சந்தானம் முழுநேர காமெடியனாக இருந்தது வரை முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் முட்டி மோதிக்கொண்டிருந்தார் பரோட்டா சூரி. ஆனால், தற்போது சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாகியிருப்பதோடு, இனிமேல் குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே காமெடி செய்வேன். மற்றபடி நானும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என்று அறிவித்து விட்டார்.
இதனால் தற்போது சிங்கிள் காமெடியனாக களத்தில் நின்று கொண்டிருக்கிறார் சூரி. அதனால் காமெடியனுடன் சீன் பை சீன் என்ட்ரி கொடுக்க நினைக்கும் ஹீரோக்கள் அவரை விடாமல் பிடித்து வைத்துக்கொண்டுள்ளனர். அதனால் ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் சூரி, படத்துக்குப்படம் சத்தமில்லாமல் தனது சம்பளத்தையும் உயர்த்திக்கொண்டே வருகிறார்.
ஆனால், இந்த நேரத்தில் கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், கருணாஸ், கஞ்சா கருப்பு என எல்லோரும் ஹீரோவாகிட்டாங்க. இது காமெடியன்களின் காலம். அதனால் இந்த சந்தர்ப்பதில் நீங்களும் ஹீரோ வேசத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு வச்சிடுறது நல்லது என்று சில டைரக்டர்கள் கதைகளுடன் அவரை துரத்திக்கொண்டு வருகின்றனர்.
ஆனால் ஹீரோ என்றதும் சூரி மனதளவில் சபலப்பட்டு நின்று கொண்டிருக்க, அவரது அபிமானிகளோ, காமெடியனா நடிச்சா பெரிய எதிர்காலம் இருக்கு, ஹீரோவா நடிச்சா ஒருவேளை படம் அவுட்டான்னா அது அப்புறம் மதுரைக்கு வண்டியேறிட வேண்டியதான் என்று சொல்லி சூரியை யோசிக்க வைத்துவிட்டனர். இதனால் தன்னை ஹீரோவாக்க முயற்சித்தவர்களை, கொஞ்சம் அசந்தா என் பொழப்பையே கெடுத்து விட்டுறுவீங்க போலிருக்கே என்று துரத்தியடித்து விட்டார் சூரி.