இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு டெல்லியில் கூடுகிறது. அதில் தெலுங்கானாவுக்கு ஒப்புதல் பெறப்படும்.
இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி, துணை முதல்– மந்திரி தாமோதர் ராஜா நரசிம்மா, மாநில காங்கிரஸ் தலைவர் போட்சா சத்திய நாராயணா ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்கள் இன்று காலை ஐதராபாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இந்த கூட்டத்தில் தெலுங்கானா பற்றிய அனைத்து அம்சங்களும் விவாக்கப்பட உள்ளது. பிறகு தெலுங்கானா மாநிலம் அமைக்க தீர்மானம் கொண்டு வரப்படும். இதை யடுத்து தெலுங்கானா மாநிலம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் உருவாவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டதால் ஆந்திராவில் இதுவரை இல்லாத அளவுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடலோ ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் நேற்றே பல இடங்களில் போராட்டங்கள் தொடங்கிவிட்டது. மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வீடு முன்பு பொதுமக்களும், மாணவர்களும் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விசாகப்பட்டினத்தில் மத்திய மந்திரி புரந்தேஸ்வரி வீடு முன்பும், எலுருவில் மத்திய மந்திரி கே.எஸ்.ராவ் வீடு முன்பும், விஜயவாடாவில் மத்திய மந்திரி ராஜகோபால் வீடு முன்பும் மாணவர்கள் இன்று ஆயிரக்கணக்கில் திரண்டு ஒன்றுபட்ட ஆந்திரா நீடிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் போராட் டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் ஐதராபாத்திலும் இன்று ஆந்திரா பிரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் வெடித்தது. இதனால் ஆந்திராவில் குறிப்பாக கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் அறிவிப்பு வெளியான பிறகு ஆந்திராவில் போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெறலாம். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை நேரடியாக தலையிட்டு ஆந்திராவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகிறது.
மத்திய உள்துறை மந்திரி சுசீல்குமார் ஷிண்டே ஆந்திரா தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.யை இன்று காலை தொடர்பு கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து ஆந்திராவுக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க ஏற்பாடுள் நடந்து வருகிறது.
ஆந்திராவில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் தவிர ஆந்திராவின் பல பகுதிகளிலும் சுமார் 1200 துணை நிலை ராணுவ வீரர்களை மத்திய அரசு நிறுத்தி இருந்தது. நேற்று கூடுதலாக 1000 ராணுவ வீரர்கள் ஆந்திரா விரைந்தனர்.
கடலோர ஆந்திரா மாவட்டங்களில் போராட்டம் வலுப்பதால் மேலும் 20 கம்பெனி ராணுவப்படை வீரர்கள் ஆந்திராவுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அந்த 20 கம்பெனி படையில் திபெத் எல்லைப் படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதிகளில் முக்கிய நகரங்களில் நிறுத்தப்படுவார்கள்.
ஐதராபாத் நகரில் கர்நாடகா ஆயுதப்படை போலீசார் 200 பேரும், தமிழக ஆயுதப்படை போலீசார் 100 பேரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள முக்கிய நிலை களை பாதுகாக்கும் பொறுப்பு இவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர அதிரடிப்படையும் ஆந்திராவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாகுளம், விஜி நகரம், விசாகப்பட்டினம், கிருஷ்ணா மாவட்டங்களில் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சீமந்திரா மண்டலத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.