என் அக்கா தற்கொலை செய்யவில்லை. அவர் சாவில் நிறைய மர்மம் இருக்கிறது. குடும்பபாங்கான கேரக்டரில் நடிக்க வந்த அவரை, கவர்ச்சி நடிகையாக்கவிட்டனர் என்று மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் தம்பி நாகவர பிரசாத் மீண்டும் புகார் தெரிவித்திருக்கிறார்.
1980களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தன் அழகாலும், கவர்ச்சியான நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்த சில்க் ஸ்மிதா, 1996-ல் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் மர்மம் இருக்கிறது. என் அக்கா தற்கொலை செய்யவில்லை என்று அப்போதே சில்க்கின் தம்பி நாகவர பிரசாத் புகார் கொடுத்தார். ஆனால் இது தற்கொலை தான் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு சில்க் ஸ்மிதாவை பிரதிபலிப்பது போன்று இந்தியில், டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படம் வெளியாகியுள்ளது. இந்தபடம் எடுக்கும் போதே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நாகவர பிரசாத். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் தன் அக்கா சாவில் மர்மம் இருப்பதாக மீண்டும் புகார் கூறியிருக்கிறார் நாகவர பிரசாத். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நானும், என் அக்கா சில்க் ஸ்மிதாவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள். சிறுவயதிலேயே எங்களை தவிக்கவிட்டு, எங்க அப்பா ஓடிவிட்டார். அக்காவுக்கு 17வயசு இருக்கும் போது அன்னபூர்ணம் என்ற பெண், அவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து அவர் சினிமாவில் வளர்ந்து முன்னணி நடிகையாக மாறினார். அவர் வளர்ந்து வந்த நேரத்தில் அவருக்கு சின்ன வயசில் திருமணம் ஆகிவிட்டது, கணவன் ஓடிவிட்டான் என்றெல்லாம் வதந்திகள் பரவியது. ஆனால் அதில் உண்மை கிடையாது. திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த ஒருவர் திடீரென வந்து என் அக்காவுடன் ஒட்டிக்கொண்டார். கால்ஷீட் உள்ளிட்ட சினிமா சம்பந்தமான எல்லா வேலைகளையும் அவர்தான் கவனித்தார். அந்த நபரை சில்க் ஸ்மிதா ரொம்ப நம்பினார்.
ஒரு சமயம், ஒரு வீடு வாங்குவது தொடர்பாக என் அக்காவுக்கும், அந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டது. சாவதற்கு சில நாட்களுக்கு முன் எனது தாய் சென்னை சென்று சில்க் ஸ்மிதாவுடன் தங்கிவிட்டு வந்தார். அவர் வந்த மூன்றாவது நாள் சில்க் ஸ்மிதா மின்விசிறியில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது. நாங்கள் பதறியடித்து சென்னை வந்தோம். அப்போது எனது அக்கா கைப்பட எழுதியதாக ஒரு கடிதத்தை எங்களிடம் காண்பித்தனர். அதில் என் வாழ்க்கையில் நிறையபேர் விளையாடிவிட்டனர். இதனால் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று எழுதப்பட்டிருந்தது. உண்மையில் அந்த கடிதத்தில் இருந்த கையெழுத்து, என் அக்காவுடையது அல்ல. அவருடைய மரணத்தில் நிறைய மர்மம் இருக்கிறது. ஆனால் இதை கண்டறிய போலீசும் மறுக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அலைகள் ஓய்வதில்லை போன்ற குடும்ப பாங்கான படத்தில்தான் சில்க் நடிக்க விரும்பினார். ஆனால் அவரை கவர்ச்சி நடிகையாக்கி விட்டனர் என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?