மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள், நர்சுகள்,ஊழியர்கள் என பலர் கட்டடத்தில் சிக்கியிருக்கின்றனர். எத்தனை பேர் சிக்கியிருக்கின்றனர். எத்தனை பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை.
கோல்கட்டாவில் தகுரியாவில் உள்ள எ.எம்.ஆர்.ஐ., ஆஸ்பத்திரியில் இன்று அதிகாலை 3. 30 மணியளவில் தீ தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் 24 தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. கீழ் அறையில் இருந்த அம்மோனியா வாயு கசிந்து பின்னர் தீப்பற்றியிருக்கலாம் என்றும் 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இன்னும் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தீவிபத்து குறித்து ஆஸ்பத்திரியில் இருந்த ஒருவர் கூறுகையில், இன்று காலையில் குளியலறைக்கு சென்றேன் அப்போது மருத்துவமனையின் 2 வது மாடியில் திடீரென புகையாய் பரவியது. உடனே ஆபத்து காப்பாற்றுங்கள் என கதறினேன் அதற்கு பின்னர் கட்டடம் முழுவதும் புகை மண்டலமாக இருந்தது என்றார்.
தப்பிக்க முடியாமல் திணறிய நோயாளிகள்:
ஆஸ்பத்திரியில் தீ பிடித்து புகை கிளம்பிய பின்னர் ஏற்கனவே பலம் இல்லாமல் தளர்ந்த நிலையில் இருந்த நோயாளிகள் தங்களால் ஓடவும், முடியாமல் நகர்ந்து செல்லவும் முடியாமல் திணறியிருக்கின்றனர். பல நோயாளிகள் உறங்கிய நிலையில் இறந்து விட்டனர். இந்த ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் பலரும் கிட்னி கோளாறு, வயிறு உபாதை மற்றும் குழந்தைகள் நோயாளிகள் ஆவர். பல நோயாளிகளும் புகை மண்டலத்தில் சிக்கி மூச்சு திணறி இறந்திருக்கின்றனர். உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டு கொண்டிருக்கின்றனர்.
தாமதமாக வந்த தீயணைப்பு படை:
காலை 3. 30 க்கு தீ பிடித்திருக்கிறது. ஆனால் தீயணைப்பு படையினர் 4.15 க்குத்தான் வந்திருக்கின்றனர். தீ எங்கிருந்து பரவகிறது என்பதை கண்டறிய ஒரு மணி நேரம் பிடித்தது. காலை 7 .20 வரை தீ அணைக்கும் பணி நடந்தது. தற்போது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
யார் குற்றவாளி ? விசாரணைக்கு உத்தரவு :
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளை கொண்ட குழு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மீதான குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுவர் என மாநில மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் பந்தோயாபத்தாய் கூறியிருக்கிறார்.
கோல்கட்டாவில் அடிக்கடி தீ விபத்து :
கடந்த ஆண்டு கோல்கட்டாவில் மாபெரும் நட்சத்திர ஓட்டல் மற்றும் ஷாப்பிங் மாலில் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது ஆஸ்பத்திரியில் துயரச்சம்பவம் நடந்திருக்கிறது. எதிர்காலத்தில் இது போன்று நடக்காத வண்ணம் நகர்ப்புற துறையினர் முக்கிய வீதிகளில் ஆய்வு நடத்துவதுடன் தீ முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பயிற்சிகள் எடுக்கப்பட வேண்டும். தீ விபத்து ஏற்பட்டுள்ள இந்த ஆஸ்பத்திரியில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பாதுகாப்பு விதிகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. இந்த எ.எம்.ஆர்.ஐ., ஆஸ்பத்திரியல் தற்போது நடந்திருப்பது 2 வது தீ விபத்து ஆகும்.
முதல்வர் மம்தா ஸ்பாட்டுக்கு வந்தார்:
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீ பிடித்த ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு நடக்கும் மீட்பு பணிகள் விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமுற்ற உறவினர்களுக்கு மம்தா ஆறுதல் கூறி வருகிறார்.
நோயாளிகளின் உறவினர்கள் கதறல்:
ஆžஸ்பத்திரியில் உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் பலரும் ஆஸ்பத்திரியை சுற்றிலும் நின்று கதறி அழுதபடி இருக்கின்றனர். இது குறித்து ஒரு உறவினர் கூறுகையில்: எனது தந்தை விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் இப்படி தீ விபத்தினால் உயிர் போய் விட்டதே இதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கதறியபடி. ஒரு சிலர் ஆத்திரத்தில் வரவேற்புறையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.