பாய்லின் என்றால் நீலக்கல் என்று அர்த்தம் phailin storm blue stone you mean that
Tamil News
வங்க கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டும் முறை கடந்த 2004–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. ஆசிய நாடுகள் சுழற்சி முறையில் இந்த பெயர்களை சூட்டி வருகின்றன. அதன்படி இன்று ஒடிசாவை தாக்கும் புயலுக்கு பாய்லின் என்ற பெயரை தாய்லாந்து நாடு கொடுத்துள்ளது.
தாய்லாந்து மொழியில் பாய்லின் என்றால் ''நீலக்கல்'' என்று அர்த்தம். நவராத்தினங்களில் ஒன்றான நீல மாணிக்கல் சற்று வித்தியாசமானது. நீலக்கல் அணிந்தால் செல்வமும் செல்வாக்கும் பெருகும். தெய்வீகத்தன்மை அதிகரிக்கும் என்பார்கள். சனி பகவானால் வரும் கெடுதல்களை நீலக்கல் தடுத்து நிறுத்தும் என்பார்கள்.
பொதுவாக மகர ராசிக்காரர்கள் நீலக்கல் அணிவார்கள். வங்க கடலில் அடுத்து உருவாகும் புயலுக்கு ''ஹெலன்'' என்று பெயர் சூட்டப்படும். வங்கதேசம் இந்த பெயரை கொடுத்துள்ளது. அதன் பிறகு வரும் புயலுக்கு இந்தியா கொடுத்துள்ள ''லெகர்'' என்ற பெயர் வைக்கப்படும். தாய்லாந்து நாடு எந்த நோக்கத்தில் பாய்லின் (நீலக்கல்) என்ற பெயரை சூட்டியதோ தெரியவில்லை. ஆந்திரா, ஒடிசாவில் உள்ள சுமார் 12 மாவட்ட மக்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு பதை, பதைப்புடன் உள்ளனர்.
மேலும் 4 மாநிலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை
பாய்லின் புயல் கோரத் தாண்டவம் ஆடலாம் என்ற எதிர்பார்ப்பில் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் முப்படைகள், அரசின் அனைத்துத் துறைகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையே ஒடிசாவை தாக்கிய பிறகு இந்தியாவின் மத்திய நிலப்பகுதியில் புயல் பாய்ச்சல் நீடிக்கும் என்று தெரிகிறது. இதையடுத்து பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
அந்த மாநிலங்களிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் தேவைக்கு ஏற்ப விரைந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புயல் தாக்கும் அபாயம் உள்ள 6 மாநிலங்களில் இருக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வேறு எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நேற்றே வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.
பயிர்கள் சேதமாகும் அபாயம்
ஒடிசா மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் அரிசி, கோதுமை பயிரிடப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் அவை அறுவடைக்கு தயாராக உள்ளன. இன்று மாலை பாய்லின் தாக்கும்போது மிக பலத்த மழை பெய்யும் என்பதால், பயிர்கள் அனைத்தும் சேதம் அடைய வாய்ப்புள்ளது.
இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதற்கிடையே ஒடிசாவில் 7 மாவட்டங்களிலும் புயல் பாதுகாப்பு மற்றும் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரம் பள்ளிக் கூடங்கள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. 280 அரசு அலுவலகங்கள் மக்கள் தங்குவதற்கு புயல் பாதுகாப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
ஒடிசாவில் 40 கிராம மக்கள், ஆந்திராவில் 25 கிராம மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பாய்லின் புயல் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஆந்திராவில் 30 ஆயிரம் மின் ஊழியர்கள் பணிக்கு திரும்பி முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
...
Show commentsOpen link
[Continue reading...]