Thursday 6 November 2014

சச்சின் இழந்த இரட்டைசதம் Playing It My Way

- 0 comments



சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதையில் வெளிப்படையாக சில உள்-விவரங்களைப் பதிவு செய்துள்ளார். அதில் ஒன்றுதான் பாகிஸ்தானுக்கு எதிராக முல்டான் டெஸ்ட்டில் சச்சின் 194 ரன்களில் இருந்த போது கேப்டன் திராவிட் டிக்ளேர் செய்த விவகாரமும். அதுபற்றியும் தனது கோபத்தை சச்சின் சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

இரட்டைச் சதம் எடுக்க 6 ரன்கள் இருந்த போது ராகுல் திராவிட் டிக்ளேர் செய்த அந்த சம்பவம் பற்றி தனது மன உணர்வுகளைப் பற்றி சச்சின் எழுதியிருப்பதாவது:

"அந்த டிக்ளேருக்குப் பிறகு நான் ராகுலிடம் தெரிவித்தேன், களத்தில் எனது ஈடுபாட்டை அவரது முடிவு குறைக்காது, ஆனால் களத்திற்கு வெளியே நான் தனியாக இருக்க விரும்புவதாக அவரிடம் தெரிவித்தேன்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, நானும், ராகுல் திராவிடும் தொடர்ந்து சிறந்த நண்பர்களாகவே இருந்தோம். எங்கள் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வரும் வரையில் கூட எங்களிடையே நல்ல தோழமை உணர்வு நீடித்தது. களத்தில் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தோம். கிரிக்கெட்டோ, நட்போ பாதிக்காத வகையில் நாங்கள் அந்த சம்பவத்தைக் கையாண்டோம்.

அன்றைய தினம் முல்டான் டெஸ்ட் போட்டியில், கங்குலி முதுகு காயம் காரணமாக ஆடவில்லை என்பதால் திராவிட் பதிலி கேப்டனாக இருந்தார். தேநீர் இடைவேளையின் போது நான், ஜான் ரைட் மற்றும் திராவிடிடம் திட்டம் என்னவென்று கேட்டேன். அப்போது பாகிஸ்தானிடம் ஒரு மணிநேரம் பேட்டிங்கை அளிக்கவுள்ளோம் என்றனர். அதாவது 2ஆம் நாள் இறுதியில் 15 ஓவர்கள் வரை பாகிஸ்தானை பேட் செய்ய வைக்கப்போகிறோம் என்றனர். நான் அதனை மனதில் வைத்து தேநீர் இடைவேளைக்குப் பிறகு களத்தில் சென்று ஆடினேன். 

ஆனால், ஆடிக்கொண்டிருக்கும் போது அரை மணி நேரம் கழித்து பதிலி வீரர் ரொமேஷ் பொவார் என்னிடம் வந்து ரன் விகிதத்தை அதிகரிக்குமாறு கூறியதாக தெரிவித்தார். நான் கூட அவரிடம், எனக்கும் அது தெரியும், கள அமைப்பில் வீரர்கள் தூரத்தில் நிற்கின்றனர், இப்படிப்பட்ட கள அமைப்பில் நாம் அதிகமாக ரன் விகிதத்தை ஏற்றுவது கடினம் என்றேன். 

சிறிது நேரம் சென்ற பிறகு நான் 194 ரன்களில் இருந்த போது ரொமேஷ் பொவார் மீண்டும் வந்து, அந்த ஓவரிலேயே நான் இரட்டைச் சதத்தை எடுக்க வேண்டும், ஏனெனில் ராகுல் திராவிட் டிக்ளேர் செய்ய முடிவெடுத்துள்ளார் என்றார். நான் சற்றே அதிர்ந்தேன், ஏனெனில் என் கணக்குப் படி இன்னும் 2 ஓவர்கள் இருக்கிறது அதற்குள் நான் இரட்டைச் சதம் எடுத்து விடலாம் என்றே நினைத்திருந்தேன். 

ஆனால் பொவார் குறிப்பிட்ட அந்த ஓவரில் ஒரு பந்தைக் கூட நான் எதிர்கொள்ள முடியவில்லை. காரணம், இம்ரான் பராத் வீசினார், யுவ்ராஜ் முதல் 2 பந்தை தடுத்தாடினார். 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். 4வது பந்தை தடுத்தாடினார். அடுத்த பந்தில் அவுட் ஆனார்.

அடுத்த பேட்ஸ்மென் பார்த்திவ் படேல் களமிறங்கத் தயாராகி வந்து கொண்டிருக்கும் போது ராகுல் திராவிட் டிக்ளேர் என்றார் நாங்கள் பெவிலியன் திரும்பினோம். ஆனால் 16 ஓவர்கள் மீதமிருந்தன. தேநீர் இடைவேளைக்கு முன் பேசியதோ 15 ஓவர்கள்தான், ஆனால் ஒரு ஓவருக்கு முன்னதாகவே டிக்ளேர் செய்தனர்.

நான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன். ஏனெனில் இது அர்த்தமற்ற செயல், இது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் மட்டுமே. கடந்த தொடரில் சிட்னியில் அமைந்தது போல் 4ஆம் நாள் அல்ல. 

கடும் ஏமாற்றமடைந்த நான் ஓய்வறையில் ஹெல்மெட் மற்றும் பேட்டை தூக்கி எறிவேன் என்று சக வீரர்கள் நினைத்தனர். ஆனால் என் வழி அதுவல்ல. ஆனால் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

நான் பயிற்சியாளர் ஜான் ரைட்டிடம் அமைதியாகக் கூறினேன் பீல்டிங்கிற்குச் செல்லும் முன் கொஞ்சம் அவகாசம் வேண்டும் ஏனெனில் நீண்ட நேரம் பேட் செய்ததால் இறுக்கமாக உள்ளது என்றேன். ஆனால் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தேன். 

நான் பாத்ரூமில் முகம் கழுவிக் கொண்டிருந்த போது ஜான் ரைட் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். தான் இதற்குக் காரணம் அல்ல என்றார். நான் ஆச்சரியமடைந்தேன், அணியின் முடிவெடுக்கும் விஷயங்களில் பயிற்சியாளருக்கும் பங்கு இருக்கும் போது அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றேன். 

நான் அவரிடம் கூறினேன், நடந்தது நடந்து விட்டது, இனி மாற்ற முடியாது. ஆனால், தேநீர் இடைவேளைக்கு முன் நாம் விவாதித்ததற்கு எதிராக டிக்ளேர் செய்யப்பட்டுள்ளது. நான் இரட்டைச் சதம் எடுக்க ஒரு பந்தை எதிர்கொள்ளக் கூட அனுமதிக்கப்படவில்லை என்பதை அவரிடம் தெரிவித்து விட்டேன். 

சிறிது நேரம் கழித்து சவுரவ் கங்குலி வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். இந்த முடிவை தான் எடுக்கவில்லை என்றார். எனக்கு இதுவும் ஆச்சரியமாக இருந்தது. தேநீர் இடைவேளையின் போது விவாதத்தில் அவர் இருந்தார். டிக்ளேர் செய்யும் போதும் ஓய்வறையில் இருந்தார். ஆனால் சவுரவிடம் அதைப் பற்றி இனி பேசிப் பயனில்லை என்றேன். 

சஞ்சய் மஞ்சுரேக்கர் அப்போது வர்னணையாளர், அவர் என்னிடம் வந்து டிக்ளேர் செய்தது ஒரு தைரியமான முடிவு, இது இந்திய கிரிக்கெட்டிற்கு நல்ல அறிகுறி என்றார். இப்படிப்பட்ட தொனியில் மஞ்சுரேக்கர் பேசிக்கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியுமா என்று கூறி அவரை நிறுத்தினேன். 

ஓய்வறை விவாதத்தில் என்ன நடந்தது என்பது தெரியாமல் பேசுகிறீர்கள் தெரியாமல் நீங்கள் உங்கள் முடிவை என்னிடம் கூறுகிறீர்கள். மேலும் அவரது கருத்து எனக்கு பிடிக்கவில்லை என்பதையும் அவரிடம் தெரிவித்தேன். வேண்டுமென்றே வித்தியாசப்பட்டவர் போல் அவர் நடந்து கொண்டார் என்றே நான் அப்போது கருதினேன். 

ராகுல் திராவிட் என்னிடம், அணியின் நலனுக்காகவே அந்த முடிவை எடுத்ததாகவும், வெற்றி பெறுவதே எங்கள் நோக்கம் என்பதை எதிரணிக்கு உணர்த்தவே டிக்ளேர் செய்ததாக கூறினார். நான் திருப்தியடையவில்லை.

நான் கூறினேன், நானும் அணியின் நலனுக்காகவே ஆடுகிறேன். 194 ரன்கள் அணிக்கு எனது தனிப்பட்ட பங்களிப்பு என்றேன். 

இந்தத் தொடருக்கு முன் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் சிட்னி டெஸ்ட் போட்டியில், 4ஆம் நாள் ஆட்ட முடிவு நேரத்தில், கேப்டன் சவுரவ் கங்குலி 3 அல்லது 4 மெசேஜ் அனுப்பினார். அதாவது எப்போது டிக்ளேர் செய்வது என்று. ராகுல் திராவிட் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இந்த இரு சூழ்நிலைகளும் ஒப்பு நோக்கத்தக்கதே. 

முல்டானை விட சிட்னி டெஸ்டில் டிக்ளேர் செய்வது என்பது அணியின் தொடர் வெற்றிக்கு வழிவகுப்பதாகக் கூட அமைந்திருக்கும். முல்டானில் தனது வெற்றி ஆர்வத்தை காண்பித்த திராவிட் சிட்னியில் தான் பேட் செய்து கொண்டிருக்கும் போதும் இதனைச் செய்திருக்க வேண்டும்." என்று இழந்த இரட்டைசதம் பற்றி சச்சின் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

Keywords: சச்சின் சுயசரிதை, Playing It My Way, Sachin Tendulkar, Multan Test, Rahul Dravid Captain, ராகுல் திராவிட் கேப்டன், சச்சின் 194 நாட் அவுட், முல்டான் டெஸ்ட்
Topics: கிரிக்கெட், கிரிக்கெட் வீரர்கள், சர்ச்சை, விளையாட்டு, கிரிக்கெட்

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger