தமிழக காங்கிரஸ் தலைவராக கே.வி.தங்கபாலு, கடந்த 3 1/2 ஆண்டுகளாக பணியாற்றினார். இவர், தலைவராக இருந்தபோது பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை முன்னின்று நடத்தினார்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, அவரது ஆதரவாளர்களுக்கு மட்டும் சீட்டு கொடுத்ததாக குற்றம் சாட்டினார்கள். இது மட்டுமல்லாமல், அவரது மனைவி ஜெயந்திக்கு மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளித்தார்.
அப்போது, விண்ணப்பம் சரியான முறையில் பூர்த்தி செய்யவில்லை என்று ஜெயந்தியினுடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த கே.வி.தங்கபாலு மைலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இதை கண்டித்து, உருவபொம்மை எரிப்பு, மறியல் போராட்டம் போன்றவைகள் நடைபெற்றன. மைலாப்பூர் சட்டசபை தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து, கே.வி.தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சோனியாகாந்தி மற்றும் மத்திய மந்திரிகளுக்கு ஏராளமானோர் தந்தி அனுப்பினார்கள்.
தங்கபாலுவை பதவியில் இருந்து நீக்கக்கோரி சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தங்கபாலுவுக்கு எதிரான கோஷ்டியினர், அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி சத்தியமூர்த்தி பவனை அடித்து நொறுக்கினார்கள். கே.வி.தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்தது.
இதற்கிடையே சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், இவரது ராஜினாமாவை அகில இந்திய தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, சுமார் 5 மாதங்களாக தமிழக காங்கிரஸ் தலைவராக அவரே தொடர்ந்து நீடித்து வந்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், நேற்று மாலை தங்கபாலுவின் ராஜினாமாவை சோனியாகாந்தி ஏற்றுக் கொண்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஞானதேசிகன் எம்.பி.யை நியமித்தார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானதேசிகன், தற்போது டெல்லி மேல்- சபை உறுப்பினராக உள்ளார்.
இதற்கு முன்பும் மேல்-சபை உறுப்பினராகவே பதவி வகித்து வந்தார். இவர், வழக்கறிஞர் ஆவார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இவரது வீடு உள்ளது. இவரது மனைவி பெயர் திலகவதி. 2 மகன்கள் உள்ளனர். இவர், ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை தொடங்கியபோது, செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். மத்திய மந்திரி ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞானதேசிகன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மீது நம்பிக்கை வைத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பை தந்த சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்திக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் உள்பட அனைவரையும் ஒன்று சேர்த்து, ஒருமுனை படுத்தி, தமிழ்நாட்டில் காங்கிரசை பலப்படுத்த எல்லா முயற்சிகளையும் நிச்சயமாக மேற்கொள்வேன். மத்திய மந்திரி ஜி.கே.வாசன் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. மற்ற தலைவர்களுடன் எப்போதும் நான் அன்பாக பேசி பழகக்கூடியவன்.
ஆகவே, எல்லோரையும் ஒற்றுமையுடன் கொண்டு செல்வேன். அ.தி.மு.க. ஆட்சி பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால், நான் இப்போதுதான் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளேன். தமிழக காங்கிரஸ் தலைவராக நான் பதவியேற்றதும் முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுபற்றி விளக்கமாக கூறுகிறேன்.
இவ்வாறு ஞானதேசிகன் எம்.பி. கூறினார்.
கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக காங்கிரஸ் தலைவராக ஞானதேசிகன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அதை நான் வரவேற்கிறேன். அவருக்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன். முறைப்படி தலைவர் பதவியை அவரிடம் ஒப்படைப்பேன். சோனியாகாந்தி அறிவிக்கும் எவரையும் தலைவராக ஏற்றுக்கொள்வேன் என்று நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். சட்டசபை தேர்தல் முடிவையொட்டி, அதற்கு தார்மீக பொறுப்பேற்று எனது. தலைவர் பதவியை ராஜினாமா செய்து, சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். தற்போது, அந்த கடிதத்தை ஏற்று புதிய தலைவரை சோனியாகாந்தி நியமித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு தார்மீக பொறுப்பு ஏற்று யாரும் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. நான் மட்டும்தான் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் தலைவர் பதவியில் இருந்த காலங்களில் பெரிய சவால்கள் பற்றி இப்போது பேச முடியாது.
இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறினார்.