Thursday 3 November 2011

அழகுப் பெண்ணுக்கு அமைந்த வக்கிர தோழி

 
 
ஒவ்வொரு முறை கிராமத்துக்குப் போகும்போதும் புதியதாக ஏதேனும் சொல்வார்கள்.சில சுவையாகவும் இருக்கும்.தீபாவளிக்கு போன போது "உனக்கு தெரியுமா? அந்தப் பெண்ணின் கல்யாணம் நின்று போய் விட்டது!" எந்தப் பெண் என்று எனக்கு தெரியாது.அப்புறம் விளக்கமாக சொல்ல ஆரம்பித்தார்கள்.

கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த பெண் அவர்.அதே கிராமத்தில் உள்ள சுயமாகத் தொழில் செய்து கொண்டிருக்கும் பையனுக்கு காதல் வந்து விட்டது.பெண் இருக்கும் திசையிலேயே சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறார்.பெண்ணுக்கும் ஆர்வம் என்றாலும் பேச ஆரம்பிக்கவில்லை.


ஒரு நாள் பக்கத்து தெருவில் இருக்கும் அக்கா அழகுப் பெண்ணிடம் வந்து பேச ஆரம்பித்தார்." உனக்கு விருப்பமா? " என்று கேட்டு விஷயத்துக்கு வர இவருக்கு அக்காவை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.இருவரும் நெருக்கமாகி தோழமை கொண்டு விட்டார்கள்.அடிக்கடி வீட்டிலிருந்து சிக்கன்,மட்டன்,பலகாரம் என்று விஷேசமான சமையல் அனைத்தும் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.


அழகுப் பெண்ணும் அக்காவின் அன்பை நினைத்து உருகிப் போய்விட்டார்.காதலும் அவர் மூலமாகவே வளர்ந்து கொண்டிருந்தது.காதலனிடம் பேசும் ஆசை இருந்தாலும் அக்கா அறிவுரை சொன்னார்."நீ பேசாதே! அப்புறம் மதிக்க மாட்டார்கள்.ஆண்களிடம் அவ்வளவு சீக்கிரம் பிடி கொடுத்து விடக் கூடாது!" அக்காவே அவருக்கு போன் செய்து கொடுப்பார்.ஓரிரு வார்த்தைகள் பேசியதும் போதும் என்று கையாட்டி விடுவார்.


பையன் நண்பர்கள் யாருடனோ சொல்ல அவர்கள் மூலமாக அவனது பெற்றோருக்கு விஷயம் போய் விட்டது.ஓரளவுக்கு சம அந்தஸ்துள்ள குடும்பங்கள்தான்.ஒரு வழியாக இரண்டு வீட்டிலும் பேசி நான்கு மாதம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவாகி விட்டது.


ஒரு நாள் அழகுப் பெண்ணின் அண்ணன் வீட்டுக்கு வந்து ஒரே சத்தம்."அவன் யோக்கியன் இல்லை.அவளுடன் சினிமா தியேட்டரில் பார்த்தேன்" அவள் என்று குறிப்பிடப்பட்டவர்,அழகுப் பெண்ணிடம் தோழமை கொண்ட அக்காதான்.அந்த திருமணம் நின்று போய்விட்டது என்று சொன்னார்கள்.இரண்டு பேருக்கு காதல் மலர்வதை எப்படியோ கவனித்த அக்கா அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.தன் மீது அபாண்டமாக பழி போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.


எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நம் மீது அன்பைக் காட்டுகிறார்கள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது.உயர் அதிகாரி ஒருவருடன் பேசிகொண்டிருந்தோம்.உடன் வந்தவர் எதையோ பேச ஆரம்பிக்க சில வார்த்தைகளிலேயே அவர் கேட்டார்! " இதை எதற்காக என்னிடம் சொல்கிறீர்கள்? பேச ஆரம்பித்தவர் திணறினார்.


ஒருவர் பேசும் வார்த்தைகளை பிரித்துப் போட்டு பார்த்தால் நோக்கம் தெரிந்துவிட வாய்ப்புண்டு." சார் அவன் சரியில்லை சார் ! " என்று சொல்பவரை கவனித்து பாருங்கள்.இன்னொருவரை மட்டம் தட்டி தன்னை உயர்த்திக்காட்டவா? நம்மை எச்சரிக்கவா என்பது புரியும்.ஆதாயத்திற்காக உறவாடுபவர்களே அதிகம்.கொஞ்சம் யோசிக்க முடிந்தால் சிக்கல்கள் நேராமல் தடுத்துக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger