பொள்ளாச்சி, ஜூன். 14–
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இதன் அருகே ஆதரவற்ற மாணவ–மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 17 மாணவர்கள், 3 மாணவிகள் தங்கியிருந்தனர்.
கடந்த 11–ந் தேதி இரவு இந்த விடுதிக்குள் மர்ம மனிதர்கள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த 10 வயது மற்றும் 11 வயது மாணவிகள் 2 பேரை கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் அவர்களை விடுதி வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு தூக்கிச்சென்று கற்பழித்தனர்.
அந்த மாணவிகள் இருவரும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் கற்பழிக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பல்வேறு சமூக அமைப்புகளும் இந்த கொடூர செயலுக்கு கண்டனம் தெரிவித்தன. குற்றவாளிகளை உடனே கைது செய்யுமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். முதல் கட்டமாக விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.
மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினார்கள்.
பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடையவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொள்ளாச்சி சி.டி.சி. மேடு பகுதியை சேர்ந்த கோபிநாத் (27) என்பவனை பிடித்து விசாரித்தனர்.
அவன் கொடுத்த தகவலின் பேரில் வால்பாறையை சேர்ந்த வீராசாமி (23)யும், அவனது நண்பனும் விடுதிக்கு சென்று மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
வீராசாமியின் போட்டோவை கோபிநாத்திடம் இருந்து பெற்ற போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் 10 வயது மாணவியிடம் போட்டோவை காட்டி விசாரித்த போது தன்னை சீரழித்தவன் இவன் தான் என்று அந்த மாணவி அடையாளம் காட்டினாள்.
இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அரவிந்த் (25), அருண் வெங்கடேஷ் (23), ஹரி (22) ஆகியோர் மீதும் தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேருடன் கோபிநாத்தையும் சேர்த்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இந்த நிலையில் உடுமலை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த ஒருவனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவன் தான் பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த 10 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வீராசாமி என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவனை பொள்ளாச்சி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவனை கைது செய்தனர். பின்னர் அவனை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமி முன்பு நிறுத்தினர். அந்த சிறுமியும் 'இவன் தான் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான்' என்று அடையாளம் காட்டினாள். இதைத்தொடர்ந்து வீராசாமிக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் ஆனைமலை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையங்களில் வீராசாமியிடம் விசாரணை நடைபெற்றது. ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் முன்னிலையிலேயே இந்த விசாரணை நடந்தது. மேலும் தகவல் பெற வேண்டியதுள்ளதால் வீராசாமியை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள்.