சென்னையை சேர்ந்த மாணவி லண்டனில்
மர்மமான முறையில் இறந்தார்.
அவரது உடலை, தந்தை அனுமதி பெறாமல்
லண்டன் போலீசார் பிரேத
பரிசோதனை நடத்தி முடித்து விட்டனர்.
மேலும் சரியான தகவல் தெரிவிக்க
மறுப்பதாகவும் உறவினர்கள் புகார்
தெரிவித்தனர்.
சென்னை அண்ணாநகர்
மேற்கு பாலாஜி நகரை சேர்ந்தவர் தாம்சன்
(வயது 48). இவர், தற்போது முகப்பேர்
கிழக்கு ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்தில்
சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக
பணியாற்றி வருகிறார். இவருடைய
மனைவி சாயிஸ். இவர், கடந்த 1 1/2
ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல்
இறந்து விட்டார்.
இவர்களுக்கு ஜியார்ஜியன்னா(18) என்ற
மகளும், நோர்வெல்(12) என்ற மகனும்
உள்ளனர். இவர்களில் நோர்வெல்,
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார்
பள்ளிக்கூடத்தில் 7-ம்
வகுப்பு படித்து வருகிறான்.
ஜியார்ஜியன்னா, லண்டனில் உள்ள லிவர்புல்
பல்கலைக்கழகத்தில் ஏரோனாட்டிக்கல்
சயின்ஸ் மற்றும் ஸ்பேஸ் சயின்ஸ் எனப்படும்
விண்வெளி அறிவியல் முதலாம்
ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர்,
பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான
விடுதியில் தங்கி, படித்து வந்தார். அந்த
விடுதியில் ஒவ்வொரு மாணவிகளுக்கும்
தனித்தனி அறை ஒதுக்கப்பட்டு அதில்
தங்கி இருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி லிவர்புல்
பல்கலைக்கழகத்தில்
இருந்து தாம்சனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய பல்கலைக்கழக நிர்வாகம்,
உங்கள் மகள் விடுதி அறையில்
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
என தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாம்சன், மறுநாள்
14-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
உறவினர்கள் சிலரும் அவருடன் சென்றனர்.
ஆனால், அவர் லண்டன் போய் சேர்வதற்குள்
ஜியார்ஜியன்னாவின் உடலை லண்டன்
போலீசார் பிரேத
பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
பிரேத பரிசோதனைகள் முடிந்து மகளின்
முகத்தை மட்டும் தாம்சன் பார்க்க முடிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், லண்டன்
போலீசாரிடம், எனது மகளின்
உடலை எனது அனுமதி பெறாமல்
எப்படி பிரேத பரிசோதனை செய்யலாம்.
என்னிடம் கையெழுத்து வாங்காமல் பிரேத
பரிசோதனைக்கு எப்படி அனுப்பலாம்?
என்று கேட்டார்.
அதற்கு லண்டன் போலீசார், அது உங்கள்
நாட்டு சட்டம். ஆனால் எங்கள் நாட்டில்
அது கிடையாது. இன்னும் நிறைய
நடைமுறைகள் உள்ளன. நீங்கள் அடுத்த கட்ட
நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால்தான்
உங்கள் மகள் உடலை விரைவாக நீங்கள்
இந்தியா கொண்டு செல்ல முடியும்.
இல்லை என்றால் மேலும் கால தாமதம் ஆகும்
என்றனர்.
தாம்சன், தனது மகள் எப்படி இறந்தாள்,
தூக்குப்போட்டு தற்கொலையா? விஷம்
குடித்தாளா? என்று தெரிவிக்கும்படி கேட்டார்.
ஆனால் அதற்கு லண்டன் போலீசாரும்,
பல்கலைக்கழக நிர்வாகமும் எந்த பதிலும்
கூறாமல் அடுத்த கட்ட நடவடிக்கையில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி லண்டனுக்கு சென்று உள்ள
ஜியார்ஜியன்னாவின் உறவினரிடம்
தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்,
கூறியதாவது:-
ஜியார்ஜியன்னா தற்கொலை செய்து கொண்டதாக
கூறும் விடுதி அறை மிகவும் குறுகலாக
உள்ளது.
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள
அங்கு எந்த வசதியும் இல்லை. அவர்
உண்மையில் தூக்குப்போட்டு கொண்டாரா?
விஷம் குடித்தாரா?
அல்லது யாராவது அவரை அடித்துக்
கொன்றனரா?
என்று எங்களுக்கு தெரியவில்லை.
இதுபற்றி லண்டன் போலீசார் எங்களிடம் எந்த
தகவலும் தெரிவிக்கவில்லை. அவர்கள்
ஜியார்ஜியன்னா உடலுடன்
எங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதிலேயே குறியாக
உள்ளனர்.
ஜியார்ஜியன்னாவின் சாவில் மர்மம் உள்ளது.
லண்டன் போலீசார் கூறும் பதிலில்
எங்களுக்கு திருப்தி இல்லை.
ஜியார்ஜியன்னா தற்கொலை செய்து கொள்ள
வேண்டிய அவசியமும் இல்லை.
அடிக்கடி எங்களிடம் போனில்
தொடர்பு கொண்டு பேசி வந்தார்.
எங்கள் குடும்பத்தாரிடம் மட்டுமல்லாமல்
லண்டன் பல்கலைக்கழகத்தில் தன்னுடன்
பயிலும் சக மாணவ-மாணவிகளுடனும்
நன்றாகவே பழகி வந்து உள்ளார். இந்தியாவில்
இருந்து சென்றதால்
யாராவது உன்னை கேலி செய்கிறார்களா?
என்று நாங்கள் கேட்ட போது, அப்படி எதுவும்
நடைபெறவில்லை என்றுதான் எங்களிடம்
கூறினார்.
ஜியார்ஜியன்னா திடீர் மரணம்
எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேத பரிசோதனை முடிந்து விட்டாலும்
இன்னும் சில நடைமுறைகள் உள்ளதால்
ஜியார்ஜியன்னா உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல
இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.
இது எங்களுக்கு கூடுதல்
வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
ஜியார்ஜியன்னாவின்
உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கும்,
அவளின் மர்ம சாவு குறித்து லண்டன்
போலீசார் விசாரணை நடத்தவும் மத்திய
அரசு எங்களுக்கு உதவி வழங்க வேண்டும்.
லண்டன் போலீசார் எங்களிடம் எந்த தகவலும்
கொடுக்காமல் கிடுக்கிப்பிடியாக
நடந்து கொள்வதால், தாம்சன் போலீஸ்காரராக
இருந்தும் நாங்கள் ஆதரவின்றி தனியாக
தவித்து வருகிறோம். இதில் மத்திய
அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
[Continue reading...]