பல வர்ணம் கொண்ட புதன்
சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கிரகமாகவே புதன் அறியப்படுகிறது.
ஆனால் அந்தக் கிரகம் எப்போதுமே சூரியனுக்கு அருகில் இருந்ததாகக் கூறமுடியாது என்று அறிவியலாளர்கள் இப்போது கருத ஆரம்பித்துள்ளார்கள்.
புதனின் தோற்றம் குறித்து இப்போது ஆய்வாளர்கள் மீள் சிந்தனையைத் தொடங்கியுள்ளார்கள்.
அந்தக் கிரகத்தில் உள்ள சில இரசாயன பொருட்கள் அதீதமான வெப்பத்தில் உருவாகியிருக்க முடியாது என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா புதன் கிரகத்தை ஆய்வு செய்ய ஏவிய மெஸஞ்சர் என்ற விண்கலம் எடுத்து அனுப்பிய படங்களை வைத்தே இப்படியான கருத்துக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
புதன் கிரகம் நமது சூரிய மண்ட லத்துக்கு வெளியே உருவாகி இருக்கலாம் என்றும், பின்னர் அது மிதந்து வந்து இப்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
பூமியிலிருந்து புதனைப் பார்க்கும் போது மங்கிப் போன பழுப்பு நிற உருண்டையாக தெரியும். ஆனால் அந்தத் தோற்றத்துக்கு மாறாக அதன் மேற்பரப்பு புகைப் படங்களில் வேறு மாதிரியாகக் காணப்படுகிறது என தற்போது கிடைத்துள்ள புகைப் படங்களை பார்த்த பின்னர் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
புதிய புகைப்படங்களில் புதனின் பரப்பிலுள்ள எரிமலை பள்ளத்தாக்குகள் செம்மஞ்சள் வண்ணத்திலும் சில பகுதிகள் ஆழ் – நீல வண்ணத்திலும் இருப்பது தெரிகிறது.
ஒளி ஊடுருவ முடியாத மர்மமான தாதுப் பொருளையே அந்த ஆழ் – நீல வண்ணம் காட்டுகிறது என அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் இரசாயனவியல் துறை பேராசிரியர் டொக்டர் டேவிட் பிளிவெட் கூறுகிறார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போதே புதன் வேறு எங்கோ உருவாகி மெல்ல மெல்ல வான் மண்டலத்தில் மிதந்து நகர்ந்து தற்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்பது ஆய்வாளர் களின் கணிப்பீடாக உள்ளது.
அந்தக் கிரகத்தில் இருக்காது என்று கருதப்பட்ட விடயங்கள் அங்கு உள்ளன என்றும் அது மேலும் தமது கருத்தை வலுப்படுத்துவதாகவும் அமெரிக்க அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
புதனின் நிழல் படிந்த பெரும் பள்ளங்களில் உறைபனி இருப் பதையும் அதன் துருவப் பகுதியிலும் அதே போன்று காணப்படுவதாகவும் கூறும் விஞ்ஞானிகள், சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளில் இப்படி உறை பனி இருக்கும் என்று யார் தான் எண்ணியிருப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேபோன்று விரைவில் ஆவியாகக் கூடிய கந்தகம் மற்றும் பொட்டாஷியம் போன்ற தனிமங்களும் மிக அதிகளவில் காணப்படுவதாகவும் புகைப்படங்கள் மூலம் தெரிய வருவதாகவும் கூறும் விஞ்ஞானிகள் இவையெல்லாம் பெரும் புதிராக உள்ளன எனவும் கூறுகிறார்கள்.
[Continue reading...]