Wednesday 21 March 2012

சங்கரன்கோவில்-68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி

- 0 comments
 
 
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
 
இந்தத் தொகுதியில் அதிமுக தொடர்ச்சியாக 5வது முறையாக வெற்றி பெற்று தனது கோட்டையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு 94,977 வாக்குகள் கிடைத்தன. 2வது இடத்தைப் பிடித்த திமுகவின் ஜவஹர் சூரியக்குமாருக்கு வெறும் 26,220 வாக்குகளே கிடைத்தன.
 
3வது இடத்தை மதிமுகவின் சதன் திருமலைக்குமாரும், 4வது இடத்தை தேமுதிகவின் முத்துக்குமாரும் பெற்றனர்.
 
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகின.
 
வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையமான புளியங்குடியில் உள்ள வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. அங்கு இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
 
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. பதிவான 16 ஓட்டுக்களில் அதிமுகவுக்கு 13 ஓட்டுக்களும், மதிமுகவுக்கு 3 ஓட்டுக்களும் கிடைத்தன.
 
ஆரம்பத்திலிருந்தே முத்துச்செல்வி முதலிடத்தில் இருந்து வந்தார். அவரை விட வெகுவாக பின்தங்கியிருந்தனர் மற்ற வேட்பாளர்கள்.
 
கடந்த தேர்தலில் இத்தொகுதியை அதிமுகவின் கருப்பசாமி வென்றார். அவரது மரணத்தைத் தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
 
திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் வெல்லுங்கள் பார்ப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா, தேமுதிகவுக்கும், பிற கட்சிகளுக்கும் சவால் விட்டிருந்தார். அந்தப் பின்னணியில் தேர்தல் நடந்திருப்பதாலும், மின்வெட்டு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் நடந்ததாலும் இந்தத் தேர்தலின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் முக்கிய கட்சிகள் பெற்ற வாக்கு விவரம்:
 
முத்துச் செல்வி - அதிமுக - 94,977
ஜவஹர் சூரியக்குமார் - திமுக - 26,220
சதன் திருமலைக்குமார் - மதிமுக -20,678
முத்துக்குமார் - தேமுதிக - 12,144
முருகன்- பாஜக - 1633



[Continue reading...]

தேமுதிகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பித்து விட்டனர்- ஜெயலலிதா

- 0 comments
 


சங்கரன்கோவில் தொகுதி மக்கள் எப்போதுமே அதிமுகவுக்குத்தான் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்போது தேமுதிகவுக்கு அவர்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர். அதிமுகவுக்கு வாக்களித்த அத்தனை பேருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், துணை சபாநாயகர் தனபால், பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரின் மகன்களின் திருமணம் உள்பட 7 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமண விழா சென்னையில் இன்று நடந்தது.

அதிமுகவுக்கு மிகவும் ராசியான வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் முதலவர் ஜெயலலிதா கலந்து கொண்டு திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை ஆசிர்வதித்தார்.

அப்போது சங்கரன்கோவில் தேர்தல் முடிவு அங்கு வந்து சேர்ந்தது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி அமோக வெற்றி பெறும் செய்தியை அறிந்து கூடியிருந்த அத்தனை பேரும் உற்சாகத்தில் மூழ்கினர். முதல்வர் முகத்திலும் தாங்க முடியாத சந்தோஷத்தைக் காண முடிந்தது.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில், எப்போதுமே சங்கரன்கோவில் தொகுதி மக்கள் அதிமுகவைத்தான் ஆதரித்து வந்துள்ளனர். இப்போதும் அது போலவே ஆதரவு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிகவுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களுக்குக் கிடைத்துள்ள இடம் மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம் என்றார் ஜெயலலிதா.



[Continue reading...]

மக்கள் புடை சூழ மாதா கோவிலில் உதயக்குமார்- கைது செய்யத் தவிக்கும் போலீஸ்!

- 0 comments
 
 
கூடங்குளம் அணு மின் நிலையப் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் ஆயிரக்கணக்கான மக்கள் புடை சூழ இடிந்தகரையில் உள்ள புனித லூர்துமாதா சர்ச் வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருவதால், மக்கள் தடுப்பை மீறிச் சென்று அவரைக் கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இருப்பினும் எந்த நேரத்திலும் அவரைக் கைது செய்வோம் என்று தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் கூறியுள்ளார்.
 
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின்போது தேனி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் அலை அலையாக திரண்டு சென்று போராடிய போராட்டத்தை தடியடி உள்ளிட்டவை மூலம் தடுத்தப் புகழுக்குரியவர் ராஜேஷ் தாஸ் என்பதால் உதயக்குமாரை எந்த ரூபத்தில் இவர் கைது செய்யப்போகிறாரோ என்ற பதைபதைப்பும், பரபரப்பும் கூடங்குளம், இடிந்தகரை பகுதிகளில் நிலவுகிறது.
 
கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு நேற்று வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து கூடங்குளம் போராட்டக் குழுவினரைக் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இடிந்தகரை விரைந்த உதயக்குமார், அங்குள்ள லூர்து மாதா சர்ச் வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
 
தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கும் அவர் இன்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உதயக்குமார் அமர்ந்திருப்பதால் மக்கள் தடுப்பை மீறிச் சென்றால் ஏதாவது பிரச்சினையாகி விடுமோ என்று போலீஸார் அஞ்சுகின்றனர். இதனால் மக்களுடன் பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். உதயக்குமாரைக் கைது செய்ய ஒத்துழைப்பு தருமாறு அவர்கள் கோரி வருகின்றனர்.
 
இதுகுறித்து ஐஜி ராஜேஷ் தாஸ் கூறுகையில், உதயக்குமாரை போலீஸாரிடம் ஒப்படைக்கும்படி மக்களை கேட்டு வருகிறோம். இதற்காக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்புடன் உதயக்குமாரைக் கைது செய்வோம். எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என்றார்.
 
கைது செய்யப்படவுள்ள உதயக்குமார் மீது ஏற்கனவே போலீஸார் 55 வழக்குகளைப் போட்டுள்ளனர். அவர் மீது மட்டுமல்லாமல், கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதும் 250க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.
 
உதயக்குமாரை கைது செய்த பின்னர் அவரை டெல்லிக்குக் கொண்டு போகவுள்ளதாகவும் ஒரு தகவல் அடிபடுகிறது.
[Continue reading...]

கூடங்குளம் விவகாரம் குறித்து ஐ.நா.சபைக்கு மனு அனுப்ப கோரிக்கை !

- 0 comments
 
 
கூடங்குளம் அணுஉலை திறப்பதை கண்டித்துள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி, இது குறித்து ஐ.நா.சபைக்கு கோரிக்கை மனு அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளது.
 
இது குறித்து தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
 
கூடங்குளத்தில் இந்திய, தமிழக அரசுகளால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை தங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மக்களின் உள்ளத்தின் குமுறல்களை கீழ்க்கண்ட அமைப்புகளுக்குத் தெரிவிக்கலாம்.
 
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையம்
 
மின்னஞ்சல்: urgent-action@ohchr.org
 
பேக்ஸ்: +41 22 917 9006 ( Geneva, Switzerland)
 
தொலைப்பேசி: +41 22 917 1234.
 
மனித உரிமைகள் கண்காணிப்பகம்
 
இணையம்: http://www.hrw.org/en/contact-us
 
ஆசிய மனித உரிமைகள் ஆணையம்
 
மின்னஞ்சல்: ua@ahrchk.org
 
கூடங்குளத்திற்குள் செய்தியாளர்களை அனுமதிக்க கோரி எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்புக்கு கடிதம் எழுதுங்கள்
 
dcdesk@rsf.org, heather.blake@rsf.org, rsf@rsf-es.org, rsfcanada@rsf.org, rsf@rsf.org, asie@rsf.org
 
அயல்நாடுகளில் உள்ள உறவுகள் மூலம் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்துங்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger