Saturday, 5 October 2013

என் வளர்ச்சிக்கு உரமாக இருந்தவர்கள் ரஜினி கமல்! Director barathi raja

என் வளர்ச்சிக்கு உரமாக இருந்தவர்கள் ரஜினி கமல்!

16 வயதினிலே விழாவில் பாரதிராஜா பேச்சு!

by admin
TamilSpyYesterday,

சப்பாணி, பரட்டை, மயிலு என்றதும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் நினைவுகூறத்தக்க ஒரு கலைப்படைப்பை பாரதிராஜா 36 வருடங்களுக்கு முன்பு 16 வயதினிலே என்ற பெயரில் செதுக்கினார்.

ஸ்டூடியோக்களில் ஒரே இடத்தில் நிற்கவைக்கப்பட்டிருந்த கேமராவை கட்டவிழ்த்து கிராமங்களின் வரப்புகளிலும், கோழி ஆடுகளின் பின்பும் ஓடவிட்ட பாரதிராஜா என்ற இயக்குனர் இமயத்தை தமிழ்த்திரையுலகத்திற்குக் கொடுத்த பெருமையைக் கொண்ட 16 வயதினிலே திரைப்படம் டிஜிட்டலில் புதுப்பொலிவுடன் மெருகேற்றப்பட்டிருக்கிறது.

தமிழ்த் திரையுலக வரலாற்றை 16 வயதினிலே திரைப்படத்திற்குப் பின், 16 வயதினிலே திரைப்படத்திற்கு முன் என்று பிரிக்கக் கூடிய அளவிற்கு தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய படம். 16 வயதினிலே திரைப்படத்தின் டிஜிட்டல் பதிப்பின் டிரெய்லர் வெளியீட்டு விழா கமலா திரையரங்கத்தில் இன்று(04.10.13) காலை நடந்தது. பாரதிராஜா,தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கிரன், ரஜினி, கமல், கே.பாக்யராஜ், பார்த்திபன் உட்பட பல திரைநட்சத்திரங்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

பாக்யராஜ் பேசிய போது "ஸ்கூல் பையன் பாஸ் ஆனதும் எப்புடி சந்தோசமா இருப்பானோ அந்த மாதிரி தான் நான் இருக்கேன். என் பேர் முதல் முதலில் டைட்டிலில் வந்த படம் இது. இந்த படத்தை பத்தி எவ்வளவோ சொல்லலாம். கமல்ஹாசன் 'ஆத்தா ஆடு வளத்தா… கோழி வளத்தா… நாய் வளக்கல… இந்த சப்பாணியத்தான் வளத்தா…' டையலாக் சொல்லும்போது செட்டில் இருந்த லைட் பாய் உட்பட எல்லாருமே அழுதுட்டோம்.

ஸ்ரீதேவி, ரஜினி மேல் துப்ப வேண்டிய சீனில். சோப்பு நுரையெல்லாம் வெச்சு ட்ரை பண்ணோம். அதைப் பார்த்துவிட்டு ரஜினி 'ஷாட் நேசுரலா இருக்கனும், நீயே காரி துப்பிடும்மா' என்று உண்மையாகவே துப்ப சொன்னார். அந்த சீன பாக்கும் போது எனக்கு உண்டாகும் உணர்வை வார்த்தைகளில் சொல்லமுடியாது. எனக்கு 16 வயதினிலே படம் தன்னம்பிக்கைக்கு உதாரணமான படமா இன்னைக்கு வரைக்கும் இருக்கு. பல தடைகளைத் தாண்டி கஷ்டப்பட்டு உழைத்து உருவானது 16 வயதினிலே" என்று பேசினார்.

டிரெய்லர் வெளியிட்ட பின்பு ரஜினி பேசியபோது " 36 ஆண்டுகள் ஆன பிறகு 16 வயதினிலே படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது ஆச்சர்யமாக இருக்கிறது. தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு கர்வமானவர் என்று சொல்லக்கூடாது… ரொம்ப கண்ணியமான ஆள். 5 லட்சத்தில் அந்த காலத்தில் படம் எடுப்பது சாதாரணம் இல்லை. அவ்வளவு செலவு செய்து எடுத்து, சரியான விலை வராததால் தைரியமாக அவரே ரிலீஸ் செய்தார்.

கமலுக்கு பிரச்சனை ஏற்பட்ட போது '16 வயதினிலே டிஜிட்டலில் உருவாகிறது. அதில் வரும் லாபத்தை கமலுக்கே கொடுக்கிறேன்' என்று அறிவித்தார். அதன்பிறகு அவரை பார்க்கவேண்டும் என்று இருந்தபோது தான் இந்த விழா பற்றி பேச அவரே வந்தார். நான் அவரிடம் இந்த திரைப்படத்தின் லாபம் யாருக்கு போய் சேரும் என்று கேட்டேன். அவருக்குத் தான் கிடைக்கும் என்று சொன்னார். அவருக்கு நல்லது என்பதால் வருகிறேன் என உடனே சம்மதம் சொன்னேன்.

சினிமாவில் பணம் அதிகமாக இருந்தாலும் சுயமரியாதை அதிகமாக இருந்தால் ரொம்ப கஷ்டம். அவர் வாழ்ந்து கஷ்டப்பட்டவர். கஷ்டம், துன்பம் இதெல்லாம் எப்போதும் நிலையாய் இருக்காது. அவர் நல்லா இருக்கணும்னா இந்த படம் ஒடனும். நீங்க ஓட வைக்கனும். ஓட வைப்பீங்கனு எனக்கு தெரியும். " என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

கமல் பேசியபோது "இந்த திரைப்படத்தின் வெற்றி என்னவென்று தெரியாது. இந்த படத்தில் வேலை செய்தவர்களின் தன்னம்பிக்கையை பார்த்து அன்றும் வியந்தேன் இன்றும் வியக்கிறேன். இவர்களின் உறுதியைப் பார்த்துத்தான் எனக்கு நம்பிக்கை வந்தது. இந்த இயக்குனரை எனக்கு உதவி இயக்குனராக இருந்தபோதிலிருந்தே தெரியும். பாரதிராஜாவைப்போல் ஊரைவிட்டு வந்துவிட்டேன் என்று சொன்னால் கோபம் வரும் எனக்கு. அவர் கஷ்டப்பட்டு தாண்டிய படிகள் எனக்கு தெரியும்.

36 வருடங்கள் கழித்து விழா எடுப்பார்கள் என்று தெரியாமல் 'ஏன் படத்திற்கு விழா எடுக்கவில்லை?' என்று நான் அப்போது சின்னப்பிள்ளைத் தனமாக கேட்டேன். நானும் ஸ்ரீதேவியும் ஸ்லோமோஷனில் ஓடவேண்டிய காட்சி இருந்தது. ஆனால் அப்போது ஸ்லோமோஷனில் எடுக்க வசதி இல்லை. அதற்காக நானும் ஸ்ரீதேவியும் ஸ்லோமோஷனிலேயே நடித்தோம். சித்ராலக்‌ஷ்மணன் படம் ரிலீஸானதும் காரில் வந்த என்னை ஓவர்டேக் செய்து 'கோவனத்தை அவுத்துடாங்க' என்று சொல்லிவிட்டுச் சென்றார். நம்ம கோவணம்னா பரவால்ல பாவம் தயாரிப்பாளர் கோவணம் என்ன செய்வது என்று யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளருக்கு தங்க கிரீடம் வைத்துவிட்டார்கள் ரசிகர்கள்.

இடைத்தரகர்கள் அதிகம் இருந்தும், எனக்கும் ரஜினிக்குமான நட்பு அப்படியே தான் இருக்கிறது. இந்த பெருமை எங்களையே சேரும். எங்கள் நட்பெல்லாம் இவர்கள் செய்த அன்பின் பலன். ஸ்ரீதேவி, ராஜா வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர்கள் வராததால், அவர்கள் சார்பாக நாங்கள் வந்திருக்கிறோம். எனக்கு தனியாக கர்வம் எதுவும் இல்லை. நல்ல நண்பர்கள், நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் நம்பிக்கையில் தான் நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். அவர்கள் தான் என் சக்தி" என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

பாரதிராஜா பேசியபோது "சில நேரங்களில் மனிதன் உணர்ச்சிவசப்படும்போது வார்த்தைகள் வசப்படாது. 36 வருடங்களை நான் திரும்பிப்பார்க்கிறேன். கண்ணாடியில் என் முகத்தை பார்க்கும் போது காலம் என் முகத்தில் வரைந்த கோடுகள் தெரியும். ஆனால் காலம் மாறினாலும் ரஜினி, கமலின் கலை உணர்ச்சிகள் இன்றும் மாறவில்லை. இவர்கள் இந்த நாட்டின் பொக்கிஷங்கள்.

நான் எப்போதும் முதலாளி என்றழைக்கும் எஸ்.ஏ.ராஜ்கண்ணு இன்றும் நல்ல நிலையில் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இசைஞானி, ஸ்ரீதேவி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். புகழின் உச்சியில் இருக்கும் இவர்களை கமல், ரஜினி என்று பெயர் சொல்லி அழைக்காமல் சூப்பர்ஸ்டார், உலகநாயகன் என சொல்லத்தோன்றும். எனக்கு கமல், ரஜினி என்று சொல்ல உரிமை இருப்பதால் இதுவரை சொன்னதில்லை. கமல் பிறக்கும்போது அழுதபோதே கலையுடன் தான் அழுதிருப்பாய்.

இந்த உலகநாயகனோடு எந்த வசதியுமில்லாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தினேன். நானும் ரஜினியும் வராண்டாவில் படுத்து உறங்குவோம். இன்றைய நடிகர்கள் யாரும் அப்படிப்பட்ட வசதியுடன் நடிக்கமாட்டார்கள். பரட்டைக்கு ஆள் தேடியபோது மோட்டார் பைக்கில் படபூஜைக்கு வந்த ரஜினியைப் பார்த்தேன். அதன்பிறகு தேடிப்பிடித்து ரஜினியிடம் கதை சொல்லி, இது அவார்டுக்கான படம் என்று பொய் சொன்னேன். கமலிடம் கோமனத்தில் நடிக்கவேண்டும் என கேட்க கூச்சமாக இருந்தது. அதைக்கண்ட கமல் என்னவென்று விசாரித்து விறுவிறுவென துணியை அவிழ்த்து கோமனத்துடன் நின்றார். கமல் படத்தில் மட்டும் ஹீரோ இல்லை வாழ்க்கையிலும் ஹீரோ.

என்னை ஒரு விதையாக தயாரிப்பாளர் நட்டார். எனக்கு உரமாக இருந்தவர்கள் ரஜினி, கமல், ஸ்ரீதேவி. இன்று ரசிகர்களால் விருச்சகமாக நிற்கிறேன். இதற்கு ரத்தமும் நாளமுமாக இருந்த இசைஞானி இங்கு இல்லை. அவன் இல்லையென்றால் இந்த படத்தின் பெருமை பாதி குறையும். ஒரு பாமரத்தனமாக என்னுடன் பயணப்பட்டவன், இவர்களைப்போல அவனும் இந்த நாட்டின் சொத்து. மேடையில் இல்லையென்றாலும் பாராட்டவேண்டியவன் இசைஞானி.

இவ்வளவு வளர்ச்சிக்குப் பிறகும் என் முதலாளியை கௌரவிக்க வந்ததற்கு ரஜினி, கமலுக்கு நன்றி. 'ஆத்தா ஆடு வளத்தா… கோழி வளத்தா… நாய் வளக்கல… இந்த சப்பாணியத்தான வளத்தா." என்ற வசனத்தை எழுதிய கலைமணி இப்போது இல்லை" என்று உணர்ச்சிபட பேசி, பல வருடங்கள் பின்னோக்கிச் சென்ற நினைவுகளில் பல முறை அழுதுவிட்டார்.

Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger