Sunday, 3 March 2013

கள்ளக்காதலியின் கணவரிடம் உதை வாங்கிய அமைச்சர்

- 0 comments
கள்ளக்காதலியின் கணவரிடம் உதை வாங்கிய அமைச்சர்


கேரளாவில் இருந்து வெளியாகும் ஒரு மலையாள பத்திரிகையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது. அதில், கேரள அரசில் அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு பெண் ஒருவருடன் கள்ளக்காதல் இருந்தது. இது அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததும் ஆத்திரமடைந்தார். அவர் அந்த அமைச்சரின் வீட்டுக்கு இரவில் சென்று இதுபற்றி கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு மூண்டது. இந்த பிரச்சினையில் அமைச்சரை கள்ளக்காதலியின் கணவர் சரமாரியாக தாக்கினார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று செய்தியில் கூறப்பட்டிருந்தது. பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருக்கும் அமைச்சர் யார்? என்ற கேள்வி கேரளா முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்களிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர். யாரும் இதற்கு பதில் கூறாத நிலையில் கோட்டயத்தில் அரசு கொறடா ஜார்ஜ், நேற்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருக்கும் அமைச்சர் கேரள அரசில் வனம் மற்றும் திரைப்படத்துறை அமைச்சராக இருக்கும் கணேஷ்குமார். பத்திரிகையில் எந்த அமைச்சர் என்று குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டுள்ளனர். இதனால் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மீதும் சந்தேக நிழல்படியும். இதை தவிர்க்கவே கள்ளக்காதலியின் கணவரால் தாக்கப்பட்டவர் அமைச்சர் கணேஷ்குமார்தான் என்பதை உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன். இந்த சம்பவம் 2 நாட்களுக்கு முன்பே எனக்கு தெரியும். இப்போது பத்திரிகைகளில் செய்தி வெளியாகி விட்டதால் இதை நான் வெளிப்படுத்தும் நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு பிறகும் கணேஷ்குமார் அமைச்சர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அரசு கொறடா ஜார்ஜ், கூறியது பற்றி நிருபர்கள் உடனடியாக அமைச்சர் கணேஷ் குமாரை சந்தித்து கருத்து கேட்டனர். அதிர்ச்சி அடைந்த அவர் இதற்கு பதில் அளித்து கூறியதாவது:- என்னைப்பற்றி கொறடா ஜார்ஜ் கூறிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். கேரள அரசில் அமைச்சராக இருக்கும் நான் நேர்மையாக பணி புரிந்து வருகிறேன். வனத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். எனது கடுமையான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டு சேர்ந்து என் மீது சேற்றை வாரி இறைத்து உள்ளனர். இதனை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார். கேரள கூட்டணி ஆட்சியில் கேரள காங்கிரஸ் பி அணியின் சார்பில் அமைச்சர் ஆக்கப்பட்டவர் கணேஷ்குமார். மலையாள நடிகராகவும் உள்ளார். இவரது தந்தை பாலகிருஷ்ண பிள்ளை. இடமலையார் நீர் மின் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக பாலகிருஷ்ண பிள்ளை மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பான ஊழல் வழக்கை விசாரித்த கோர்ட்டு பாலகிருஷ்ண பிள்ளைக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதனால் கடந்த தேர்தலில் பாலகிருஷ்ண பிள்ளை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானது. இதையடுத்து அவரது மகன் கணேஷ்குமார் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாலகிருஷ்ண பிள்ளைக்கு வழங்கவேண்டிய அமைச்சர் பதவி கணேஷ்குமாருக்கு அளிக்கப்பட்டது. கணேஷ் குமார் பதவி ஏற்ற பின்பு தந்தையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணேஷ்குமாரின் அமைச்சர் பதவியை பறிக்க பாலகிருஷ்ண பிள்ளை முயற்சி மேற்கொண்டார். அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இப்போது கணேஷ்குமார் மீது பகிரங்க புகார் கூறிய அரசு கொறடா ஜார்ஜ் கணேஷ்குமாரின் தந்தை பாலகிருஷ்ணபிள்ளைக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. எனவேதான் அவர் கணேஷ் குமார் மீது இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  அமைச்சர் கணேஷ்குமார் மீது கூறப்பட்ட புகார் பற்றி எதிர்க்கட்சி தலைவரும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் கூறியதாவது:- கணேஷ்குமார் பிரச்சினை பற்றி உண்மை நிலவரங்கள் தெரிய வேண்டும். அதை முழுமையாக விசாரித்து அறிந்த பின்பே எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது பற்றியும், கணேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரியும் வலியுறுத்துவோம் என்றார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறும்போது, `அமைச்சர் கணேஷ்குமாருக்கும் ஜார்ஜ்க்கும் இடையே விரோதம் இருப்பதாக அறிகிறோம். அதனால் இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்' என்றார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger