திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு, டிசம்பர் 12-ம் தேதி அரசியல் கட்சியை தொடங்க உள்ளனர் ரஜினி ரசிகர்கள். இதற்கான இறுதிகட்ட பணிகள், 14 மாவட்டங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ரஜினியை அரசியலுக்கு இழுக்க தேசியக் கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவும் சூழலில், ரசிகர்களே அரசியல் கட்சி தொடங் குவது குறித்து விசாரித்த போது, பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன.
செயற்குழு, பொதுக்குழு
திருப்பூரிலுள்ள தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம் மற்றும் மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம் என்பது தமிழக ரஜினி ரசிகர் மன்ற அளவில் குறிப்பிடத்தக்க பெயர்கள். தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக எஸ்.எஸ்.முருகேஷ் உள்ளார். இவரது தலைமையில், 14 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி, செயற் குழு, பொதுக்குழுவைக் கூட்டி அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை, டிசம்பர் 12-ம் தேதி திருப்பூரில் வெளியிட உள்ளனர்.
நலத்திட்டங்களில் வித்தியாசம்
படையப்பா நகர், முத்து நகர், ரஜினிகாந்த் யாத்ரா நகர், எந்திரன் நகர் உள்ளிட்ட ரஜினிகாந்தின் திரைப்படங்கள் பெயர்களில் திருப்பூரில் நகர்கள் உண்டு. அதேபோல், தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில், 100-க்கும் மேற் பட்டோருக்கு வீடு கட்ட காலி இடம் வழங்கப்பட்டுள்ளது. ரஜினி காந்த் பிறந்தநாளையொட்டி, குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குவது, முதியோர் களுக்கு உதவித்தொகை, அரிசி உட்பட பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
கட்சி பெயர், சின்னம் அறிவிப்பு
இந்நிலையில், இளைஞர் அணி, தொழிற்சங்கம், மகளிர் அணி உட்பட 5 உட்பிரிவினரும், அரசியல் கட்சி அறிவிப்புக்கு ஆயத்தமாகி வருகின்றனர். கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட 14 மாவட்ட ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கப் பொறுப்பாளர்கள், திருப்பூரில் கூடி கட்சி மற்றும் சின்னத்தை அறிவிக்க இருக்கின்றனர். இதுதொடர்பாக, தங்களின் விளக்கக் கடிதத்தையும் தலைமைக்கு அனுப்பியுள்ளதாக கூறுகின்றனர்.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் கூறியது:
ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி பொதுத் தொழிலாளர் சங்கத்தை, கட்சியாக அறிவிக்க உள்ளோம்; இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ரஜினிகாந்தின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளமாட்டோம். கட்சி ஆரம்பிப்பது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படியான அனைத்து சான்றுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரஜினியின் படத்தையும், பெயரையும் பயன் படுத்தமாட்டோம் என்றார்.
கடந்த 6 மாதமாக தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திதான் இந்த முடிவு எடுக்கப் பட்டது. கடந்த 30 ஆண்டு களாக செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில், திருப்பூரில் கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல், 32 மாவட்டங் களிலும் கட்சியை விரிவுப்படுத்தும் முனைப்புதான், நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள முதல் பணி. அதை முடித்துவிட்டு, அடுத்த 3 மாதத்துக்குள் முதல் மாநாட்டை, மதுரை அல்லது கோவையில் நடத்தும் திட்டமும் உள்ளது. குறிப்பாக, ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென ஏங்கிக் கிடக்கும், ரசிகர்களுக்கு, அரசியல் இயக்கத்தில் தனி பிரதிநிதித்துவம் அளிக்க வாய்ப்புள்ளது என எஸ்.எஸ்.முருகேஷுக்கு நெருக்கமான வர்கள் கூறுகின்றனர்.
Keywords: திருப்பூர் தலைமையிடம், ரஜினி ரசிகர்கள், அரசியல் கட்சி, டிசம்பர் 12ல் பெயர், கட்சிக் கொடி அறிவிப்பு