கோட்டூர்புரத்தில் 200 கோடி செலவில், கட்டப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக தரைத் தளம் உள்பட 9 தளங்களில் கட்டப்பட்டது. இதில் 8 தளங்களில் புத்தகப் பிரிவும், ஒரு தளத்தில் நிர்வாகப் பிரிவும் இயங்கி வருகின்றன. இந்த நூலகத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளின் போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
ரூ.40 முதல் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள புத்தகங்கள் இங்குள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயார் செய்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள், நல்ல சூழலில் படிப்பதற்காக புத்தகங்களுடன் வருபவர்கள், பார்வையற்றவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் இருப்பதால் இந்த நூலகத்துக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.
5 லட்சம் புத்தகங்கள்
இந் நூலகத்திற்காக 24075 தலைப்புகளில் 92440 தமிழ் நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. அச்சிட்ட நூல்கள் தவிர 50000 மின் நூல்கள், 11000 மின் இதழ்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள இந் நூலகத்தில் ஒரே நேரத்தில் 1250 பேர் அமர்ந்து படிக்க முடியும். இந்த நூலகம் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் தினமும் 2000 பேருக்கு மேல் வந்து செல்கின்றனர். வார நாட்களில் 3ஆயிரம் பேர் வரை இங்கு வந்து இங்குள்ள நூல்களை வாசித்து இங்கு வீசும் அறிவுக்காற்றினை சுவாசித்து செல்கின்றனர்.
அதிநவீன வசதி கொண்ட நூலகம்
தரமிக்க நூலகங்களில் காணப்படும் அனைத்து தொழில் நுட்பங்களும் இணைந்த மின் நூலகம்,இதனுடன் யுனெஸ்கோவும் இணைந்துள்ளது. முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகம் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டது.
இந்த நூலகத்தில் திரையரங்கு, கூட்ட அரங்கு, கண்காட்சி அரங்குகள் உள்ளன. மிகப்பெரிய முகப்பு கூடம், வரவேற்பு அறை, இண்டர்நெட் மையம் ஆகியவை உள்ளன. பார்வை இல்லாதவர்கள் பிரெய்லி முறையில் படிக்கும் நூலக அரங்கும் இருக்கிறது.
பார்வையற்றோருக்கான பிரெய்லி பிரிவு, புத்தகம் கொண்டு வந்து படிக்கும் பிரிவு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளுக்கானப் புத்தகங்கள் தரைத்தளத்தில் உள்ளன. முதல் தளத்தில் சிறுவர்-சிறுமிகளுக்கான புத்தகங்கள், இயற்கை எழில் கொண்ட வாசிப்பு அறை உள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்களும், 3-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4-வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் நூலகம்
5-வது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகள், 6-வது தளத்தில் அரசு ஆவணங்கள், 7-வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள் மற்றும் ஆடியோ-வீடியோ தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. டிஜிட்டல் நூலகமும், புகைப்பட தொகுப்புகளும் 8-வது மாடியில் இருக்கிறது.
இங்கு 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நூல்கள் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரத்துக்கும் அதிகமான பல்வேறு ஊடக சி.டி.க்கள் உள்ளன.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய அரிய நூல்கள் மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட நூல்கள் உலக முன்னணி பதிப்பாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட ஆங்கில மற்றும் பிறமொழி நூல்கள் அனைத்தும் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் கார்டு மூலம் இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
இந்த டிஜிட்டல் நூலகம் மூலம் உலகின் புகழ்பெற்ற எந்த நூலகத்தில் இருந்தும் தகவல்களை பெற முடியும். இங்கு 500-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் உள்ளன. இந்த நூலகத்துக்கு உலக டிஜிட்டல் நூலகத்தின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
நூலகத்திற்கான தர நிர்ணயம்
நூலகத்துக்கு என்று இந்தியத் தர நிர்ணய அமைப்பின் வழிகாட்டுதல்கள் உள்ளன. சுவரின் அகலம், கட்டட உயரம், ஸ்திரத்தன்மை என்று அனைத்தும் அதைப் பின்பற்றியே கட்டப்பட்டுள்ளன. சூரியனின் ஒளிக்கதிர்கள் அனைத்து அறைகளுக்கும் வந்து செல்லும் வகையில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. முற்றிலும் பசுமைக் கட்டடமாக இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சியில் உருவான ஒரே காரணத்திற்காக இந் நூலகம் மூடப்பெற்று..அங்கு குழந்தைகள் நல மருத்துவமனை இயங்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நூல்களை இடம் மாற்றித்தானே வைக்கிறோம் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால்..நூல் நிலையத்திற்காகவே உருவாக்கப் பட்ட இடத்திலிருந்து ஏன் மாற்ற வேண்டும் என்பதே லட்சக்கணக்கான நூல் ஆர்வலர்களின் கேள்வியாகும்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?