தனியார் நிறுவனங்களின் லாபத்துக்காக, இந்தியாவில் மருந்துப் பொருட்களின் விலையில் கடுமையாக அதிகரிக்கிறது என்பதும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
நாட்டில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக, தேசிய மருந்து பொருள் விலை நிர்ணய ஆணையம் கடந்த 97-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு 348 மருந்துகளை பட்டியலிட்டு அவை முக்கியத்துவம் வாய்ந்தது என இந்த ஆணையம் அறிவித்தது. கடந்த மே 29-ம் தேதி 108 அத்தியாவசிய மருந்து பொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயித்து இந்த அமைப்பு உத்தரவு பிறப்பித்தது.
நாடு முழுவதும் ஆறு கோடி ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உள்ளனர். இதய நோயாளிகள் 5.7 கோடி, நீரிழிவு நோயாளிகள் 4.1 கோடி, எய்ட்ஸ் நோயாளிகள் 2.5 லட்சம், காசநோயாளிகள் 22 லட்சம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 11 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்துகளை கவனத்தில் கொண்டு மத்திய அரசு அதிகபட்ச விலையை நிர்ணயித்தது.
ஆனால், மருந்து விற்பனை நிறுவனங்களின் நெருக்கடிக்கு பணிந்து இந்த உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. உள்நோக்கத்துடனும் வணிக நிறுவனங்களுக்கு சாதகமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவால் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கிறது. கோடிக்கணக்கான நோயாளிகளின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்தச் சூழலில், சமீபத்தில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இவ்விவகாரத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி பி.ராஜீவ் எழுப்பினார்.
அப்போது அவர் கூறும்போது, "எய்ட்ஸ், காசநோய், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் இந்நோய்களால் அவதிப்படும் சாமானிய மக்கள் மேலும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சில தனியார் மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படும் வகையில் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் தவறான மருந்து கொள்கைகளை வகுத்திருப்பதாலேயே இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசின் இந்தக் கொள்கை தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.
இதய நோய், நீரிழிவு நோய், எய்ட்ஸ் நோய், காசநோய், புற்றுநோய் முதலானவற்றால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான இந்தியர்களின் எத்தனை பேர் பணக்காரர்கள், எவ்வளவு பேர் எழை, நடுத்தர மக்கள் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். பெரும்பான்மையானவர்கள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களே என்பது தெளிவாகத் தெரியவரும்.
புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட தங்களது உறவுகளைக் காப்பாற்ற நன்கொடை வேண்டி கையேந்தி நிற்கும் ஏழைகளுக்கு இந்த அரசு செய்தது என்ன? 300 பேரிடம் கையேந்தியவர்கள் இனி 3000 பேரிடம் கையேந்தட்டும் என்று நினைக்கிறதா இந்த அரசு?
பெட்ரோல் விலை உயர்ந்தாலோ, டீசல் விலையை அதிகரித்தாலோ அதன் தாக்கம் உடனடியாக நம் சமூகத்தில் வெளிப்படுகிறது. அரசின் மீது அதிருப்தி உடனடியாகவும் வலுவாகவும் பதிவு செய்யப்படுகிறது.
ஆனால், ஏழை - எளிய மக்களைக் கொல்லும் மருந்து விலை உயர்வு குறித்து நம் சமூகம் திரண்டு போராடாதது ஏன்? இந்தப் பாதிப்பின் தன்மை ஒட்டுமொத்த மக்களுக்கு எளிதில் புரியாது. அவர்கள் நேரடியாக பாதிப்புக்கு உள்ளானால்தான் அதன் கொடூரம் தெரியும். கடும் நோயால் பாதிக்கப்பட்ட உறவுகளை மருத்துவமனையில் விட்டுவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் எப்படி வீதிக்கு வந்து போராட முடியும்?
மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியக் கூடிய விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படும் மோடி தலைமையிலான அரசு, பெரும்பாலான மக்களின் பார்வையிட படாத, அதேவேளையில் அவர்களைக் கடுமையாக பாதிக்கும் மருந்துகள் போன்றவற்றை விலையை உயர்த்த வழிவகுப்பது எந்த வகையில் நியாயம்?
"தயவுசெய்து பெட்ரோல் விலையையே நீங்கள் உயர்த்திக் கொள்ளுங்கள் மோடி!" என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.