திருவண்ணாமலையில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிகழ்ச்சியைப் பார்க்க வந்த அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், அக்ரி கிருஷ்ணமூ்ர்த்தி மற்றும் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோரை உள்ளே விடாமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பிடித்துத் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர்கள் என்று அவர்கள் சொல்ல, நீங்க யாராயி்ருந்தா எங்களுக்கென்ன என்று தெலுங்குப் பட பாணியில் போலீஸார் கூற பெரும் பரபரப்பாகி விட்டது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இந்த நிலையில், பரணி தீபம் ஏற்றுவதைக் கண்டு தரிசிப்பதற்காக வி.ஐ.பிக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த அம்மன் கோபுர வாசல் வழியாக அமைச்சர்களும் தளவாய் சுந்தரமும் வந்தனர். அங்கு கமாண்டோப் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். அதிரடிப்படையினரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அமைச்சர்கள் கும்பலாக வந்ததைப் பார்த்த அவர்கள் அனைவரையும் உள்ளே விட மறுத்தனர். பிடித்துத் தள்ளவும் செய்தனர். இதைப் பார்த்து செங்கோட்டையன் அதிர்ச்சி அடைந்தார். நாங்கள் அமைச்சர்கள் என்று அவர் கூறினார். இருந்தாலும் அதைக் கண்டுகொள்ளவில்லை காவலர்கள்.
இதைப் பார்த்துக் கோபமடைந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி (இவர் திருவண்ணாமலைக்காரர்) அமைச்சர்னு சொல்றோம் என்று கோபமாகக் கேட்டார். அதைக் கேட்ட காவலர்கள், யாராயிருந்தா எங்களுக்கென்ன, எங்க உயர் அதிகாரிகள் கூறினால்தான் உள்ளே விடுவோம் என்று திட்டவட்டமாக கூறி விட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூடியிருந்த பொதுமக்கள் இந்தக் கூத்தைப் பார்க்க ஆரம்பித்தனர். அமைச்சர்களோ உள்ளே போக முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். அங்கு கடும் வாக்குவாதமும் மூண்டது.
இந்த நிலையில், காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் விரைந்து வந்து அமைச்சர்களை உள்ளே அனுமதிக்க உத்தரவிட்டார். அதன் பின்னரே அமைச்சர்களால் உள்ளே போக முடிந்தது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?