2 தீவிரவாதிகளை பிடித்தது எப்படி?: பரபரப்பு தகவல்கள் How 2 militants captured information
Tamil NewsYesterday,
சென்னை, அக்.6-
ஆந்திராவில் புத்தூர் கிராமத்தில் 12 மணி நேரம் கடும் போராட்டம் நடத்தி தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் சினிமா திகில் காட்சிகளை மிஞ்சும் வகையில் பரபரப்பாக காணப்பட்டது.
கடந்த 3 மாதங்களாக தமிழகத்தையே பயமுறுத்தி மிரட்டி வந்த பயங்கர தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய 3 பேரும் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆடிய ஆட்டத்துக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலையே தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும், சென்னை நகர போலீசாரும் இதற்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டனர்.
மேற்கண்ட 3 தீவிரவாதிகளில், முக்கியமான தீவிரவாதியான போலீஸ் பக்ருதீன் சென்னை பெரியமேடு பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் கைது செய்யப்பட்டார். சென்னையில் நடந்த திருப்பதி குடை ஊர்வலத்தை சீர்குலைக்கும் சதித்திட்டத்தோடு போலீஸ் பக்ருதீன் சென்னை பெரியமேட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தார்.
இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், போலீஸ் படையோடு பெரியமேடு லாட்ஜை சுற்றி வளைத்தார். ஆனால், லாட்ஜில் போலீஸ் பக்ருதீன் இல்லை. திருப்பதி குடை ஊர்வலம் வரும் வழியான சூளை பகுதியில் போலீஸ் பக்ருதீன் நோட்டம் பார்த்துக்கொண்டிருந்தார்.
இந்த தகவலும் இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு கிடைத்தது. உடனே லட்சுமணன் சூளை பகுதிக்கு சென்று போலீஸ் பக்ருதீனை சுற்றி வளைத்து பிடித்தார். அப்போது அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. போலீஸ் பக்ருதீனும், இன்ஸ்பெக்டர் லட்சுமணனும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
போலீஸ் பக்ருதீன், இன்ஸ்பெக்டர் லட்சுமணனின் கழுத்தை நெறித்து கொல்லப்பார்த்தார். ஆனால் இன்னொரு இன்ஸ்பெக்டர் லட்சுமணனை காப்பாற்றினார். அதன்பிறகு போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் பக்ருதீனை சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தார்கள். விசாரணையில், போலீஸ் பக்ருதீன் தான் செய்த குற்றச்செயல் அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.
அவரது கூட்டாளிகளான பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும் ஆந்திர மாநிலம் புத்தூரில் ஒரு வாடகை வீட்டில் பதுங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். உடனடியாக போலீஸ் படையினர் நேற்று முன்தினம் இரவோடு இரவாக பன்னா இஸ்மாயிலையும், பிலால் மாலிக்கையும் சுற்றி வளைத்து கைது செய்ய அதிரடி வியூகம் வகுத்தார்கள்.
சிறப்பு புலனாய்வு பிரிவு டி.ஜி.பி. நரேந்திர பால்சிங் உத்தரவின் பேரில், ஐ.ஜி.க்கள் மகேஷ்குமார் அகர்வால், கண்ணப்பன், போலீஸ் சூப்பிரண்டுகள் அன்பு, நாகஜோதி, கூடுதல் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ரவீந்திரன், லட்சுமணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், வெற்றிவேல், எட்வர்டு பிரபு மற்றும் 200 போலீசார் ஆந்திர மாநிலம் புத்தூருக்கு விரைந்தனர்.
தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தொடர்பாக ஆந்திர போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆந்திர போலீஸ் படையினர் புத்தூரில் தயார் நிலையில் காத்திருந்தனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடம் புத்தூர் ரெயில் நிலையம் அருகேயுள்ள கேட்புத்தூர் எனப்படும் பகுதியாகும்.
அங்கு தாசர்கொண்ட வீதி, கேட் வீதி, மேதர் வீதி, முகமது வீதி என்ற நான்கு தெருக்கள் உள்ளன. அங்கு சுமார் 500 குடும்பங்கள் வசிக்கிறார்கள்.
அதில் மேதர் வீதியில் ஒரு பழமையான ஓட்டு வீட்டில் தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும் தங்கியிருந்தனர்.
அந்த பழமையான வீடு மத்திய கலால் வரித்துறையின் முன்னாள் அதிகாரியான யாசின் பாஷா என்பவரது வீடாகும். யாசின் பாஷா இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் திருப்பதியில் வசிக்கிறார்கள்.
இந்த ஓட்டு வீட்டை மாதம் ரூ.1,000 வாடகைக்கு தீவிரவாதிகளுக்கு விட்டுள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் பழைய இரும்பு பொருட்கள், பழைய துணிமணிகளை வாங்கி விற்கும் வியாபாரிகள் போல தீவிரவாதிகள் அந்த பகுதிக்கு சென்றனர்.
தமிழகத்தில் இருந்து சென்ற போலீஸ் படையினர் புத்தூருக்கு அதிகாலை 3 மணிக்கு போய் சேர்ந்தனர். உடனடியாக ஆந்திர போலீசாரும், தமிழக போலீசாரும் இணைந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த ஓட்டு வீட்டை முற்றுகையிட்டனர்.
இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வீட்டின் கதவை தட்டினார். நீண்டநேரம் கதவை தட்டிய பிறகு தீவிரவாதி பிலால் மாலிக் வந்து கதவை திறந்தார். வெளியில் போலீஸ் படையினர் நிற்பதை பார்த்ததும், அதிர்ச்சியடைந்தார்.
இதற்குள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், பிலால் மாலிக்கை தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் சென்றார். உடனே பிலால் மாலிக் கதவை பூட்டிவிட்டார். வீட்டுக்குள் பிலால் மாலிக்கும், இன்ஸ்பெக்டர் லட்சுமணனும் சண்டை போட்டனர். பன்னா இஸ்மாயிலும் சேர்ந்து இன்ஸ்பெக்டர் லட்சுமணனை தாக்கினர். லட்சுமணனை தீவிரவாதிகள் இருவரும் சேர்ந்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டனர். அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
இதற்கிடையில், லட்சுமணனின் அபய குரல் கேட்டு, வெளியில் நின்றிருந்த போலீஸ் படையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்த லட்சுமணனை போலீஸ் வேனில் ஏற்றி சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்குள் தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும் வீட்டின் உள்பகுதியில் உள்ள ஒரு அறைக்குள் கதவை உள்பக்கம் பூட்டிக்கொண்டனர். அவர்களுடன் பிலால் மாலிக்கின் மனைவி ஹசினா பானு (வயது 30), மகன்கள் முகமது ஹம்சா (4), முகமது யாசிக் (1), மகள் பாத்திமா (3) ஆகியோரும் இருந்தனர். போலீசார் அவர்களை வெளியே வரும்படி எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் லட்சுமணனை கத்தியால் குத்தும்போது வெளியில் நின்றிருந்த போலீசார் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். அந்த துப்பாக்கி குண்டு பன்னா இஸ்மாயிலின் வயிற்றில் பாய்ந்துவிட்டது. அந்த குண்டு காயத்தோடு பன்னா இஸ்மாயில் வீட்டுக்குள் இருந்தார்.
தீவிரவாதிகள் இருவரும் போலீசாருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். நாங்கள் பயங்கர வெடிகுண்டுகளை வீட்டுக்குள் வைத்துள்ளோம். கதவை உடைத்து எங்களை பிடிக்கமுற்பட்டால், குண்டுகளை வெடிக்கச் செய்து நாங்களும் அழிந்து, ஊரையே அழித்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் போலீஸ் படையினர் கதவை உடைத்து அதிரடி நடவடிக்கை எடுக்காமல், வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர். வீட்டை சுற்றி போலீசார் காவலுக்கு நின்றனர். அறைக்குள் இருந்த தீவிரவாதிகளிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்தனர்.
அடுத்தகட்ட நடவடிக்கையை பொழுது விடிந்தபிறகு எடுக்கலாம் என்று போலீசார் முடிவு செய்துவிட்டனர். தொடர்ந்து தீவிரவாதிகள் பிடிவாதமாக இருந்தனர். அறைக்குள் சமையல் கியாஸ் இருப்பதாகவும், சமையல் கியாஸை திறந்துவிட்டு தீவைத்துக்கொள்வோம் என்றும் மிரட்டினார்கள்.
தீவிரவாதிகள் இதுபோல் வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழகம், ஆந்திரா மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
பொழுது விடிந்தவுடன் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கினார்கள். மேலும், மேலும் போலீஸ் படை குவிக்கப்பட்டது.
புத்தூர் கிராம மக்கள் காலையில் எழுந்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் ஊரைச் சுற்றி இவ்வளவு போலீஸ் படை உள்ளதே என்று ஆச்சரியப்பட்டனர்.
தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரையும் போலீசார் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். தீவிரவாதிகள் இங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்றும், அவர்களை பிடிக்கும்வரை யாரும் இங்கு வரக்கூடாது என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். போலீசாரின் இந்த எச்சரிக்கையால், புத்தூர் கிராமமே பதற்றமும், பீதியும் அடைந்து வீடுகளைவிட்டு வெளியேறினார்கள்.
இதற்கிடையில், இந்த தகவல் தெரிந்து பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் நூற்றுக்கணக்கில் குவிந்து புத்தூர் கிராமத்தை முற்றுகையிட்டனர். அடுத்து என்ன நடக்குமோ? என்ற பயங்கர பீதி அங்கு நிலவியது.
போலீஸ் அதிகாரிகள் வீட்டுக்கு வெளியில் நின்று தீவிரவாதிகளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். ஆனால், தீவிரவாதிகள் நாங்கள் செத்து மடிவோமே தவிர, வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தனர்.
இதற்கிடையில், தீவிரவாதிகளை பிடிப்பதில் திறமைவாய்ந்த ஆக்டோபஸ் எனப்படும் ஆந்திர மாநில கமாண்டோ போலீஸ் படையினர் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
புத்திசாலித்தனமாக செயல்பட்டு, 2 தீவிரவாதிகளும் அவர்களோடு இருக்கும் பெண் மற்றும் குழந்தைகளையும் நல்லபடியாக மீட்கும் முயற்சியில் போலீஸ் அதிகாரிகள் இறங்கினார்கள். புதிய வியூகம் வகுக்கப்பட்டது.
புதிய வியூகத்தின்படி, தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டின் மேற்கூரையில் ஒரு பெரிய துவாரம் போடப்பட்டது. அந்த துவாரத்தின் வழியாக தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் அறைக்குள் போலீசார் ஒரு கேமராவை இறக்கி பார்த்தனர். அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை வெளியில் இருந்து டி.வி. மானிடரில் போலீசார் பார்த்தனர். கேமரா மூலம் பார்த்தபோது, வீட்டுக்குள் பெரிய அளவில் வெடிகுண்டு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. கேமரா வழியாக பார்ப்பதை தீவிரவாதிகள் தெரிந்துகொண்டு, கேமராவை உடைத்துவிட்டனர்.
அடுத்தகட்டமாக தீவிரவாதிகள் பதுங்கியிருந்த அறைக்குள் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வெடிக்க செய்தனர். இதன்மூலம் தீவிரவாதிகளுக்கும், அவர்களோடு இருந்த இளம்பெண் மற்றும் குழந்தைகளுக்கும் கண்கள் எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதை தாங்கமுடியாமல், தீவிரவாதிகளோடு இருந்த இளம் பெண்ணும், 3 குழந்தைகளும் முதல்கட்டமாக கதவை திறந்துகொண்டு வெளியே வந்தனர்.
அடுத்தகட்டமாக ஆக்டோபஸ் கமாண்டோ படையினர் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயிலையும், பிலால் மாலிக்கையும் மடக்கிப்பிடித்தனர். பிற்பகல் 3 மணிக்கு இந்த அதிரடி நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
குண்டு காயத்துடன் இருந்த தீவிரவாதி பன்னா இஸ்மாயில் உடனடியாக புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் பிலால் மாலிக் முகத்தை மூடி போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்றனர். மீட்கப்பட்ட பிலால் மாலிக்கின் மனைவி, குழந்தைகள் போலீஸ் பாதுகாப்போடு தமிழகத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களை உறவினர்களிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
...
Show commentsOpen link