமிலவாயு போன்ற காற்றை சுத்தமான தூய பிரானவாயுவாக மாற்றிக்கொண்டிருக்கும் கற்பகவிருச்சமான பனை மரங்களை கட்டுபடியாகாத விலைக்கு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.
இந்த முரண்பாட்டின் காரணம் என்ன...? இயற்கை ஆர்வலரும், மரங்கள் பற்றிய ஆய்வாளரும், கீழ் பவாணி பாசன விவசாயிகள் சங்க தலைவருமான நல்லசாமி அவர்களிடம் கேட்டோம்.
முதலில் ஒரு மரம் என்று இருந்தால், அதில் எதாவது உபயோகம் இருக்கவேண்டும்..., பனை மரத்தால் இன்றைய காலகட்டத்தில் உழவர்களுக்கு எந்த நேரடியான பயனும் கிடையாது, தவிர அவர்களுக்கு செலவுகள் தான் வருகிறது. அதனால் பனைமரங்களை வெட்டி விற்கிறார்கள்.
அதை எப்படி தடுப்பது...? அந்த மரத்தில் எதாவது லாபம் கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும், அதற்கு ஒரே வழி... கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.
இதனால், பனைமரமும் வளரும், பனைமரம் வளர்க்கும் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும், எந்த விதமான இரசாயன கலப்பும் இல்லாத, அருந்தும் மனிதனின் குடலையும், வயிற்றையும் வேகவைக்காத... மிகவும் குறைவான போதையை கொடுக்கும், சத்தான கள்ளும் கிடைக்கும், கள் என்பது போதை பொருள் அல்ல... அது ஒரு வகை உணவுப்பொருள் தான்... அதை மது என்ற சொல்லுவதே தவறு...
இன்றைக்கு, இயற்கையான முறையில் உரம், யூரியா போடாத வயலில் விளைந்த நெல் என்றும் காய்கறி என்றும் சொன்னால் அதைத்தான் மக்கள் ஓடிப்போய் வரிசையில் நின்று வாங்குகிறார்கள். மக்களுக்கு இயற்கையின் மீது நம்பிக்கையும், செயற்கையின் மீது பயமும் வந்து விட்டது. இதற்க்கு காரணம் மனிதருக்கு வரும் புதிய புதிய நோய் தான்.
நோயுக்கு பயந்து இயற்கையின் பக்கம் போகும் மக்களுக்கு ஓன்று சொல்லுகிறேன், ஒரு துளி கூட பூச்சி மருந்து அடிக்காமல், உரம் போடாமல் சொல்லப்போனால் தண்ணீர் கூட விடாமல், சத்தான எருவும் போடாமல் இயற்கையில் தானாக விளையும் ஒரு காமதேனு பனை மரத்தில் உற்பத்தியாகும் பணம் பால் தான். அதை நம்முடைய மக்கள் குடிக விடாமல் பன்னாட்டு நிறுவனங்கள், நம்மூர் அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் தரகர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கையூட்டு கொடுத்து நம் நாட்டிலேயே நம்முடைய மரத்தில் விளையும் பணம்பாலுக்கு தடை வாங்கி கொடுத்துள்ளார்கள்.
கள் குடிப்பதால் உடலுக்கு தீமை என்று யார் நிரூபித்தாலும் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக குடுக்க கள் இயக்கம் தயாராக உள்ளது. தமிழகத்தில் கள் இறக்கி விற்கவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல..., தமிழகத்தில் இறக்கப்படும் கள்ளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவாவது அரசு முன்வரவேண்டும்.
பனை மரத்தின் அவசியத்தை வலியுறுத்தி வரும் ஜனவரியில் கன்னியாகுமரி முதல் சென்னை வறை ஒரு பிரசார இயக்கம் தொடங்கி நடை பயணம் செல்ல ஏற்பாடு செயப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், பனைத் தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பனை மரத்தின் அவசியம் பற்றி மக்களுக்கு சொல்ல இருக்கிறார்கள்.
இந்தியாவில் எட்டுக்கோடி பனைமரங்கள் இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது, அதில் ஐந்து கோடி பனைமரங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.... தமிழ நாட்டில், எதை இழந்தாலும் பனை மரத்த காப்பாற்றியாக வேண்டும் என்றார் நல்லசாமி.
சரிதான் அது. பனை என்பது வெறும் மரம் மட்டுமல்ல.... தமிழரின் அடையாளம்.
நன்றி : நக்கீரன்.